சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

இந்திய தர நிர்ணய அமைவனம் சார்பில் ‘மானக் மந்தன்’ நிகழ்ச்சி நடைபெற்றது

இடுகை இடப்பட்ட நாள்: 04 JUN 2026 7:55PM by PIB Chennai

 

நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்தியாவின் தேசிய தரநிலை அமைப்பான இந்திய தர நிர்ணய அமைவனம் (Bureau of Indian Standards – BIS), பாலிவினைல் குளோரைடு (PVC) காப்பிடப்பட்ட உறையற்ற மற்றும் உறையுடைய, திட மற்றும் நெகிழ்வான கடத்திகளைக் கொண்ட, 1100 வோல்ட் வரை மதிப்பிடப்பட்ட மின்னழுத்தத்திற்கான மின்கம்பிகள் மற்றும் கம்பிவடங்கள் (PVC Insulated Cables and Cords) தொடர்பான வரைவு இந்திய தரநிலை IS 694 குறித்து, 2026 ஜூன் 4 அன்று சென்னை தரமணியில் அமைந்துள்ள BIS தென் மண்டல அலுவலக வளாகத்தில் ‘மானக் மந்தன்’ நிகழ்ச்சியை நடத்தியது.

பிஐஎஸ் சென்னை கிளை அலுவலகத்தின் விஞ்ஞானி–F / மூத்த இயக்குனர் மற்றும் தலைவருமான திரு. S.D. தயானந்த் வரவேற்புரையை வழங்கி, தரநிலையாக்கம், தர உறுதி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு முயற்சிகள் மூலம் நாட்டின் வளர்ச்சியில் BIS ஆற்றிவரும் முக்கிய பங்கை எடுத்துரைத்தார். “வலுவான தரநிலைகள், சான்றளிப்பு அமைப்புகள் மற்றும் செயல் பங்காளர் பங்கேற்பு முயற்சிகள் மூலம் நாட்டின் தரச் சூழலை வலுப்படுத்துவதில் BIS தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. ‘மானக் மந்தன்’ போன்ற நிகழ்ச்சிகள் தொழில்துறைகள், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் நுகர்வோருக்கு தரநிலைகள் உருவாக்கும் செயல்முறையில் நேரடியாக பங்கேற்கும் வாய்ப்பை வழங்குகின்றன. இது தர உணர்வு மிக்க மற்றும் தற்சார்பு இந்தியா உருவாகும் நோக்கிற்கு பங்களிக்கிறது” என அவர் தெரிவித்தார்.

இந்திய தர நிர்ணய அமைவனத்தின் தென் மண்டல துணை தலைமை இயக்குனர்  மற்றும் விஞ்ஞானி–F, திரு. சந்தீப் குமார் கனோஜியா, நிகழ்ச்சியில் உரையாற்றி, இந்திய தரநிலைகள் உற்பத்தியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், தொழில்துறை அமைப்புகள், நுகர்வோர் மற்றும் பிற செயல் பங்காளர்களின் பங்களிப்புடன் வெளிப்படையான மற்றும் ஆலோசனை அடிப்படையிலான செயல்முறையின் மூலம் உருவாக்கப்படுகின்றன என்றும், இதன் மூலம் அவை நடைமுறைக்கு ஏற்றதாகவும் பயனாளர்களின் தேவைகளுக்கு ஏற்ப அமைந்ததாகவும் இருப்பதை உறுதி செய்கின்றன என்றும் குறிப்பிட்டார். IS 694 வரைவு தரநிலையின் திருத்த முன்மொழிவுகளை செயல் பங்காளர்கள் கவனமாக ஆய்வு செய்து, தங்களது கருத்துகள், பரிந்துரைகள் மற்றும் தொழில்நுட்ப பின்னூட்டங்களை BIS Standards Development Portal (www.manakonline.in மற்றும் www.standards.bis.gov.in) அல்லது cnbo1@bis.gov.in என்ற மின்னஞ்சல் முகவரி மூலம் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் சமர்ப்பிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார். மேலும், தொழில்துறை மற்றும் நுகர்வோர் தேவைகளை பூர்த்தி செய்யும் வலுவான மற்றும் சமகால தரநிலைகளை உருவாக்குவதில் செயல் பங்காளர்களின் பங்களிப்பு முக்கியமானது என்றும் அவர் வலியுறுத்தினார்.

IS 694 வரைவு இந்திய தரநிலையின் தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் பிஐஎஸ் முன்னெடுப்புகள், e-BIS சேவைகள் குறித்த அமர்வை BIS சென்னை கிளை அலுவலகத்தின் விஞ்ஞானி–C / துணை இயக்குனர் திரு. சாய் சந்திரா வழிநடத்தினார். வரைவு தரநிலையின் நோக்கம் மற்றும் முக்கிய அம்சங்கள், பிவிசி காப்பிடப்பட்ட மின்கம்பிகள் மற்றும் கம்பிவடங்களின் கட்டமைப்பு, செயல்திறன் மற்றும் பாதுகாப்பு தொடர்பான தேவைகள் ஆகியவற்றை அவர் விரிவாக விளக்கினார். மேலும், தயாரிப்புகளின் தரம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பை உறுதி செய்வதில் இந்திய தரநிலைகளுக்கு இணங்க செயல்படுவதன் அவசியத்தையும் எடுத்துரைத்தார். e-BIS தளத்தின் மூலம் கிடைக்கும் பல்வேறு டிஜிட்டல் சேவைகள் குறித்தும் பங்கேற்பாளர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.

பின்னர் நடைபெற்ற ஆலோசனை மற்றும் கருத்துப் பகிர்வு அமர்வில், பங்கேற்பாளர்கள் அதிகாரிகளுடன் கலந்துரையாடி, வரைவு தரநிலை தொடர்பான தங்களது கருத்துகள், பரிந்துரைகளை பகிர்ந்து கொண்டனர். மேலும், ஐஎஸ்ஐ முத்திரை, ஹால்மார்க் உண்மைத்தன்மையை BIS Care செயலி, பிஐஎஸ் இணையதளம் மூலம் சரிபார்க்குமாறும் நுகர்வோர்கள் மற்றும் தொழில்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டது.

****

TV/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2269049) வருகையாளர் எண்ணிக்கை : 59
இந்த வெளியீட்டை படிக்க: English