பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
பெண் குழந்தைகளின் கல்வி, சமூக, பொருளாதார அதிகாரமளித்தலுக்கு ஒருங்கிணைந்த அணுகுமுறை பின்பற்றப்படுகிறது: மத்திய இணையமைச்சர் திருமதி சாவித்திரி தாகூர் தகவல்
இடுகை இடப்பட்ட நாள்:
29 JUL 2026 3:34PM by PIB Chennai
நாட்டிலுள்ள பெண் குழந்தைகளின் பாதுகாப்புக்கும், அவர்களுக்கு அதிகாரமளிப்பதற்கும் அரசு உயர் முன்னுரிமை அளித்து செயல்பட்டு வருவதாக மத்திய பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் திருமதி சாவித்திரி தாகூர் தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இதனைத் தெரிவித்த அவர், பெண் குழந்தைகளின் கல்வி, சமூக, பொருளாதார மேம்பாட்டிற்காக ஒருங்கிணைந்த அணுகுமுறையை அரசு கையாண்டு வருவதாகக் கூறினார். பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் மூலம் குழந்தை பாலின விகிதம் தேசிய அளவில் 2014-15-ல் 918-லிருந்து 2025-26-ல் 929-ஆக உயர்ந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சமக்ர சிக்ஷா திட்டத்தின் கீழ் 2025-26 வரை நாடு முழுவதும் 31,477 பள்ளிகளில் தொழில்முறை கல்வி கற்பிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டு, 25,181 பள்ளிகளில் 39,49,875 மாணவர்கள் பயனடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார். தகவல் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, ரோபோட்டிக்ஸ், சுகாதாரத் துறை போன்ற வளர்ந்து வரும் துறைகளில் பெண் குழந்தைகள் சிறந்து விளங்க இத்திட்டம் ஊக்குவிக்கிறது. பள்ளிகளில் மாணவிகளுக்குத் தனி கழிப்பறை உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு நிதியுதவி வழங்கி வருவதாக அவர் கூறினார்.
புதிய இந்தியா எழுத்தறிவுத் திட்டத்தின் (உல்லாஸ்) கீழ் இதுவரை 3.36 கோடிக்கும் அதிகமானோர் அடிப்படை எழுத்தறிவுக்கான தேர்வை எழுதியுள்ள நிலையில், அதில் 2.29 கோடிக்கும் அதிகமானோர் பெண்கள் என்று குறிப்பிட்ட அமைச்சர், இதன் பலனாக நாட்டில் பெண்கள் எழுத்தறிவு விகிதம் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 65.46 சதவீதமாக இருந்தது, 2025-ல் 74.9 சதவீதமாக உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2291033®=3&lang=1
****
TV/PD/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2291384)
வருகையாளர் எண்ணிக்கை : 35