சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் ரூ.1,024 கோடி மதிப்பிலான மதுரை வெளிவட்டச் சாலைத் திட்டப் பணிகள் நிறைவுபெற்று போக்குவரத்து தொடக்கம்

प्रविष्टि तिथि: 14 JUL 2026 6:22PM by PIB Chennai

 

பிராந்திய இணைப்பு, நகர்ப்புற உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான முக்கிய நடவடிக்கையாக, தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தேசிய நெடுஞ்சாலை-744A மதுரை வெளிவட்டச் சாலையின் வாடிப்பட்டி - தாமரைப்பட்டி இடையேயான பகுதியை நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணியை நிறைவு செய்துள்ளது. சுமார் 29.960 கிலோமீட்டர் நீளம் கொண்ட, ரூ.1,024.66 கோடி மதிப்பிலான இத்திட்டம் தற்போது போக்குவரத்திற்காகத் திறக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் - மதுரை பகுதி, திருச்சி - மதுரை பகுதி ஆகியவற்றை இணைக்கும் முக்கிய புறவழிச் சாலையாக இது செயல்படும். கனரக, நீண்ட தூர வணிகரீதியான வாகனங்களை நகரின் மையப்பகுதிக்குள் நுழையாமல் திருப்பி விடுவதன் மூலம் மதுரை நகருக்குள் போக்குவரத்து நெரிசல் கணிசமாகக் குறையும். வட மதுரை கிராமங்களுக்கு நேரடி, தடையற்ற இணைப்பும் இதன் மூலம் கிடைக்கும்.

உள்ளூர் மக்கள் எளிதாக அணுகும் வகையில் இத்திட்டத்தில் 2 மேம்பாலங்கள், வாகனங்களுக்கான வழிகள், 4 பெரிய பாலங்கள், 29 சிறிய பாலங்கள், அழகர் கோவில் அருகே இளவன்குளத்தில் நவீன சுங்கச்சாவடி ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நிலையான உள்கட்டமைப்பிற்கான முக்கிய நடவடிக்கையாக, வகுத்துமலை காப்புக்காட்டுப் பகுதியிலிருந்து விலங்குகள் பாதுகாப்பாக, இடையூறின்றி சாலையைக் கடப்பதை உறுதி செய்வதற்காக ஒலித் தடுப்புடன் கூடிய பிரத்யேக வனவிலங்கு மேம்பாலத்தையும் இத்திட்டம் உள்ளடக்கியுள்ளது.

மதுரை நகரின் நெரிசலைக் குறைப்பதுடன், இந்த வெளிவட்டச் சாலை உள்ளூர் பொருளாதாரத்தை மாற்றியமைக்கும். முக்கிய தொழில்துறை பகுதிகள், முக்கிய சுற்றுலா மையங்களை விரைவாக சென்றடைய இது உதவும். பயண நேரம், வாகனப் போக்குவரத்துக்கான செலவு, எரிபொருள் நுகர்வு ஆகியவற்றை இது பெருமளவு குறைக்கும். மேம்பட்ட போக்குவரத்து மேலாண்மை அமைப்பின் கீழ் இந்த முழுச் சாலையும் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும். நகர்ப்புற சாலைகளில் காற்று மாசுபாட்டைக் குறைக்கவும், ஒட்டுமொத்த சாலைப் பாதுகாப்பை மேம்படுத்தவும் இத்திட்டம் வழிவகை செய்கிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2284567&reg=3&lang=1

****

TV/PD/SH

 


(रिलीज़ आईडी: 2284611) आगंतुक पटल : 96
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English