வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
இந்தியா - இங்கிலாந்து விரிவான பொருளாதாரம் மற்றும் வர்த்தக ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தது
प्रविष्टि तिथि:
15 JUL 2026 7:54PM by PIB Chennai
இந்தியா-இங்கிலாந்து இடையிலான விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தம் (சிஇடிஏ) மற்றும் இரட்டைப் பங்களிப்பு ஒப்பந்தம் (டிசிசி) என்று அழைக்கப்படும் சமூகப் பாதுகாப்பு ஒப்பந்தம் ஆகியவை இன்று முதல் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்துள்ளன. இவை, இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதாரக் கூட்டாண்மையில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளன.
சிஇடிஏ ஒப்பந்தம் நடைமுறைக்கு வருவதைக் குறிக்கும் வகையிலான அதிகாரப்பூர்வத் தொடக்க விழா புது தில்லியில் நடைபெற்றது. இதில், இந்தியாவுக்கான இங்கிலாந்து நாட்டின் தூதர் திருமிகு லிண்டி கேமரூன், வர்த்தகத் துறைச் செயலாளர் திரு ராஜேஷ் அகர்வால், வெளிநாட்டு வர்த்தகத் தலைமை இயக்குநர், தொழில் ஏற்றுமதி ஊக்குவிப்பு மன்றங்கள் மற்றும் தொழில் சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
இந்த ஒப்பந்தம் குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல், இந்தியா-இங்கிலாந்து இடையிலான விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தம் மற்றும் சமூகப் பாதுகாப்பு ஒப்பந்தம் ஆகியவை நடைமுறைக்கு வருவது, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் ஒரு முக்கிய மைல்கல் என்று குறிப்பிட்டுள்ளார். பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் நடைமுறைக்கு வந்துள்ள இந்த ஒப்பந்தங்கள், இந்தியாவின் ஏற்றுமதியில் சுமார் 99 சதவீதத்திற்கு வரி இல்லாச் சந்தை அணுகலை வழங்குவதுடன், வர்த்தக மதிப்பில் கிட்டத்தட்ட 100 சதவீதத்தையும் உள்ளடக்கியுள்ளன.
இந்த ஒப்பந்தம் ஜவுளி, தோல், ரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள், பொறியியல் பொருட்கள், கடல்சார் பொருட்கள், ரசாயனங்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு உள்ளிட்ட துறைகளுக்கு முன் எப்போதும் இல்லாத வாய்ப்புகளை உருவாக்குவதுடன், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், விவசாயிகள் மற்றும் உற்பத்தியாளர்களுக்கும் பயனளிக்கும் என்று அமைச்சர் குறிப்பிட்டார். மேலும், இந்த ஒப்பந்தம், இந்தியாவின் தகவல் தொழில்நுட்பம், தொழில்முறைச் சேவைகள், நிதி, கல்வி மற்றும் வணிகச் சேவைகள் ஆகிய துறைகளுக்குப் புதிய வாய்ப்புகளை ஏற்படுத்துவதுடன், இந்தியத் திறமையாளர்களின் பணிசார்ந்த இயக்கத்தையும் விரிவுபடுத்துகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
இங்கிலாந்தில் தற்காலிகப் பணிகளில் ஈடுபட்டுள்ள இந்திய வல்லுநர்களுக்கு ஐந்து ஆண்டுகள் வரை இரட்டை சமூகப் பாதுகாப்பு வரிகளை செலுத்துவதிலிருந்து விலக்கு அளிப்பதன் மூலம், இந்தச் சமூகப் பாதுகாப்பு ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையிலான கூட்டாண்மையை வலுப்படுத்துவதுடன், இந்தியத் தொழிலாளர்களின் உலகளாவிய போட்டித்தன்மையையும் மேம்படுத்துகிறது என்று திரு கோயல் குறிப்பிட்டார். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தத்தை நடைமுறைக்குக் கொண்டுவருவதில் அர்ப்பணிப்புடன் செயல்பட்ட இங்கிலாந்து அமைச்சருக்கும், இரு தரப்பு பேச்சுவார்த்தைக் குழுக்களுக்கும் அவர் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார். அத்துடன், வளர்ச்சி, முதலீடு மற்றும் கூட்டு வளங்களை ஊக்குவிக்கும் வகையிலான, உறுதியான மற்றும் புத்தாக்கத்தை அடிப்படையாகக் கொண்ட கூட்டாண்மையை உருவாக்குவதில் இரு நாடுகளுக்கும் உள்ள கூட்டு அர்ப்பணிப்பையும் அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2285085®=3&lang=1
****
TV/BR/SH
(रिलीज़ आईडी: 2285150)
आगंतुक पटल : 6