சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
பிஐஎஸ் சார்பில் ஸ்டார்ட்-அப் மற்றும் எம்எஸ்எம்இ-களுக்கான சந்திப்பு நிகழ்ச்சி
இடுகை இடப்பட்ட நாள்:
26 MAY 2026 10:14PM by PIB Chennai
இந்திய தர நிர்ணய அமைவனம் (BIS), ஸ்டார்ட்-அப்கள் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களிடையே (MSME) தரநிலைகள், தரம் மற்றும் இணக்க மதிப்பீடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக தொடர்ந்து பல்வேறு தொழில் தொடர்பு மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது.

அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு அரசின் முன்முயற்சியான iTamil Nadu Technology (iTNT) Hub உடன் இணைந்து, “தமிழ்நாட்டிலுள்ள டீப் டெக் மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்ப ஸ்டார்ட்-அப் மற்றும் எம்எஸ்எம்இ சந்திப்பு” என்ற நிகழ்ச்சியை 26 மே 2026 அன்று சென்னை, அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடத்தியது.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியின் நோக்கம், டீப் டெக் மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்ப துறைகளில் செயல்படும் ஸ்டார்ட்-அப்கள், புதுமையாளர்கள் மற்றும் MSMEகளுக்கு இந்திய தரநிலைகள் மற்றும் BIS சான்றளிப்பின் முக்கியத்துவத்தை விளக்குவது, தயாரிப்புகளை வணிகரீதியாக அறிமுகப்படுத்துதல், தரத்தை உறுதி செய்தல், நுகர்வோர் நம்பிக்கையை மேம்படுத்துதல் மற்றும் சந்தை அணுகலை எளிதாக்குதல் ஆகியவற்றில் அவை வழங்கும் பங்களிப்பை எடுத்துரைப்பதாகும்.

நிகழ்ச்சியில் சென்னை கிளை அலுவலக இயக்குனர் முனி நாராயணா பேசுகையில், ஸ்டார்ட்-அப்கள் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை ஆதரிப்பதற்காக பிஐஎஸ் மேற்கொண்டு வரும் எளிமைப்படுத்தப்பட்ட சான்றளிப்பு நடைமுறைகள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், தொழில்நுட்ப வழிகாட்டுதல் மற்றும் பங்குதாரர் ஈடுபாட்டு நடவடிக்கைகள் குறித்து அவர் விளக்கினார். தயாரிப்பு மேம்பாட்டின் ஆரம்ப கட்டத்திலேயே தரநிலைகளுடன் இணைந்து செயல்படும் சூழலை உருவாக்க பிஐஎஸ் தீவிரமாக செயல்பட்டு வருவதாகவும், இதன் மூலம் தயாரிப்புகளின் தரம், பாதுகாப்பு, நம்பகத்தன்மை மற்றும் சந்தை போட்டித்திறன் மேம்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும், இத்தகைய கூட்டாண்மை நிகழ்ச்சிகள் வளர்ந்து வரும் நிறுவனங்கள் ஒழுங்குமுறை மற்றும் சான்றளிப்பு தேவைகளைப் புரிந்துகொண்டு, தேசிய மற்றும் உலகளாவிய சந்தைகளில் எளிதான அணுகலைப் பெற உதவுவதாகவும் அவர் வலியுறுத்தினார்.

“செயற்கை நுண்ணறிவு தொடர்பான தரநிலைகள்” என்ற தலைப்பில் தொழில்நுட்ப அமர்வை பொறியியல் மேலாளர் திரு சந்திரா எஸ் ஆர் கே, இணைய வழியில் நடத்தினார். இதில், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான பயன்பாடுகளில் தரநிலைப்படுத்தலின் அதிகரித்து வரும் முக்கியத்துவம் எடுத்துரைக்கப்பட்டது.
iTNT துறைகளுக்கு தொடர்புடைய இந்திய தரநிலைகள் குறித்த தொழில்நுட்ப அமர்வை பிஐஎஸ் துணை இயக்குனர் சாய் சந்திரா நடத்தினார். இதில் மின்னணுவியல், மின்சார வாகனங்கள் (EVs), செமிகண்டக்டர்கள், சுகாதாரம், நிலைத்தன்மை, விண்வெளி பயன்பாடுகள் போன்ற துறைகளுக்கு பொருந்தக்கூடிய தரநிலைகள் குறித்து விளக்கப்பட்டது.
பிஐஎஸ் இணை இயக்குனர் தினேஷ் ராஜகோபாலன், எம்எஸ்எம்இ -க்களுக்கான சோதனை வசதிகள் உருவாக்க நிதி உதவி திட்டங்கள் குறித்த அமர்வை வழங்கினார். தேசிய சோதனை மையம் (தெற்கு மண்டலம்) விஞ்ஞானி முரளி, தேசிய சோதனை மையம் வழங்கும் சோதனை மற்றும் தொழில்நுட்ப ஆதரவுகள் குறித்து பங்கேற்பாளர்களிடம் விளக்கினார்.
இந்த நிகழ்ச்சியில், தயாரிப்புகளின் நம்பகத்தன்மை, தரநிலை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பை உறுதி செய்வதில் பி ஐ எஸ் சான்றளிப்பின் பங்கு எடுத்துரைக்கப்பட்டது. மேலும், இந்திய சந்தையில் அறிமுகமாகும் தயாரிப்புகளுக்கான சான்றளிப்பு தேவைகள், நடைமுறைகள், பொருந்துதல்கள் மற்றும் சட்டபூர்வ இணக்கத்தன்மை குறித்த வழிகாட்டுதலும் வழங்கப்பட்டது. பொதுவாக எதிர்கொள்ளப்படும் சான்றளிப்பு சவால்கள் மற்றும் இணக்கத் தேவைகளை திறம்பட பூர்த்தி செய்வதற்கான முறைகள் குறித்தும் பங்கேற்பாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
தமிழ்நாடு முழுவதிலும் இருந்து டீப் டெக் மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்ப துறைகளைச் சேர்ந்த ஸ்டார்ட்-அப்கள், தொழில் முனைவோர்கள், குரு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில் பிரதிநிதிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
***
TV/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2265671)
வருகையாளர் எண்ணிக்கை : 11