வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
புதுதில்லியில் தூய்மை இந்தியா இயக்கம் - நகர்ப்புறம் 2.0 தேசிய ஆய்வுக் கூட்டம்
இடுகை இடப்பட்ட நாள்:
20 MAY 2026 7:55PM by PIB Chennai
மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் திரு. மனோகர் லால் தலைமையில், புதுதில்லி விஞ்ஞான் பவனில் மே 19, 20 ஆகிய தேதிகளில் தூய்மை இந்தியா இயக்கம்-நகர்ப்புறம் 2.0 குறித்த இரண்டு நாள் தேசிய ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இத்திட்டத்தின் கீழ் தற்போது நாட்டின் 97 சதவீத வார்டுகளில் வீடுகளுக்கே சென்று குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. மேலும், கழிவு சுத்திகரிப்பு அளவு 2014-ம் ஆண்டில் இருந்த 16 சதவீதத்திலிருந்து, தற்போது 2026-ல் 81 சதவீதமாக கணிசமாக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் உள்ள 2,482 குப்பைக்கிடங்குகளில் இருந்த 26 கோடி மெட்ரிக் டன் பழைய கழிவுகளில், 65 சதவீதக் கழிவுகள் வெற்றிகரமாக அகற்றப்பட்டு சுமார் 9,000 ஏக்கர் மதிப்புள்ள நகர்ப்புற நிலம் மீட்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர் திரு மனோகர் லால், நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை அடைவதற்கு இன்னும் 10 மாதங்களே உள்ளதால், நிதிச் சவால்கள் மற்றும் நிர்வாகத் தாமதங்களை விரைந்து தீர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மாநிலங்கள் தாங்கள் மேற்கொள்ளும் பணிகளின் தினசரி முன்னேற்றத்தை 'சுவச்சதாம்' இணையதளத்தில் உடனுக்குடன் பதிவிட வேண்டும் என்றும், தூய்மையே குணம் மற்றும் பண்பாடு என்ற கருத்தை மாணவர்களின் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். குறிப்பாக, முதலமைச்சர்கள் மற்றும் அமைச்சர்களின் தீவிர அரசியல் பங்களிப்பு இருந்தால் மட்டுமே இத்திட்டத்தை இன்னும் வேகப்படுத்த முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த இரண்டு நாள் மாநாட்டில் தெலங்கானா துணை முதலமைச்சர் திரு எம் பட்டி விக்ரமார்கா, மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் திரு ஏக்நாத் ஷிண்டே, சத்தீஸ்கர் துணை முதலமைச்சர் திரு அருண் சாவ் மற்றும் 12 மாநிலங்களைச் சேர்ந்த நகர்ப்புற வளர்ச்சி அமைச்சர்களும், அதிகாரிகளும் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் அறிவியல் பூர்வமான கழிவு மேலாண்மை, தூய்மைப் பணியாளர்களின் பாதுகாப்பு மற்றும் நவீன தொழில்நுட்ப கண்காணிப்பு குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2263419®=3&lang=1
***
SS/VK /KR
(வெளியீட்டு அடையாள எண்: 2263653)
வருகையாளர் எண்ணிக்கை : 10