PIB Backgrounder
தொழில்முனைவிலிருந்து அதிகாரமளித்தல் வரை: குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் கதை
प्रविष्टि तिथि:
26 JUN 2026 11:24AM by PIB Chennai
கைவினைஞர்கள் மற்றும் கிராமப்புற நிறுவனங்கள் முதல் புத்தாக்க உற்பத்தியாளர்கள் வரை, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்திற்கு உந்துசக்தியாக விளங்குகின்றன. தொடர்ச்சியான சீர்திருத்தங்கள், டிஜிட்டல்மயமாக்கல் மற்றும் இலக்கு சார்ந்த ஆதரவின் மூலம், லட்சக்கணக்கான நிறுவனங்கள் நிதி, தொழில்நுட்பம், திறன்கள் மற்றும் சந்தைகளுக்கான அதிக வசதிகளைப் பெறுகின்றன. வேலைவாய்ப்பு, உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் இத்துறையின் அதிகரிக்கும் பங்களிப்பு, அதன் வளர்ந்து வரும் முக்கியத்துவத்தைக் கோடிட்டுக் காட்டுகிறது. இந்தியா 'வளர்ச்சியடைந்த இந்தியா 2047'-ஐ நோக்கி முன்னேறிச் செல்லும்போது, வேலைவாய்ப்பு, தொழில்முனைவு மற்றும் நிலையான பொருளாதார வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்வதில் இத்துறை தொடர்ந்து முக்கியப் பங்கினை வகிக்கும்.
இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும், நிறுவனங்கள் பல்வேறு வடிவங்களில் காணப்படுகின்றன. அது, தலைமுறை தலைமுறையாகப் பேணப்பட்டு வரும் கைவினைத்திறனைப் பாதுகாக்கும் நெசவாளராகவோ, உலகளாவிய சந்தைகளுக்குச் சேவை செய்யும் சிறு உற்பத்தியாளராகவோ, ஒரு தொழிலைக் கட்டமைக்கும் பெண் தொழில்முனைவோராகவோ, அல்லது புத்தொழில் நிறுவனத்தை உருவாக்கும் இளம் கண்டுபிடிப்பாளராகவோ இருக்கலாம். அளவிலும் துறையிலும் வேறுபட்டிருந்தாலும், உணர்வில் ஒன்றுபட்டிருக்கும் இந்த லட்சக்கணக்கான நிறுவனங்களே, இந்தியாவின் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் சூழலமைப்பிற்கு அடித்தளமாக இருக்கின்றன.
தற்போது, குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் வெறும் வணிக நிறுவனங்கள் மட்டுமல்ல. அவை வேலைவாய்ப்பு, புத்தாக்கம், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி ஆகியவற்றின் உந்துசக்திகளாகத் திகழ்ந்து, இந்தியா முழுவதும் கிராமப்புறங்களிலும், நகர்ப்புறங்களிலும் வாய்ப்புகளை உருவாக்குகின்றன. முறைப்படுத்தல், டிஜிட்டல் மாற்றம் மற்றும் தொடர்ச்சியான கொள்கைத் தலையீடுகளால் உந்தப்பட்டு, இத்துறை தொடர்ந்து விரிவடைந்து வருகிறது. இது, 'தற்சார்பு இந்தியா' மற்றும் 'வளர்ச்சியடைந்த இந்தியா 2047' ஆகிய தொலைநோக்குப் பார்வைகளை முன்னெடுத்துச் செல்வதோடு, பொருளாதாரத்திற்கான தனது பங்களிப்பையும் வலுப்படுத்தி வருகிறது. தொழில்முனைவிலிருந்து அதிகாரமளித்தல் வரை, குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் கதை, இந்தியாவின் வளர்ச்சி மற்றும் மாற்றத்தின் கதையாக மாறிவருகிறது.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியையும் தொழில்துறை மேம்பாட்டையும் முன்னெடுத்துச் செல்வதில் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் முக்கியப் பங்காற்றுகின்றன. பொருளாதாரத்தில் அவற்றின் விரிவடைந்து வரும் பங்களிப்பைப் பிரதிபலிக்கும் வகையில், 2025 ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் வகையில் எம்எஸ்எம்இ-க்கான வரையறையை அரசு திருத்தியுள்ளது. இது, முதலீடு, ஆண்டு விற்றுமுதல் ஆகியவற்றின் அடிப்படையில், கொள்கை ஆதரவிலிருந்து தொடர்ந்து பயனடைவதோடு, நிறுவனங்கள் விரிவடைவதற்கும் அதிக வாய்ப்பை வழங்குகிறது.
2026 ஜனவரி தரவுகளின்படி, இத்துறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 31.1%, உற்பத்தித் துறையில் 35.4% மற்றும் ஏற்றுமதியில் 48.58% பங்களிப்பு செய்கிறது. 38.9 கோடிக்கும் அதிகமானோர் வேலைவாய்ப்பு பெற்றுள்ள நிலையில், விவசாயத்திற்கு அடுத்தபடியாக குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் இரண்டாவது பெரிய வேலைவாய்ப்பு ஆதாரமாகத் திகழ்கின்றன.
பொருளாதாரக் குறியீடுகளுக்கு அப்பால், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் நாடு முழுவதும் துடிப்பான தொழில்முனைவுக் கலாச்சாரத்தை வளர்த்து வருகின்றன. குறிப்பாக, புறநகர் பகுதிகளிலும் கிராமப்புறங்களிலும், இத்துறை முதல் தலைமுறை தொழில்முனைவோர், பெண்கள் தலைமையிலான நிறுவனங்கள் மற்றும் இளைஞர்கள் தலைமையிலான முயற்சிகளுக்கு நுழைவாயிலாக உருவெடுத்துள்ளது. தொடர்ச்சியான சாதகமான சீர்திருத்தங்களால் இந்த மாற்றம் வலுப்படுத்தப்படுகிறது. டிஜிட்டல் கடன் மதிப்பீட்டு மாதிரி, சிட்பி வங்கிக்கு வழங்கப்படும் மேம்படுத்தப்பட்ட பங்கு மூலதன ஆதரவு போன்ற முன்னெடுப்புகள், முறையான நிதியுதவிக்கு அவர்களின் அணுகலை விரிவுபடுத்துகின்றன.
இந்தியாவின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் முன்னேற்றம், தற்போது நடைபெற்று வரும் பெரிய தேசிய மாற்றத்தைப் பிரதிபலிக்கிறது. நிதி, தொழில்நுட்பம், திறன்கள், உள்கட்டமைப்பு மற்றும் சந்தைகளுக்கான அணுகலை விரிவுபடுத்துவது, நிறுவனங்களை அதிக உற்பத்தித்திறன் மிக்கதாகவும், போட்டித்தன்மை வாய்ந்ததாகவும், மீள்திறன் கொண்டதாகவும் மாற உதவுகிறது. இத்துறை தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருவதால், வேலைவாய்ப்பு, புத்தாக்கம் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு அதன் பெருகிவரும் பங்களிப்பு, இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தை மேலும் வலுப்படுத்தும். மேலும், இது அனைவரையும் உள்ளடக்கிய, தற்சார்புள்ள மற்றும் வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான அடித்தளங்களை அமைக்கவும் உதவும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2278107®=3&lang=1
****
TV/SMB/SH
(रिलीज़ आईडी: 2278142)
आगंतुक पटल : 18