தேசிய மனித உரிமைகள் ஆணையம்
azadi ka amrit mahotsav

ஹரியானா ரசாயனத் தொழிற்சாலை வெடிவிபத்தில் மூன்று தொழிலாளர்கள் உயிரிழப்பு: விசாரணை தொடங்கிய தேசிய மனித உரிமைகள் ஆணையம் புதுதில்லி, மே 26, 2026

இடுகை இடப்பட்ட நாள்: 26 MAY 2026 8:29PM by PIB Chennai

ஹரியானா மாநிலம் ரேவாரி மாவட்டத்தில் உள்ள தொழிற்பேட்டையில் அமைந்துள்ள ரசாயனத் தொழிற்சாலையில், மே 19, 2026 அன்று ஏற்பட்ட வெடிவிபத்தில், ஆறு பேர் காயமடைந்ததாக வெளியான ஊடகச் செய்திகளை அடிப்படையாகக் கொண்டு, இந்திய தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளது. இதன்படி, தொழிற்சாலையின் குளிரூட்டும் பிரிவில் பழுதுபார்க்கும் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்த போது இந்த வெடிவிபத்து ஏற்பட்டு, தீ விபத்தாக மாறியுள்ளது. காயமடைந்த தொழிலாளர்களில் ஒருவர், மே 20, 2026 அன்று மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் இரண்டு தொழிலாளர்களின் எஞ்சிய உடல் பாகங்கள் முழுவதும் எரிந்த நிலையில்  தொழிற்சாலையிலிருந்து மீட்கப்பட்டன.

ஊடகச் செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் உண்மையாக இருக்கும் பட்சத்தில், அது பாதிக்கப்பட்டவர்களின் மனித உரிமைகள் மீறல் தொடர்பான கேள்விகளை எழுப்புவதாக ஆணையம்  தெரிவித்துள்ளது. எனவே, இது தொடர்பாக இரண்டு வாரங்களுக்குள் விரிவான அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு, ஹரியானா மாநிலத் தலைமைச் செயலாளர், ரேவாரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. காயமடைந்தவர்களின் தற்போதைய உடல்நிலை குறித்தும், உயிரிழந்தவர்கள், காயமடைந்தவர்களின் வாரிசுதாரர்களுக்கு ஏதேனும் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதா என்பது குறித்தும், அந்த அறிக்கையில் குறிப்பிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஐந்து நாட்களாக வெளியான ஊடகச் செய்திகளின்படி, இந்தத் தொழிற்சாலை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சந்தைகளுக்கான ரசாயனப் பொருட்கள், தொழில்துறைக்கான மைகள் மற்றும் அலுமினியத் தகடுகள் ஆகியவற்றைத் தயாரித்து வருகிறது. அடுத்தடுத்து ஏற்பட்ட பல வெடிவிபத்துகளைத் தொடர்ந்து, தொழிற்சாலையில் பணியாற்றிய 300 ஊழியர்கள் அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

***

(Release ID: 2265622)

 TV/SV/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2265651) வருகையாளர் எண்ணிக்கை : 8
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी