தேசிய மனித உரிமைகள் ஆணையம்
புதுதில்லியில், மாநில மனித உரிமைகள் ஆணையங்களுடன் தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஒரு நாள் மாநாட்டை 'மெய்நிகர் முறையில்' நடத்தியது
இடுகை இடப்பட்ட நாள்:
19 MAY 2026 1:17PM by PIB Chennai
இந்திய தேசிய மனித உரிமைகள் ஆணையம், புதுதில்லியில் அமைந்துள்ள தனது வளாகத்தில், மாநில மனித உரிமைகள் ஆணையங்களின் ஒரு நாள் மாநாட்டை, 'மெய்நிகர் முறையில்' நடத்தியது. இம்மாநாட்டிற்குத் தலைமை தாங்கிய என்எச்ஆர்சி தலைவர் நீதிபதி வி ராமசுப்ரமணியன், இந்தியாவின் மனித உரிமைகள் கட்டமைப்பு தனித்துவமானது என்று கூறினார். ஏனெனில், தேசிய மனித உரிமைகள் ஆணையம், மாநில மனித உரிமைகள் ஆணையங்கள் ஆகியவை தத்தம் துறைசார் அதிகார வரம்புகளுக்கு அப்பால், குறிப்பிட்ட சில விவகாரங்களில் 'இணை அதிகார வரம்பை' செயல்படுத்துகின்றன.
நாட்டின் மனித உரிமைகள் சார்ந்த செயல்பாடு, அனைத்து ஆணையங்களின் செயல்பாடுகள் வாயிலாக கூட்டாகவே மதிப்பிடப்படுகிறது என்பதை அவர் சுட்டிக்காட்டினார். எனவே, ஒரே மாதிரி வழக்குகள் மீண்டும் மீண்டும் விசாரிக்கப்படுவதைத் தவிர்ப்பது, தகவல்களைப் பகிர்ந்துகொள்வதை மேம்படுத்துவது மற்றும் சிறந்த நடைமுறைகளை ஊக்குவிப்பது ஆகியவை அவசியமாகும். என்எச்ஆர்சி உறுப்பினர்களான நீதிபதி (டாக்டர்) பித்யுத் ரஞ்சன் சாரங்கி, திருமதி விஜயா பாரதி சயானி, பொதுச் செயலாளர் திரு பாரத் லால், திருமதி அனுபாமா நிலேகர் சந்திரா மற்றும் மூத்த அதிகாரிகள் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
நீதிபதி ராமசுப்ரமணியன், மாநில மனித உரிமைகள் ஆணையங்கள் தங்களின் செயல்பாடுகளை டிஜிட்டல் மயமாக்கி, தேசிய மனித உரிமை ஆணையத்துடன் இணைந்த பொதுவான ஒருங்கிணைந்த தளத்தில் சேர வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும், ஆணையங்கள் தங்களின் அதிகார வரம்பை மீறக்கூடாது என்றும் அவர் எச்சரித்தார். நீதிமன்றங்கள் அடிப்படை மற்றும் மனித உரிமைகளின் வரம்பை விரிவுபடுத்தியிருந்தாலும், மனித உரிமை நிறுவனங்கள் மனித உரிமைகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழுள்ள வரையறையையே வழிகாட்டுதலாகக் கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2262697®=3&lang=1
***
SS/PKV/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2262757)
வருகையாளர் எண்ணிக்கை : 9