வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
இந்திய நகரங்களில் வெப்ப அலையை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகள்
प्रविष्टि तिथि:
20 JUL 2026 7:24PM by PIB Chennai
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 12-வது அட்டவணையின் படி, நகர்ப்புறத் திட்டமிடல் என்பது மாநில அரசுகள், நகரப்புற அளவில் உள்ள உள்ளாட்சி அமைப்புகள் அல்லது நகர்ப்புற மேம்பாட்டு ஆணையங்களின் அதிகார வரம்பிற்குள் வருகிறது. நகர்ப்புறத் திட்டமிடல் கட்டமைப்பை வலுப்படுத்த, பல்வேறு திட்டங்கள், அறிவுறுத்தல்கள், வழிகாட்டுதல் நெறிமுறைகள், நிதி உதவி, தொழில்நுட்ப ஆதரவு ஆகியவற்றின் மூலம் மாநில அரசுகளின் முயற்சிகளுக்கு மத்திய அரசு உதவுகிறது.
பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் 2019-ல் வெப்ப அலை தடுப்பு, மேலாண்மைக்கான செயல் திட்டத்தைத் தயாரிப்பதற்கான தேசிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை உருவாக்கியுள்ளது. இந்த வழிகாட்டுதல்களின்படி, நகரங்களில், வெப்பத்தால் ஏற்படும் விளைவிற்கான முக்கிய காரணிகளைக் கண்டறிய, பாதிப்பு மதிப்பீடு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
மேலும், வெப்பத்தின் தாக்கத்தைக் குறைப்பதற்கான செயல் திட்டங்களில் உரிய தணிப்பு நடவடிக்கைகளைச் சேர்க்க வேண்டும். இதுவரை 23 மாநிலங்கள், 195 மாவட்டங்கள், 64 நகரங்கள் வெப்பச் செயல் திட்டங்களைத் தயாரித்துள்ளன.
மேலும், இந்திய நகரங்களில் வெப்ப அலைகளின் போது முறைசாராத் தொழிலாளர்களைப் பாதுகாப்பது குறித்து தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவுறுத்தல் சுகாதாரம், பாதுகாப்பு, பாலின உணர்திறன் கொண்ட நடவடிக்கைகள் ஆகியவற்றை விரிவாக விவரிக்கிறது.
நிழல் வசதியுடன் கூடிய விற்பனை மண்டலங்கள், குடிநீர் வசதிகள், குளிர்ச்சியூட்டும் மையங்கள், நெகிழ்வான பணி நேரம், வெப்பம் குறித்த எச்சரிக்கைகளை உரிய நேரத்தில் வழங்குதல் போன்ற நடவடிக்கைகள் மூலம், தெருவோர வியாபாரிகள், திறந்தவெளியில் பணிபுரியும் பிற தொழிலாளர்களின் தேவைகளை வெப்பச் செயல் திட்டங்களில் இணைக்குமாறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2286772®=3&lang=1
****
TV/SV/RJ
(रिलीज़ आईडी: 2286855)
आगंतुक पटल : 10