அணுசக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நாடாளுமன்றக் கேள்வி: அணுசக்தி உற்பத்தியை அதிகரித்தல்

प्रविष्टि तिथि: 23 JUL 2026 3:58PM by PIB Chennai

2047-ம் ஆண்டிற்குள் 100 ஜிகாவாட் அணுமின் உற்பத்தியை எட்டுவதை இலக்காகக் கொண்டு அறிவிக்கப்பட்ட 'அணுசக்தி திட்டத்தை' முன்னெடுத்துச் செல்லவும், அரசு மற்றும் தனியார் துறைகளின் பரவலான பங்களிப்பை ஊக்குவிக்கவும் சாந்தி சட்டம் 2025 இயற்றப்பட்டுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில், 10,600 மெகாவாட் மொத்த திறன் கொண்ட 13 அணு உலைகள் பல்வேறு கட்ட கட்டுமானப் பணிகளில் இருந்தன. இதில் தமிழ்நாட்டின் கூடங்குளம் அணுமின் நிலையத்தின் 2-வது அலகு - 1000 மெகாவாட், குஜராத்தின் கக்ராபர் - 1400 மெகாவாட் மற்றும் ராஜஸ்தானின் ராவத்பாட்டா - 700 மெகாவாட் ஆகிய இடங்களில் மொத்தம் 3,100 மெகாவாட் திறன் கொண்ட 4 அணு உலைகள் வணிகரீதியிலான உற்பத்தியைத் தொடங்கியுள்ளன.

மீதமுள்ள 7,500 மெகாவாட் திறன் கொண்ட 9 அணு உலைகள், கூடங்குளம் அணுமின் நிலையத்தின் 3, 4, 5, 6 அலகுகள் உட்பட, தீவிர கட்டுமானப் பணியில் உள்ளன. மேலும், ஒரே நேரத்தில் 10 உள்நாட்டு அழுத்த நீர் உலைகளை ஃப்ளீட் முறையில் அமைப்பதற்கும், ரஷ்யாவின் ஒத்துழைப்புடன் கூடங்குளத்தில் 5 மற்றும் 6-வது அலகுகளை அமைப்பதற்கும் நிர்வாக மற்றும் நிதி ஒப்புதல்களை மத்திய அரசு வழங்கியுள்ளது.

பாபா அணு ஆராய்ச்சி மையம் - பார்க் சார்பில் 220 மெகாவாட் பாரத் சிறிய மாடுலார் அணுஉலை - பிஎஸ்எம்ஆர்-200, 55 மெகாவாட் சிறிய மாடுலார் அணுஉலை - எஸ்எம்ஆர்-55 மற்றும் 5 மெகாவாட் உயர் வெப்பநிலை வாயு குளிரூட்டப்பட்ட அணுஉலை - ஹெச்டிஜிசிஆர் ஆகியவை வடிவமைக்கப்பட்டு வருகின்றன. மேலும், தமிழ்நாட்டின் கல்பாக்கத்தில் பாவினி நிறுவனத்தால் உள்நாட்டுத் தொழில்நுட்பத்தில் 500 மெகாவாட் அதிவேகப் பெருக்கு அணுஉலை - பிஎஃப்பிஆர் அமைக்கும் பணிகளும், கூடுதல் 2 அணு உலைகளுக்கான பூர்வாங்கப் பணிகளும் அனுமதிக்கப்பட்டுள்ளன.

இத்தகவலை பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியம், அணுசக்தி மற்றும் விண்வெளித் துறை மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாகத் தெரிவித்தார்.

 

****

TV/EA/SH

 


(रिलीज़ आईडी: 2288669) आगंतुक पटल : 6
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी