கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
18 மீட்டர் ஆழம் கொண்ட கப்பல்களைக் கையாளும் திறன் கொண்ட இந்தியாவின் இரண்டாவது முக்கியத் துறைமுகமாக சென்னை காமராஜர் துறைமுகம் உருவெடுத்துள்ளது
प्रविष्टि तिथि:
07 JUL 2026 8:25PM by PIB Chennai
சென்னையில் உள்ள காமராஜர் துறைமுகக் கழகம் (KPL), தனது ஆறாவது கட்டத் தூர்வாரும் திட்டத்தை (Capital Dredging Phase VI) வெற்றிகரமாக நிறைவு செய்ததன் மூலம், பெரிய கப்பல்களைக் கையாளக்கூடிய துறைமுகமாக உருவெடுத்துள்ளது. 18 மீட்டர் ஆழம் கொண்ட இந்தத் துறைமுகத்தில், தற்போது 1,70,000 டன் எடையைத் தாங்கக்கூடிய சரக்குக் கொள்ளளவு கொண்ட கப்பல்களைக் கையாள முடியும். இந்தச் சாதனையின் மூலம், விசாகப்பட்டினம் துறைமுகத்திற்கு அடுத்தபடியாக, 18 மீட்டர் ஆழ வசதியுடன் கூடிய நாட்டின் இரண்டாவது முக்கியத் துறைமுகமாக காமராஜர் துறைமுகம் திகழ்கிறது.
"பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குத் தலைமையின் கீழ், இந்தியாவின் கடல்சார் துறை வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றத்தைக் கண்டு வருகிறது. கடல்சார் இந்தியா தொலைநோக்குப் பார்வை 2030 மற்றும் கடல்சார் அமிர்தக் கால தொலைநோக்குப் பார்வை 2047' ஆகியவற்றின் வழிகாட்டுதலுடன், நாங்கள் உலகத்தரம் வாய்ந்த துறைமுகங்களை உருவாக்கி வருகிறோம். சரக்குகளைக் கையாளும் திறன் மற்றும் போக்குவரத்து கட்டமைப்பை வலுப்படுத்துகிறோம்; உலகளாவிய போட்டித்தன்மையை மேம்படுத்துகிறோம்; அத்துடன் இந்தியாவை ஒரு முன்னணி கடல்சார் நாடாக நிலைநிறுத்தி வருகிறோம். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மற்றும் உலகளாவிய வர்த்தகத்திற்கு உந்துசக்தியாக அமையக்கூடிய, நவீன மற்றும் எதிர்காலத் தேவைகளுக்கு ஏற்ற கடல்சார் உள்கட்டமைப்பை உருவாக்கும் இந்தப் பயணத்தில், 18 மீட்டர் ஆழம் கொண்ட நாட்டின் இரண்டாவது முக்கியத் துறைமுகமாக காமராஜர் துறைமுகம் உருவெடுத்திருப்பது மற்றொரு மைல்கல்லாகும்," என்று மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால் கூறினார்.
காமராஜர் துறைமுகத்தை உலகளவில் மிகப்பெரிய சரக்குக் கப்பல்களைக் கையாளும் நிலைக்கு உயர்த்தும் மத்திய அரசின் தொலைநோக்குப் பார்வையின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்தத் திட்டத்தில், சுமார் ₹440 கோடி முதலீட்டில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. வெளிப்புற அணுகு கால்வாயின் ஆழத்தை 20 மீட்டரிலிருந்து 23 மீட்டராகவும், உட்புற நுழைவு கால்வாயின் ஆழத்தை 19 மீட்டரிலிருந்து 22 மீட்டராகவும் அதிகரித்தல்; 18 மீட்டர் வரை ஆழம் கொண்ட கப்பல்களைக் கையாளும் வகையிலான கப்பல் நிறுத்துமிடங்கள் மற்றும் துறைமுகப் படுகை ஆகியவற்றை மேம்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் இதில் அடங்கும்.
"ஆறாவது கட்டத் தூர்வாரும் திட்டப் பணிகள் வெற்றிகரமாக நிறைவடைந்ததன் மூலம், காமராஜர் துறைமுகம், 1,70,000 டன் எடையைத் தாங்கக்கூடிய பிரம்மாண்டமான சரக்குக் கப்பல்களைக் கையாளும் திறன் கொண்ட, ஆழமான மிதப்புத்திறன் கொண்ட துறைமுகமாக உருமாறியுள்ளது. இந்தச் சாதனை, சரக்குக் கையாளும் திறனை கணிசமாக மேம்படுத்தி, தளவாடச் செலவுகளைக் குறைத்து, வணிகம் செய்வதை எளிதாக்கி, இந்தியாவின் ஏற்றுமதி-இறக்குமதி வர்த்தகத்திற்கான ஒரு முக்கிய நுழைவாயிலாக இந்தத் துறைமுகத்தின் பங்கை வலுப்படுத்தும். இந்தியா ஒரு உலகளாவிய கடல்சார் வல்லரசாக உருவெடுக்கும் பயணத்தை மேலும் வலுப்படுத்தும் இந்த உத்திசார் முக்கியத்துவம் வாய்ந்த திட்டத்தை வழங்கிய காமராஜர் துறைமுகக் கழகக் குழுவினர் அனைவருக்கும் எனது வாழ்த்துகள்," என்று திரு சோனோவால் மேலும் கூறினார்.
மேம்படுத்தப்பட்ட மிதப்புத்திறன், கப்பல் நிறுவனங்கள் பெரிய கப்பல்களைப் பயன்படுத்த வழிவகுக்கும். இதன் விளைவாக, பெருமளவு உற்பத்தி மூலம் சரக்குக் கட்டணங்கள் குறைவதுடன், செயல்பாட்டுத் திறன் மேம்பட்டு, சரக்குகளைக் கையாளும் திறனும் அதிகரிக்கும். இது பிராந்தியத்தின் வர்த்தகத்திற்கு குறிப்பிடத்தக்க பொருளாதாரப் பலன்களை வழங்குவதுடன், உள்நாட்டு மற்றும் சர்வதேச துறைமுகங்களுடன் ஒப்பிடுகையில் துறைமுகத்தின் போட்டித்திறனை வலுப்படுத்தி, இந்தியாவின் ஏற்றுமதி-இறக்குமதி வர்த்தகத்தின் வளர்ந்து வரும் தேவைகளுக்கும் ஆதரவளிக்கும். மொத்த சரக்குகளைக் கையாளும் திறனில் காமராஜர் துறைமுகம் சர்வதேச துறைமுகங்களின் வரிசையில் இடம்பெற்றுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2282243®=48&lang=2
****
TV/BR/SH
(रिलीज़ आईडी: 2282290)
आगंतुक पटल : 15