தேசிய மனித உரிமைகள் ஆணையம்
ஹரியானா மாநிலம் கிரேட்டர் ஃபரிதாபாத்தில் பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது இரண்டு துப்புரவு பணியாளர்கள் உயிரிழந்ததாக வெளியான செய்தியை இந்திய தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது
இடுகை இடப்பட்ட நாள்:
07 MAY 2026 5:09PM by PIB Chennai
ஹரியானா மாநிலம், கிரேட்டர் ஃபரிதாபாத்தில் உள்ள பூரி பிரணாம் பகுதியில், கடந்த மே 02, 2026 அன்று கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது இரண்டு துப்புரவு பணியாளர்கள் உயிரிழந்த நிகழ்வை இந்திய தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. முறையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படாமல் பணியாளர்கள் கழிவுநீர் தொட்டிக்குள் இறங்க வைக்கப்பட்டதாக ஊடகங்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, ஃபரிதாபாத் மாநகராட்சி ஆணையர் மற்றும் காவல் ஆணையருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ள தேசிய மனித உரிமைகள் ஆணையம், இரண்டு வாரங்களுக்குள் விரிவான அறிக்கையை சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளது. அந்த அறிக்கையில், இந்த விபத்து குறித்து பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கின் தற்போதைய நிலை, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு சட்டப்படி வழங்கப்பட்ட இழப்பீட்டு விவரங்கள் மற்றும் இச்சம்பவத்திற்குக் காரணமான அதிகாரிகள் அல்லது நபர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த தகவல்கள் இடம்பெற வேண்டும் என்று ஆணையம் குறிப்பிட்டுள்ளது.
கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்யும் பணிகளில் இயந்திரமயமாக்கப்பட்ட முறைகளை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்றும், துப்புரவு பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் மற்றும் தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஏற்கனவே பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளன. இத்தகைய விதிகள் நடைமுறையில் உள்ள போதிலும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் துப்புரவு பணியாளர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்வது குறித்து ஆணையம் தனது கவலையைப் பதிவு செய்துள்ளது. துப்புரவு பணியாளர்களின் வாழ்வுரிமையை உறுதி செய்ய வேண்டிய கடமை அரசு அமைப்புகளுக்கு இருப்பதை ஆணையம் இந்த நோட்டீஸ் மூலம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
***
SS/SE/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2258871)
வருகையாளர் எண்ணிக்கை : 8