வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
பிரதமரின் நகர்ப்புற வீட்டுவசதித் திட்டம் 2.0-ன் கீழ், 2.13 லட்சத்திற்கும் அதிகமான கூடுதல் வீடுகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது
प्रविष्टि तिथि:
17 JUN 2026 6:40PM by PIB Chennai
'அனைவருக்கும் வீடு' என்ற இயக்கத்திற்கு வலுசேர்க்கும் வகையில், தகுதியுள்ள நகர்ப்புற ஏழைக் குடும்பங்களுக்கான 2.13 லட்சத்திற்கும் அதிகமான வீடுகளுக்கு பிரதமரின் நகர்ப்புற வீட்டுவசதித் திட்டம் 2.0-ன் கீழ், ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
புதுதில்லியில் உள்ள சங்கல்ப் மாளிகையில் ஜூன் 17, 2026 அன்று நடைபெற்ற மத்திய அனுமதி மற்றும் கண்காணிப்புக் குழுவின் 7-வது கூட்டத்தில், இதற்கான அனுமதி வழங்கப்பட்டது.
மத்திய வீட்டுவசதித் துறை செயலாளர் திரு. ஸ்ரீனிவாஸ் கதிகித்தலா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், திட்டத்தின் இணைச் செயலாளரும், இயக்குநருமான திரு. குல்தீப் நாராயண், இணைச் செயலாளரும் நிதி ஆலோசகருமான திரு. சஞ்சீத், அனைவருக்கும் வீடு திட்டத்தின் துணைத் தலைமை இயக்குநர் திரு. ஆர்.கே. கௌதம், அமைச்சகத்தின் பிற மூத்த அதிகாரிகள், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் இயக்குநர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அண்மையில் வழங்கப்பட்டுள்ள அனுமதிகளுடன் சேர்த்து, இந்தத் திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட வீடுகளின் மொத்த எண்ணிக்கை 16.13 லட்சத்தைக் கடந்துள்ளது. இது நாடு முழுவதும் அடிப்படை வசதிகளுடன் கூடிய மலிவு விலை வீடுகளை வழங்கும் திட்டத்தை விரைவுபடுத்துவதாக உள்ளது. நகர்ப்புற இந்தியாவில் வசிக்கும் ஏழைக் குடும்பங்களுக்கு மலிவு விலையில், கண்ணியமான வீடுகள் கிடைப்பதை விரிவுபடுத்துவதில் ஏற்பட்டுள்ள தொடர் முன்னேற்றத்தை இந்த ஒப்புதல் எடுத்துக்காட்டுகிறது.
ஆந்திரப் பிரதேசம், அசாம், பீகார், சத்தீஸ்கர், குஜராத், ஹரியானா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், மிசோரம், மேகாலயா, நாகாலாந்து, ஒடிசா, ராஜஸ்தான், தெலுங்கானா, திரிபுரா மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய 16 மாநிலங்களில், இத்திட்டத்தின் கீழ், பயனாளிகள் தலைமையிலான கட்டுமானம் என்ற பிரிவின் கீழ், 1.89 லட்சம் வீடுகளுக்கும், 'கூட்டு முயற்சியில் மலிவு விலை வீடுகள்' என்ற பிரிவின் கீழ், 23,602 வீடுகளுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2274164®=3&lang=1
(Release ID: 2274164)
****
TV/SV/SH
(रिलीज़ आईडी: 2274336)
आगंतुक पटल : 8