பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையின் முக்கிய காரணியாக இந்தியா திகழ்கிறது: மத்திய அமைச்சர் திரு ராஜ்நாத் சிங்

प्रविष्टि तिथि: 10 JUL 2026 9:01PM by PIB Chennai

"இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு உத்தரவாதம் அளிப்பதில் இந்தியா முக்கிய காரணியாக திகழ்கிறது" என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். சிக்கலான உலகளாவிய பாதுகாப்புச் சூழலுக்கு மத்தியிலும் நாட்டின் கடல்சார் நலன்களைப் பாதுகாத்து, மூவண்ணக் கொடியை உயர்த்திப் பிடித்ததற்காக இந்தியக் கடற்படையை அவர் பாராட்டினார். 'ப்ராஜெக்ட் 17ஏ'-வின் கீழ் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஆறாவது மறைந்திருந்து தாக்கும் போர்க்கப்பலான மகேந்திரகிரி  இந்தியக் கடற்படையில் இணைக்கப்படுவதற்கு முந்தைய நாள், ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கடற்படை வீரர்களிடையே உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 

இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பாதுகாப்பு அமைச்சர், இந்தியாவின் வர்த்தகத்தில் 90 சதவீதத்திற்கும் அதிகமானவை கடல்வழிப் பாதைகள் மூலம் மேற்கொள்ளப்படுவதைச் சுட்டிக்காட்டினார். மேலும், நாட்டின் எரிசக்திப் பாதுகாப்பு, பிரத்யேகப் பொருளாதார மண்டலம் மற்றும் தீவுப் பகுதிகள் ஆகியவற்றால் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், தேசிய நலன்களுக்கும் கடல்சார் பாதுகாப்பு மிக முக்கியமானதாக மாறியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். அதிகரித்து வரும் புவிசார் அரசியல் போட்டி மற்றும் இந்தப் பிராந்தியத்திற்கு வெளியேயுள்ள சக்திகளின் அதிகரித்த இருப்பு ஆகியவை, கடல்சார் கண்காணிப்பை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்த்தியுள்ளன என்று அவர் வலியுறுத்தினார். "இத்தகைய சூழலில், இந்தியக் கடற்படை, இந்தியாவின் கடல் எல்லைகளைப் பாதுகாப்பதுடன், முக்கியமான கடல்வழிப் பாதைகளைப் பாதுகாத்து, பிராந்தியம் முழுவதும் நாட்டின் நலன்களை நிலைநாட்டி வருகிறது," என்று அமைச்சர் கூறினார்.

 

தன்னிறைவு அடைவதை நோக்கிய முன்னேற்றத்தை வலியுறுத்திய திரு ராஜ்நாத் சிங், மகேந்திரகிரி கப்பல் சேவையில் இணைக்கப்படுவதை இந்தியாவின் வளர்ந்து வரும் உள்நாட்டுப் பாதுகாப்புத் திறன்களுக்கு மற்றொரு சிறந்த எடுத்துக்காட்டாகக் குறிப்பிட்டார். அச்சுறுத்தல்கள் மற்றும் சவால்களிலிருந்து நாட்டைப் பாதுகாப்பதில் பாதுகாப்புப் படைகளின் வீரம், அர்ப்பணிப்பு மற்றும் தேசபக்தி ஆகியவற்றின் பங்கைப் பாராட்டிய அவர், அதே வேளையில், வீரர்கள் தங்கள் திறன்களைத் தொடர்ந்து மேம்படுத்திக்கொள்ளவும், அதிநவீன தொழில்நுட்பங்களில் தேர்ச்சி பெறவும், நவீனப் போரின் மாறிவரும் தன்மையை எதிர்கொள்ளத் தயாராகவும் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2283480&reg=3&lang=1

****

TV/BR/SH


(रिलीज़ आईडी: 2283518) आगंतुक पटल : 11
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Marathi