சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
தேசிய சுகாதார ஆணையம், இந்தியா ஏஐ மிஷன், ஐஐஎஸ்சி பெங்களூரு ஆகியவற்றுடன் இணைந்து ஹேக்கத்தான் கண்காட்சி 2026-ஐ நிறைவு செய்தது.
இடுகை இடப்பட்ட நாள்:
09 MAY 2026 4:05PM by PIB Chennai
தேசிய சுகாதார ஆணையம் , இந்தியா ஏஐ மிஷன் மற்றும் ஐஐஎஸ்சி பெங்களூருவுடன் இணைந்து நடத்திய ஏபி பிஎம் –ஜேஏஒய் ஹேக்கத்தான் 2026 வெற்றிகரமாக நிறைவடைந்தது. சுகாதார காப்பீட்டு கோரிக்கைகளை வேகமாகவும், துல்லியமாகவும், வெளிப்படையாகவும் செயலாக்க உதவும் செயற்கை நுண்ணறிவு தீர்வுகளை உருவாக்கும் நோக்கில் இந்த நிகழ்வு நடத்தப்பட்டது.
இந்த ஹேக்கத்தானில் நாடு முழுவதிலிருந்தும் மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்கள் என 3,500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். மூன்று முக்கிய பிரச்சினை தலைப்புகளில் சிறந்த ஏஐ தீர்வுகள் தேர்வு செய்யப்பட்டன. மருத்துவ ஆவணங்களை தானாக பகுப்பாய்வு செய்யும் அமைப்புகள், ரேடியாலஜி படங்களை அடிப்படையாகக் கொண்ட நோயறிதல் தொழில்நுட்பங்கள் மற்றும் போலி ஆவணங்கள், மோசடிகளை கண்டறியும் ஏஐ கருவிகள் ஆகிய பிரிவுகளில் வெற்றி பெற்ற அணிகள் அறிவிக்கப்பட்டன. வெற்றியாளர்களுக்கு பரிசுத்தொகை வழங்கப்பட்டதுடன், அவர்களின் தீர்வுகளை அரசு சுகாதாரத் திட்டங்களில் பயன்படுத்தும் வாய்ப்பும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
நிகழ்வின் ஒரு பகுதியாக நடைபெற்ற கலந்துரையாடல்களில், சுகாதார கோரிக்கை செயல்முறைகளில் ஏஐ பயன்பாடு, வெளிப்படைத்தன்மை, விரைவான செயலாக்கம் மற்றும் மோசடி தடுப்பு குறித்து நிபுணர்கள் விவாதித்தனர். அதேபோல், டிஜிட்டல் சுகாதார மிஷன் மூலம் மருத்துவமனைகள் மற்றும் அரசு அமைப்புகள் இணைந்து செயல்படுவது, நோயாளி பதிவுகள் டிஜிட்டலாக பகிரப்படுவது மற்றும் சேவைகள் எளிமைப்படுத்தப்படுவது குறித்து முக்கியமாக பேசப்பட்டது.
மேலும் நடைபெற்ற மற்றொரு ஆலோசனையில், இந்திய சுகாதார துறைக்கு ஏற்ற ஏஐ தொழில்நுட்பங்களை உருவாக்குவது, தரவுத்தளங்கள் உருவாக்குவது, பாதுகாப்பு மற்றும் தனியுரிமை ஆகியவற்றை உறுதி செய்வது குறித்து விவாதிக்கப்பட்டது. அரசு திட்டங்களில் ஏஐ தொழில்நுட்பத்தை பாதுகாப்பாகவும், விரிவாகவும் பயன்படுத்துவதற்கான வழிமுறைகள் இதில் பரிந்துரைக்கப்பட்டன.
மொத்தத்தில், இந்தியாவின் பொது சுகாதார அமைப்பை டிஜிட்டல் மற்றும் ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் மேம்படுத்தும் நோக்கில் இந்த நிகழ்வு ஒரு முக்கியமான முன்னேற்றமாக அமைந்தது என தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.
(Release ID: 2259366)
****
TV/PKV/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2259389)
வருகையாளர் எண்ணிக்கை : 9