நித்தி ஆயோக்
பிரதமர் தலைமையில் நிதி ஆயோக்கின் 11-வது நிர்வாகக் குழு கூட்டம்
வளர்ச்சியடைந்த இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வை ஒவ்வொரு மாநிலம், மாவட்டம், தொகுதி மற்றும் கிராமத்தின் கூட்டு உறுதிமொழியாக மாற வேண்டும்: பிரதமர்
அனைத்து மாநிலங்கள் மற்றும் 5 யூனியன் பிரதேசங்களின் பிரதிநிதிகளும் கூட்டத்தில் பங்கேற்பு; முதல் முறையாக 28 மாநிலங்களின் முதலமைச்சர்களும் கலந்து கொண்டனர்
प्रविष्टि तिथि:
11 JUN 2026 7:35PM by PIB Chennai
புதுதில்லியில் உள்ள குடியரசுத்தலைவர் மாளிகையின் கலாச்சார மையத்தில், நிதி ஆயோக்கின் 11-வது நிர்வாகக் குழு கூட்டம் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்றது. 'வளர்ச்சியடைந்த இந்தியா @ 2047-க்கான அனைவரையும் உள்ளடக்கிய மனித குல மேம்பாடு' என்ற கருப்பொருளில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் 28 மாநிலங்கள் மற்றும் 5 யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த முதலமைச்சர்கள், துணைநிலை ஆளுநர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். நிதி ஆயோக்கின் நிர்வாகக் குழு கூட்டத்தில் 28 மாநிலங்களின் முதலமைச்சர்களும் பங்கேற்றது இதுவே முதல் முறையாகும்.
கூட்டத்தில் பேசிய பிரதமர், பல்வேறு முக்கியப் பொருளாதாரங்கள், நிச்சயமற்ற தன்மையையும் பொருளாதாரச் சவால்களையும் எதிர்கொண்டுள்ள வேளையில், இந்தியாவின் வளர்ச்சிப் பயணம் தொடர்ந்து உலகிற்கு உத்வேகம் அளிப்பதாகக் குறிப்பிட்டார். தற்சார்பை நோக்கிய நாட்டின் உறுதியை மேலும் வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய அவர், குறிப்பாகப் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் உலக அளவில் பின்பற்றப்படும் சிறந்த நடைமுறைகளைக் கடைப்பிடித்துச் செயல்படுத்துவதன் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டினார்.
கூட்டுறவு கூட்டாட்சியின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பிரதமர், 'வளர்ச்சியடைந்த இந்தியா’ என்ற இலக்கை அடைவதற்கு மத்திய அரசும் மாநில அரசுகளும் இணைந்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இந்தத் தொலைநோக்குப் பார்வை, ஒவ்வொரு மாநிலம், மாவட்டம், வட்டாரம் மற்றும் கிராமத்தின் கூட்டு உறுதிப்பாடாக மாற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
பல்வேறு நாடுகளுடன் இந்தியா அண்மையில் மேற்கொண்ட வர்த்தக ஒப்பந்தங்களைக் குறிப்பிட்டுப் பேசிய பிரதமர், இளைஞர்கள் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு (எம்எஸ்எம்இ) வாய்ப்புகளை உருவாக்கவும், இந்த ஒப்பந்தங்கள் மூலம் கிடைக்கும் பலன்களைத் திறம்படப் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் சம்பந்தப்பட்ட தரப்பினரைத் தயார்படுத்தவும் மாநிலங்களை ஊக்குவித்தார். மேலும், நட்பு நாடுகளிலிருந்து முதலீடுகளைத் தீவிரமாக ஈர்க்குமாறும் அவர் மாநிலங்களை வலியுறுத்தினார்.
போதைப்பொருள் பயன்பாடு மற்றும் இணையவழி மோசடி போன்ற வளர்ந்து வரும் சமூகச் சவால்களைத் தடுப்பு நடவடிக்கைகள், விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள் மற்றும் திறமையான நிர்வாகம் ஆகியவற்றின் மூலம் எதிர்கொள்ள ஒருங்கிணைந்த முயற்சிகள் தேவை என்று அவர் வலியுறுத்தினார்.
மேலும், 'எல் நினோ' சூழலால் எழுந்துள்ள கவலைகள் குறித்தும் பேசிய பிரதமர், நீர் சேமிப்பை ஊக்குவிக்குமாறும், இயற்கை விவசாய முறைகளைப் பின்பற்றுமாறும் மாநிலங்களைக் கேட்டுக்கொண்டார். நடப்பு காரீப் பருவத்தில் விவசாயிகள் 11 லட்சம் டன் இயற்கை உரங்களை வாங்கியிருப்பது, நிலையான விவசாயத்தின் மீதான வளர்ந்து வரும் நம்பிக்கையை வெளிப்படுத்துவதாக அவர் குறிப்பிட்டார்.
கண்காணிப்புக் கட்டமைப்பின் அவசியத்தை வலியுறுத்திய பிரதமர், 2047-ல் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்கும் தொலைநோக்குப் பார்வையை அடைவதற்காக 100 நாள் மற்றும் ஐந்தாண்டு இலக்குகளை நிர்ணயித்தார்.
முதலீடுகளை ஈர்ப்பதற்கு நல்லாட்சி, வெளிப்படைத்தன்மை மற்றும் உள்கட்டமைப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த அவர், பிராண்டிங், எளிதாக வர்த்தகம் மேற்கொள்ளுதல் மற்றும் தரவு மையங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்ற வளர்ந்து வரும் துறைகளில் உள்ள வாய்ப்புகள் ஆகியவற்றில் கவனம் செலுத்துமாறு மாநிலங்களுக்குக் கோரிக்கை விடுத்தார். செயற்கை நுண்ணறிவை ஒரு வாய்ப்பாகக் கருத வேண்டும் என்றும், எதிர்காலப் பொருளாதாரத்திற்குத் தேவையான திறன்களை மக்களுக்கு வழங்குவதற்கு குறிப்பிடத்தக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2271821®=3&lang=1
***
TV/BR/SE
(रिलीज़ आईडी: 2271909)
आगंतुक पटल : 14