பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியா - ஆஸ்திரேலியா பாதுகாப்பு கொள்கை பேச்சுவார்த்தை: வியூக உறவுகளை வலுப்படுத்த முடிவு

இடுகை இடப்பட்ட நாள்: 08 MAY 2026 7:09PM by PIB Chennai

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளுக்கு இடையிலான 10-வது பாதுகாப்பு கொள்கை பேச்சுவார்த்தை இன்று புதுடெல்லியில் வெற்றிகரமாக நடைபெற்றது. இந்தப் பேச்சுவார்த்தையில் இந்தியத் தூதுக்குழுவிற்குப் பாதுகாப்பு அமைச்சக இணைச் செயலாளர் திரு.அமிதாப் பிரசாத்தும், ஆஸ்திரேலியத் தரப்பிற்கு சர்வதேசக் கொள்கைக்கான முதல் உதவிச் செயலாளர் திரு. பெர்னார்ட் பிலிப்பும் தலைமை தாங்கினர்.

இந்தக் கூட்டத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான விரிவான உத்திசார் கூட்டாண்மை மீண்டும் உறுதி செய்யப்பட்டது. குறிப்பாக, 2025-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் பாதுகாப்பு அமைச்சர்கள் அளவிலான பேச்சுவார்த்தை, இரு நாடுகளுக்கும் இடையே வளர்ந்து வரும் நம்பிக்கையை வெளிப்படுத்துவதாகத் தலைவர்கள் குறிப்பிட்டனர். இந்த ஆண்டின் இறுதியில் முதல் முறையாக இரு நாடுகளின் கூட்டுப் படைத் தளபதிகள் அளவிலான பேச்சுவார்த்தையை நடத்தவும் இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

2024-ஆம் ஆண்டு நடைபெற்ற தலைவர்கள் உச்சிமாநாட்டின் முடிவுகளை ஆய்வு செய்த இரு தரப்பினரும், கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான புதிய திட்ட வரைபடத்தை உருவாக்க இணக்கம் தெரிவித்தனர். மேலும், இரு நாடுகளின் முப்படைகளும் இணைந்து மேற்கொள்ளும் கூட்டுப் பயிற்சிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நவீன தொழில்நுட்பங்களைப் பகிர்ந்து கொள்ளவும் ஒப்புக் கொள்ளப்பட்டது.

ஜெனரல் பிபின் ராவத் நினைவு இளம் அதிகாரிகள் பரிமாற்றத் திட்டம் மற்றும் இரு நாட்டு ராணுவப் பள்ளிகளுக்கு இடையிலான பரஸ்பர வருகைகள் மூலம் ராணுவ வீரர்களிடையே புரிதலை மேம்படுத்த முடிவு செய்யப்பட்டது. பாதுகாப்புத் துறை சார்ந்த தொழில் உற்பத்தியில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுவதன் அவசியத்தை வலியுறுத்திய அதிகாரிகள், 2025 மற்றும் 2026-ல் நடைபெற்ற பாதுகாப்புத் தொழில் வட்டமேஜை மாநாடுகளின் முன்னேற்றத்தை வரவேற்றனர்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான இந்த நெருக்கமான பாதுகாப்பு ஒத்துழைப்பு, இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் நிலைத் தன்மைக்கு பெரும் உறுதுணையாக இருக்கும் என இரு நாடுகளும் நம்பிக்கை தெரிவித்துள்ளன.

 

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2259170&reg=3&lang=1

செய்தி அடையாள எண்: 2259170

***

TV/VK/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2259303) வருகையாளர் எண்ணிக்கை : 5
இந்த வெளியீட்டை படிக்க: हिन्दी , English , Urdu , Marathi