சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
தேசிய ஆடை வடிவமைப்பு தொழில்நுட்ப நிறுவனத்தின் ஆடை அலங்கார வடிவமைப்பு விழா 2026
இடுகை இடப்பட்ட நாள்:
22 MAY 2026 9:24PM by PIB Chennai
சென்னையிலுள்ள தேசிய ஆடை வடிவமைப்பு தொழில்நுட்ப நிறுவனத்தின் ஆடை அலங்கார வடிவமைப்பு விழா 2026 இன்று (22 மே 2026) சென்னையில் இந்நிறுவனத்தின் கலையரங்கில் நடைபெற்றது.

இவ்விழாவில், சென்னையில் அமைந்துள்ள இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் மாலினி வி. சங்கர் அவர்கள் தலைமை விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்பித்தார். தனது உரையில், பழங்குடியின மாணவர்களுக்கு அதிகாரம் அளிப்பதில் அனைவரையும் உள்ளடக்கிய வடிவமைப்பு கல்வி மற்றும் சமூகம் சார்ந்த தொழில் ஈடுபாட்டின் பங்கை அவர் வலியுறுத்தினார். மேலும், NIFT சென்னையுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட வெற்றிகரமான பல்வேறு கூட்டு முயற்சிகளையும் அவர் எடுத்துரைத்தார்.
இந்த சிறப்புமிக்க நிகழ்வானது, ஆடை வடிவமைப்பு, மற்றும் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்குவதில் இந்த நிறுவனத்தின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை முக்கியமாக எடுத்துகாட்ட்டியுள்ளது.

இந்த ஆடை அலங்கார வடிவமைப்பு விழாவானது, ஆடை வடிவமைப்பு, ஆடை மற்றும் வாழ்க்கைமுறை அணிகலன்கள், தோல் வடிவமைப்பு, பின்னல் ஆடை வடிவமைப்பு மற்றும் ஜவுளி வடிவமைப்பு ஆகிய துறைகளிலிருந்து பட்டம் பெறும் மாணவர்களின் படைப்பாற்றல் பயணம் மற்றும் கல்வித் திறனின் உச்சகட்டமாக அமைந்தது. ஃபேஷன் மாடல்கள், புதுமையான ஆடைகள் மற்றும் அணிகலன்களை அணிந்து மாணவர்களின் படைப்பாற்றல், கைவினைத்திறன் மற்றும் சந்தைப் பொருத்தம் ஆகியவற்றின் சரியான கலவையை வெளிப்படுத்தி, மேடை மீது ஒய்யாரமாக வலம் வந்தனர்.
இதன் ஒருபகுதியாக இந்நிறுவன வளாகத்தில் இன்று கருத்துப் பலகைகள், நிறுவல்கள் மற்றும் ஊடாடும் காட்சிகளைக் கொண்ட ஒரு பிரத்யேக வடிவமைப்பு அரங்கங்களைக் கொண்ட கண்காட்சியும் நடைபெற்றது. இந்தக் கண்காட்சி, நவீன ஃபேஷனுக்கு உந்துசக்தியாக விளங்கும் ஆராய்ச்சி, கதைசொல்லல் மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றை உள்ளடக்கி, படைப்புச் செயல்முறைகளை விளக்கும் வகையில் அமைந்திருந்தது.
மேலும் ஃபேஷன் மேலாண்மை (MFM) மற்றும் ஃபேஷன் தொழில்நுட்பத் துறை மாணவர்கள், முறையே பாட்டம்லைன் (Bottomline and Technova) மற்றும் டெக்னோவா ஆகிய பெயர்களில் தங்களது பட்டப்படிப்பு ஆராய்ச்சித் திட்டங்களைச் சமர்ப்பித்து, தங்களது பகுப்பாய்வுத் திறன்களையும் தொழில் சார்ந்த ஆராய்ச்சிகளையும் வெளிப்படுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக, சென்னை இந்தியன் டெர்ரெய்ன் ஃபேஷன் லிமிடெட்டின் தலைமை வணிக அதிகாரி திருமதி ஷெனாஸ் ஷெரீஃப் மற்றும் அஸ்வத்தா கன்சல்டிங் பிரைவேட் லிமிடெட்டின் இணை நிறுவனர் மற்றும் இயக்குநர் திரு. மகேஷ் ராஜாமணி ஆகியோர் கலந்துகொண்டனர்.
NIFT சென்னையின் இயக்குநரான பேராசிரியர் டாக்டர் திவ்யா சத்யன் அவர்கள் நன்றியுரையில் ஆசிரியர்கள், அதிகாரிகள், மாணவர்கள் மற்றும் துறைசார் கூட்டாளிகள் மேற்கொண்ட அயராத முயற்சிகளை அவர் பாராட்டினார்.
இவ்விழாவில் இணை இயக்குநர் (பொறுப்பு) டாக்டர் டி. பிரவீன் நாகராஜன், பேராசிரியர்கள், அதிகாரிகள், ஊழியர்கள், மாணவர்கள் மற்றும் பல்வேறு துறைசார் பங்குதாரர்கள் கலந்துகொண்டனர்.
***
AD/SE
(வெளியீட்டு அடையாள எண்: 2264375)
வருகையாளர் எண்ணிக்கை : 19