நிலக்கரி அமைச்சகம்
நிலக்கரி உற்பத்தியில் தன்னிறைவு அடைவதற்கான நடவடிக்கைகள்
प्रविष्टि तिथि:
20 JUL 2026 4:26PM by PIB Chennai
நாட்டில் நிலக்கரி உற்பத்தியை அதிகரிக்கவும், இறக்குமதியைச் சார்ந்திருக்கும் நிலையைக் குறைக்கவும் மத்திய அரசு பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதன்படி, நிலக்கரி சுரங்கங்கள் மேம்பாட்டுப் பணிகளை விரைவுபடுத்த, மத்திய நிலக்கரி அமைச்சகத்தால் மேற்கொள்ளப்படும் தொடர் ஆய்வுகள், அதனுடன் இணைக்கப்பட்ட இறுதிப் பயன்பாட்டு, அனல் மின் உற்பத்தி ஆலைக்கான தேவையைப் பூர்த்தி செய்த பிறகு, சொந்தத் தேவைக்காக, சுரங்க உரிமையாளர்கள் (அணுசக்தி சார்ந்த கனிமங்கள் தவிர) தங்களது வருடாந்திர கனிம (நிலக்கரி உட்பட) உற்பத்தியில் 50% வரை, வெளிச் சந்தையில் விற்பனை செய்ய அனுமதிக்கும் வகையில், சுரங்கங்கள், கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) திருத்தச் சட்டம், 2021 இயற்றப்பட்டுள்ளது.
நிலக்கரிச் சுரங்கங்களின் செயல்பாட்டை விரைவுபடுத்த அதற்கான ஒற்றைச் சாளர அனுமதி வழங்குவதற்கு ஏதுவாக இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
நிலக்கரிச் சுரங்கங்களை விரைவாகச் செயல்பாட்டிற்குக் கொண்டு வருவதற்குத் தேவையான பல்வேறு ஒப்புதல்கள், அனுமதிகளைப் பெறுவதில், சுரங்க ஒதுக்கீடு பெற்றவர்களுக்கு உதவிடும் வகையில், திட்ட மேலாண்மைப் பிரிவு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
வருவாய் பகிர்வு அடிப்படையில், வர்த்தக ரீதியான சுரங்கப் பணிகளுக்கான ஏல நடைமுறைகள், 2020-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. வர்த்தக ரீதியான சுரங்கத் திட்டத்தின் கீழ், திட்டமிடப்பட்ட உற்பத்தித் தேதிக்கு முன்னதாக உற்பத்தி செய்யப்படும் நிலக்கரிக்கு, இறுதி ஏல விலையில் 50% தள்ளுபடி வழங்கப்படுகிறது. மேலும், நிலக்கரி வாயுவாக்கல் அல்லது திரவமாக்கல் நடவடிக்கைகளுக்கு ஊக்கத்தொகைகள் (இறுதி ஏல விலையில் 50% தள்ளுபடி) வழங்கப்பட்டுள்ளன.
வர்த்தக ரீதியிலான நிலக்கரிச் சுரங்கப் பணிகளுக்கான விதிமுறைகள் மிகவும் தாராளமயமாக்கப்பட்டுள்ளன. இதில் நிலக்கரி பயன்பாட்டிற்கான கட்டுப்பாடுகள் எதுவும் விதிக்கப்படவில்லை. புதிய நிறுவனங்கள் ஏல நடைமுறையில் பங்கேற்க அனுமதி வழங்குவது, குறைக்கப்பட்ட முன்பணத் தொகை, மாதாந்திரக் கட்டணத்தில் முன்பணத்தைச் சரிசெய்தல், சுரங்கங்களின் செயல்பாடுகளில் நெகிழ்வுத்தன்மையை ஊக்குவிக்கும் தாராளமான செயல்திறன் அளவுகோல்கள், வெளிப்படையான ஏல நடைமுறை, தானியங்கி வழிமுறை மூலம் 100% நேரடி அந்நிய முதலீடு, தேசிய நிலக்கரி குறியீட்டின் அடிப்படையிலான வருவாய் பகிர்வு மாதிரி ஆகியவை அடங்கும்.
மாநிலங்களவையில், கேள்வி ஒன்றிற்கு, மத்திய நிலக்கரி, சுரங்கத் துறை இணையமைச்சர் திரு சதீஷ் சந்திர துபே இன்று எழுத்துமூலம் அளித்துள்ள பதிலில் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2286594®=3&lang=1
****
TV/SV/RJ
(रिलीज़ आईडी: 2286784)
आगंतुक पटल : 16