விவசாயத்துறை அமைச்சகம்
மத்திய அமைச்சர்கள் திரு சிவராஜ் சிங் சவுகான், திரு கிரண் ரிஜிஜு ஆகியோர் அருணாச்சலப் பிரதேசத்தில் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்தனர்
प्रविष्टि तिथि:
01 JUL 2026 7:12PM by PIB Chennai
அருணாச்சலப் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளப் பாதிப்புகளுக்கு மத்தியில், சேதத்தின் அளவை மதிப்பிடுவதற்காக, மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலன் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு சிவராஜ் சிங் சவுகான், மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு மற்றும் அம்மாநில முதலமைச்சர் திரு பெமா காண்டு ஆகியோர் பாதிக்கப்பட்ட பகுதிகளில் விரிவான ஆய்வுகளை மேற்கொண்டனர்.
இந்தப் பயணத்தின்போது, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சந்தித்த திரு சவுகான், அவர்களுடன் நேரில் கலந்துரையாடியதுடன், அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்றும் உறுதியளித்தார். வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து முழுமையான மதிப்பீடு மேற்கொள்ளப்படும் என்று அவர் அறிவித்தார். வீடுகளை இழந்த குடும்பங்களுக்குப் புதிய வீடுகள் கட்டித் தரப்படும் என்றும், அதேவேளையில், விவசாய நிலங்கள், பயிர்கள் மற்றும் கால்நடைகளுக்கு ஏற்பட்ட இழப்புகளும் கணக்கிடப்பட்டு உரிய இழப்பீடு வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உணவு தானியங்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்ட உடனடி நிவாரண உதவிகள் ஏற்கனவே வழங்கப்பட்டு வருவதை அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்ட பிறகு, திரு சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் இட்டாநகரில் நடைபெற்ற உயர்மட்ட ஆய்வுக் கூட்டத்தில் முதலமைச்சர் திரு பெமா காண்டு, மத்திய அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். நிவாரணம் மற்றும் மறுவாழ்வு நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தில் விரிவாக ஆய்வு செய்யப்பட்டன. நிவாரணப் பணிகளில் தொய்வு இருக்கக்கூடாது என்று வலியுறுத்திய திரு சவுகான், இயல்பு நிலையை விரைவாக மீட்டெடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே நெருக்கமான ஒருங்கிணைப்பு இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2280039®=3&lang=1
****
TV/BR/SH
(रिलीज़ आईडी: 2280156)
आगंतुक पटल : 5