ஆயுஷ்
azadi ka amrit mahotsav

பல்லுயிர்ப் பெருக்கத்தைப் பாதுகாப்பதும், பெண் தொழில் வல்லுநர்களுக்கு அதிகாரம் அளிப்பதும் ஆயுர்வேத மருத்துவ முறையின் எதிர்காலத்திற்கு இன்றியமையாதவை: குடியரசுத் தலைவர் திருமதி. திரௌபதி முர்மு

प्रविष्टि तिथि: 15 JUL 2026 6:30PM by PIB Chennai

ஆயுர்வேத அறுவை சிகிச்சை குறித்த மூன்று நாள் சர்வதேசக் கருத்தரங்கை புது தில்லியில் உள்ள அகில இந்திய ஆயுர்வேத நிறுவனத்தில் குடியரசுத் தலைவர் திருமதி. திரௌபதி முர்மு இன்று தொடங்கி வைத்தார்.

மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ், அகில இந்திய ஆயுர்வேத நிறுவனத்தால் சுஷ்ருத ஜெயந்தியை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தக் கருத்தரங்கில், இந்தியா, வெளிநாடுகளைச் சேர்ந்த புகழ்பெற்ற அறுவை சிகிச்சை நிபுணர்கள், ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள் பங்கேற்றனர்.

இந்நிகழ்வில், குடியரசுத் தலைவர்,  அகில இந்திய ஆயுர்வேத நிறுவனத்தில் உள்ள அதிநவீன, செயற்கை நுண்ணறிவு வசதி கொண்ட 3 டெஸ்லா ஹை-ஃபீல்ட் எம்.ஆர்.ஐ. வசதியைத் திறந்து வைத்தார். மேலும், ஆயுர்வேதப் பெண் பட்டதாரிகளின் தொழில் வாழ்க்கை மதிப்பீடு குறித்த ஒரு ஆய்வு என்ற தலைப்பில், இந்திய மருத்துவ முறைக்கான தேசிய ஆணையம் வெளியிட்ட ஆய்வறிக்கையும் வெளியிடப்பட்டது.

இந்தக் கருத்தரங்கில் உரையாற்றிய குடியரசுத் தலைவர், ஆச்சார்ய சுஷ்ருதரின் பங்களிப்புகள், அறிவியல் ரீதியிலான மேம்பாட்டிற்கு அடித்தளம் அமைந்துள்ளன என்று கூறினார். உலகில் உள்ள முறையான அறுவை சிகிச்சை நடைமுறைகள், ஆயுர்வேதத்தின் முழுமையான சுகாதார அணுகுமுறை ஆகியவை நவீன சுகாதாரப் பராமரிப்பில் தொடர்ந்து முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளன என்று அவர் தெரிவித்தார்.

ஆயுர்வேத மருத்துவத்தின் நிலையான வளர்ச்சிக்கு பல்லுயிர்ப் பாதுகாப்பு அவசியம் என்றும், அறிவியல் ரீதியான சரிபார்ப்பு முறைகள் மூலம், பாரம்பரிய அறிவை வலுப்படுத்தும் அதே வேளையில், மருத்துவத் தாவரங்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.

ஆயுர்வேதப் பணியாளர்களில், அதிக அளவிலானப் பங்களிப்புக்கு பெண்கள் முன்வர வேண்டும் என்று குடியரசுத் தலைவர் அழைப்பு விடுத்தார். மேலும், பெண் தொழில் வல்லுநர்கள் நீண்டகால தொழில் வாழ்க்கையை உருவாக்குவதில் உள்ள சவால்களை எதிர்கொள்வதற்கு  ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

உலகளவில் ஆயுர்வேத மருத்துவத்தை ஊக்குவித்ததற்காக மத்திய ஆயுஷ் அமைச்சகத்தைப் பாராட்டிய அவர், பாரம்பரிய அறிவை மேம்பட்ட தொழில்நுட்பங்கள், நவீன நோயறிதல்,  அறிவியல் ஆராய்ச்சிகளுடன் ஒருங்கிணைப்பது இந்த அமைப்பின் நோக்கத்தையும், நம்பகத்தன்மையையும் விரிவுபடுத்துகிறது என்று கூறினார்.

சௌஷ்ருதம் 2026 போன்ற முயற்சிகள், சான்றுகள் அடிப்படையிலான நடைமுறையை மேலும் வலுப்படுத்தி, ஆயுர்வேத மருத்துவ முறையின் உலகளவிலான அணுகுமுறையை  மேம்படுத்தும் என்று திருமதி. திரௌபதி முர்மு நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2285003&reg=3&lang=1

(Release ID: 2285003)

****

TV/SV/SH


(रिलीज़ आईडी: 2285189) आगंतुक पटल : 7
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu