PIB Backgrounder
இந்திய ஜவுளித் துறையில், நிலைத்தன்மையை இணைத்துச் சுழற்சிப் பொருளாதாரத்தை ஊக்குவித்தல்
प्रविष्टि तिथि:
12 JUL 2026 1:46PM by PIB Chennai
இந்தியாவின் ஜவுளி, ஆடைத் தொழில் நீண்ட காலமாக நாட்டின் உற்பத்தி வலிமையின் மையமாக இருந்து வருகிறது. இது இந்தியாவின் பொருளாதாரம், தொழில்துறை உற்பத்தி, ஏற்றுமதி ஆகியவற்றுக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குவதோடு, உலகளாவிய ஜவுளி வர்த்தகத்திலும் ஒரு வலுவான இடத்தைப் பிடித்துள்ளது. மாறிவரும் உலகளாவிய தேவைகளுக்கு ஏற்ப, நிலைத்தன்மை இத்துறையின் வளர்ச்சிக்கு ஒரு முக்கிய உந்துசக்தியாக மாறி வருகிறது. தூய்மையான தொழில்நுட்பங்கள், மறுசுழற்சி, பொறுப்பான கொள்முதல், கழிவு குறைப்பு ஆகியவை இந்திய ஜவுளிகள் சர்வதேச சந்தைகளில் போட்டித்தன்மையுடன் நிலைத்திருக்க உதவும்.
இந்தியாவின் தொழில்துறை வளர்ச்சியின் 'சுழல் சக்கரம்' என்று அடிக்கடி அழைக்கப்படும் ஜவுளி, ஆடைத் துறையானது, உற்பத்திப் பொருளாதாரத்தின் ஒரு முக்கியத் தூணாகும். ஜவுளி, ஆடைகளை ஏற்றுமதி செய்வதில் இந்தியா உலகின் ஆறாவது பெரிய நாடாக திகழ்கிறது. இத்துறை , பல பெண்கள், கிராமப்புறத் தொழிலாளர்கள் உட்பட 45 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு நேரடி வேலைவாய்ப்பையும் வழங்குகிறது.
அதன் பொருளாதார அளவு, ஏற்றுமதித் தொடர்புகள், வேலைவாய்ப்புச் செறிவு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, இத்துறைக்கு நிலைத்தன்மை பெருகிய முறையில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. உலகளாவிய சந்தைகள் சுற்றுச்சூழலுக்குப் பொறுப்பான உற்பத்தியை நோக்கி நகர்ந்து வருவதால், இந்தியாவின் ஜவுளித் தொழில் தனது போட்டித்திறனை வலுப்படுத்திக் கொள்ள ஒரு வாய்ப்பு உள்ளது.
சுழற்சிப் பொருளாதாரம் என்பது, பொருட்கள், வளங்களை மீண்டும் பயன்படுத்தி, மறுசுழற்சி செய்து, நீண்ட காலத்திற்குப் பயன்பாட்டில் வைத்திருக்கும் ஒரு பொருளாதார அமைப்பாகும். இது கழிவுகளையும் மாசு வெளியேற்றத்தையும் குறைக்க உதவுவதோடு, நிலையான உற்பத்தி முறையையும் ஊக்குவிக்கிறது. உள்ளீடுகளின் பயன்பாட்டில் சுழற்சித்தன்மையை உறுதி செய்வதே இதன் அடிப்படைக் கொள்கையாகும்.
ஜவுளித் துறையில், விநியோகச் சங்கிலியின் பாதகமான விளைவுகளைக் குறைப்பதற்கு நிலைத்தன்மையும் சுழற்சிப் பயன்பாடும் முக்கியமானவை.
ஆண்டுதோறும் கையாளப்படும் சுமார் 7.8 மில்லியன் டன் ஜவுளிக் கழிவுகளில், 90%-க்கும் அதிகமானவை , உள்நாட்டு நுகர்வுக்கு முந்தைய (தொழிற்சாலைக் கழிவுகள்), நுகர்வுக்குப் பிந்தைய கழிவுகளிலிருந்தே உருவாகின்றன.
மொத்த ஜவுளிக் கழிவுகளில் 70 சதவீதத்திற்கும் அதிகமானவை தற்போது மீட்கப்பட்டு, மறுசுழற்சி, மேம்பாட்டுச் சுழற்சி, தரமிறக்கச் சுழற்சி அல்லது மறுபயன்பாட்டிற்கு உட்படுத்தப்படுகின்றன.
