மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
தமிழ்நாட்டில் மணலூர், பிள்ளைப்பாக்கத்தில் மின்னணுப் பொருட்கள் உற்பத்தி மையங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது: மத்திய அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
प्रविष्टि तिथि:
22 JUL 2026 3:37PM by PIB Chennai
பிரதமரின் தற்சார்பு இந்தியா தொலைநோக்குப் பார்வையின் கீழ், நாட்டில் மின்னணுப் பொருட்கள், செமிகண்டக்டர் உற்பத்தித் துறையை மேம்படுத்த மத்திய அரசு பல்வேறு சிறப்புத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, தமிழ்நாட்டில் மணலூரில் 474.3 ஏக்கர் பரப்பளவில் ரூ.587.47 கோடி திட்ட மதிப்பிலும், பிள்ளைப்பாக்கத்தில் 379.3 ஏக்கர் பரப்பளவில் ரூ.424.55 கோடி திட்ட மதிப்பிலும் இரண்டு பெரிய மின்னணுப் பொருட்கள் உற்பத்தி மையங்கள் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
மக்களவையில் இது தொடர்பான கேள்விகளுக்கு அளித்த பதிலில் இதனைத் தெரிவித்த மத்திய மின்னணு, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ், தமிழ்நாட்டில் காஞ்சிபுரத்தில் 38, கிருஷ்ணகிரியில் 8, சென்னையில் 6, திருவள்ளூரில் 6, செங்கல்பட்டில் 4 உட்படப் பல்வேறு மாவட்டங்களில் மின்னணுப் பொருட்கள் உற்பத்தி ஆலைகள் அமைக்க மத்திய அரசு ஆதரவளித்ததாகக் குறிப்பிட்டார்.
மேலும், செமிகண்டக்டர் வடிவமைப்பு, தொழில்நுட்பத் திறனை மேம்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் தேர்வு செய்யப்பட்டுள்ள 315 உயர்கல்வி நிறுவனங்களில், சென்னை ஐஐடி, அண்ணா பல்கலைக்கழகம், திருச்சி என்ஐடி, உட்பட தமிழ்நாட்டைச் சேர்ந்த 61 முன்னணிக் கல்வி நிறுவனங்கள் சேர்க்கப்பட்டு நிதிசார், தொழில்நுட்ப ஆதரவுகள் வழங்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.
சென்னையைச் சேர்ந்த அஹீசா டிஜிட்டல், மைண்ட்க்ரோவ் டெக்னாலஜிஸ், இன்கோர் செமிகண்டக்டர்ஸ் உள்ளிட்ட வடிவமைப்பு நிறுவனங்களுக்கும் மத்திய அரசு நிதியுதவி அளித்து ஊக்கப்படுத்தி வருகிறது. இத்துடன், செயற்கை நுண்ணறிவுத் துறையை வலுப்படுத்த தமிழ்நாட்டில் இரண்டு செயற்கை நுண்ணறிவு சிறப்பு மையங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும், கிராமப்புற மக்களுக்கு மின்னணு சேவைகளை வழங்கிட தமிழ்நாட்டில் 18,632 பொது சேவை மையங்கள் சிறப்பாகச் செயல்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2287658®=3&lang=1
***
SS/PD/SH
(रिलीज़ आईडी: 2288105)
आगंतुक पटल : 19