நூற்புத் துறை, சுற்றுவட்டப் பொருளாதாரத்திற்கு மிகத் தெளிவான எடுத்துக்காட்டுகளில் ஒன்றாகத் திகழ்கிறது. நூற்புக் கழிவுகள் அனைத்தும் ஏறக்குறைய உற்பத்திக்குள் மீண்டும் ஒருங்கிணைக்கப்படுகின்றன.
நுகர்வோர் பயன்பாட்டிற்குப் பிந்தைய ஜவுளிகளிலும் சுழற்சி முறை காணப்படுகிறது. இந்தியாவின் விரிவான சேகரிப்பு, வகைப்படுத்தும் கட்டமைப்பின் மூலம், இந்தக் கழிவுகளில் சுமார் 55% நிலக்குப்பைக் கிடங்குகளுக்குச் செல்வதிலிருந்து திசை திருப்பப்படுகிறது.
நிலையான ஜவுளி உற்பத்திக்கான முன்னோடித் திட்டங்கள்: நிலையான உற்பத்தி, நுகர்வு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக தொடர்ச்சியான முன்னோடித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், அவை உலகளாவிய சிறந்த நடைமுறைகள் தொடர்பான திறனையும் வலுப்படுத்துகின்றன. பாதுகாப்பான ரசாயனங்கள், சுற்றுச்சூழலுக்கு உகந்த ஜவுளிகள், இயற்கை ஜவுளிகள் ஆகியவை அவற்றின் முக்கியக் கவனப் பகுதிகளாகும்.
தொடர்ந்து நடைபெற்று வரும் இந்தத் திட்டம், இந்தியாவின் ஆடை விநியோகச் சங்கிலியிலிருந்து அபாயகரமான ரசாயனங்களை அகற்றுவதையும், நிலையான உற்பத்தி நடைமுறைகளை ஊக்குவிப்பதையும், சுற்றுச்சூழல் அபாயங்களைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
பிரதமரின் ஒருங்கிணைந்த ஜவுளி மண்டலம் மற்றும் ஆடை (மித்ரா) பூங்காக்கள், முதலீடு, வேலைவாய்ப்பு, ஏற்றுமதியை மேம்படுத்துவதற்காக உலகத் தரம் வாய்ந்த, ஒருங்கிணைந்த ஜவுளி மையங்களாகக் கருதப்படுகின்றன.
2027-28-ம் ஆண்டு வரை ₹4,445 கோடி ஒதுக்கீட்டில் ஏழு பிரதமரின் மித்ரா பூங்காக்களின் மேம்பாட்டிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் விருதுநகர்; தெலங்கானாவின் வாரங்கல்; குஜராத்தின் நவசாரி; கர்நாடகாவின் கலபுரகி; மத்தியப் பிரதேசத்தின் தார்; உத்தரப் பிரதேசத்தின் லக்னோ;, மகாராஷ்டிராவின் அமராவதி ஆகிய இடங்களில் மித்ரா பூங்காக்கள் அமைக்கப்படுகின்றன.
டிசம்பர் 2025 நிலவரப்படி, ₹27,434 கோடிக்கும் அதிகமான முதலீடுகளைக் கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன. தேவையான நிலம் முழுமையாகக் கையகப்படுத்தப்பட்டு, அந்தந்த சிறப்பு நிறுவனங்களுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
நிலையான ஆடைகளுக்கான தேவை அதிகரித்து வருவதால், இந்தியாவின் ஜவுளி மறுசுழற்சித் துறை வலுவாக வளரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இத்துறை 2030-ம் ஆண்டுக்குள் 3.5 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த விரைவான வளர்ச்சி, குறிப்பிடத்தக்க வேலைவாய்ப்பு சாத்தியத்தை எடுத்துக்காட்டுகிறது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் இத்துறை சுமார் 1 லட்சம் பசுமை வேலைகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது போன்ற பல்வேறு நடவடிக்கைகள், இந்தியாவின் ஜவுளித் துறையில் நிலைத்தன்மையும் சுழற்சிப் பொருளாதாரமும் எவ்வாறு மேலும் நெருக்கமாகப் பிணைந்து வருகின்றன என்பதைக் காட்டுகின்றன. இது பாரம்பரிய அறிவை நவீன தொழில்துறை மாற்றத்துடன் இணைக்கிறது. இது நாட்டின் மிக முக்கியமான துறைகளில் ஒன்றான இத்துறையில், போட்டித்திறனையும் சுற்றுச்சூழல் மீள்திறனையும் வலுப்படுத்துகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2283837®=48&lang=1
****
TV/PLM/RJ
(रिलीज़ आईडी: 2283887)
आगंतुक पटल : 6