சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

ஃபிளிப்கார்ட் கிடங்கில் BIS அதிகாரிகள் அமலாக்க சோதனை ஐஎஸ்ஐ தரநிலை முத்திரை இல்லாத ஃப்ரீசர்கள் பறிமுதல்

இடுகை இடப்பட்ட நாள்: 19 APR 2026 8:35AM by PIB Chennai

இந்திய தர நிர்ணய அமைவனத்தின் (BIS), சென்னை கிளை அலுவலக அதிகாரிகள் குழு, 18 ஏப்ரல் 2026 அன்று, திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே அலமாதி கிராமத்தில் அமைந்துள்ள ஃபிளிப்கார்ட் நிறுவனத்தின் கிடங்கில் சோதனை மேற்கொண்டது. பிஐஎஸ் சென்னை கிளை அலுவலகத்தின் விஞ்ஞானி–E / இயக்குனர் திரு. திரு.R.முனிநாராயணா தலைமையில், விஞ்ஞானி–C / துணை இயக்குனர் திரு. அஜய் சந்தல், விஞ்ஞானி–C / துணை இயக்குனர் திரு. சாய் சந்திரா, விஞ்ஞானி–C / துணை இயக்குனர் திரு. பக்கி பாலு மற்றும் பிற பணியாளர்கள், காவல் துறை அதிகாரிகள் முன்னிலையில் இந்த சோதனை நடைபெற்றது. மேற்கொண்டனர். அப்போது கட்டாய பிஐஎஸ் தரநிலை முத்திரை (ISI Mark) இல்லாமல் சேகரித்து வைக்கப்பட்டிருந்த குளிரூட்டும் சாதனங்கள் (Refrigerating Appliances) கண்டறியப்பட்டன. மொத்தம் எட்டு டீப் ஃப்ரீசர்கள் ISI முத்திரை இல்லாமல், CM/L எண் இல்லாமல் இருந்ததால், அவை பறிமுதல் செய்யப்பட்டன. இத்தகைய தயாரிப்புகள், தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டு துறை (Department for Promotion of Industry and Internal Trade-DPIIT) வெளியிட்ட குளிரூட்டும் சாதனங்கள் (Quality Control) உத்தரவுகளின் கீழ் வருகின்றன. அந்த உத்தரவுகளின்படி, செல்லுபடியாகும் BIS உரிமம் மற்றும் தரநிலை முத்திரை இல்லாமல் இத்தகைய பொருட்களை சேகரிக்கவோ, விற்கவோ, விற்பனைக்கு வழங்கவோ அல்லது காட்சிப்படுத்தவோ கூடாது. இந்த சோதனை குறித்து

சென்னை கிளை அலுவலகத்தின் விஞ்ஞானி–F / மூத்த இயக்குனர் மற்றும் தலைவர் திரு. S. D. தயானந்த் தெரிவிக்கையில், தரக் கட்டுப்பாட்டு உத்தரவுகளின் கீழ் அறிவிக்கப்பட்ட தயாரிப்புகளுக்கு ஐஎஸ்ஐ தரநிலை முத்திரை மூலம் பிஐஎஸ் சான்றிதழ் கட்டாயமானது; இது பொருட்களின் பாதுகாப்பு, தரம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பை உறுதி செய்கிறது. செல்லுபடியாகும் உரிமம் இல்லாமல் இத்தகைய பொருட்களை சேமித்தல் அல்லது விற்பனை செய்தல், அல்லது போலியான அல்லது தவறாக பயன்படுத்தப்பட்ட ஐஎஸ்ஐ முத்திரைகளை பயன்படுத்துதல் என்பது  பிஐஎஸ் சட்டம், 2016ன் கீழ் கடுமையான மீறலாகும் என்றும், இது நுகர்வோர் பாதுகாப்பை பாதிக்கக்கூடியது என்றும் அவர் வலியுறுத்தினார். இத்தகைய மீறல்களுக்கு எதிராக பறிமுதல் மற்றும் வழக்குப்பதிவு உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த குற்றத்திற்கு, முதல் மீறலுக்காக, இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது ரூ. 2,00,000/-- ற்கு குறையாத அபராதம் விதிக்கப்படும் அல்லது பொருட்களின் மதிப்பின் பத்து மடங்கு வரை அபராதம் விதிக்கப்படலாம் அல்லது இரண்டும் வழங்கப்படலாம் என்று சட்டத்தின் பிரிவு 29ல் குறிப்பிடப்பட்டுள்ளது.

நுகர்வோர், கட்டாய சான்றிதழ் வழங்கப்பட்ட தயாரிப்புகளை வாங்கும் போது, அவற்றில் ISI முத்திரை இருப்பதை உறுதி செய்த பின்னர் வாங்க வேண்டும். ISI முத்திரையின் தவறான பயன்பாடு அல்லது கட்டாய சான்றிதழ் இல்லாத பொருட்கள் விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டால், BIS Care செயலி மூலமாகவோ அல்லது cnbo1@bis.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தகவல் தெரிவிக்கலாம். அளிக்கப்படும் தகவல்களின் ஆதாரம் கண்டிப்பாக ரகசியமாக வைக்கப்படும். மேலும், BIS தொடர்பான தகவல்களுக்கு www.bis.gov.in மற்றும் e-BIS (manakonline.in) இணையதளங்களைப் பயன்படுத்த கேட்டுக்கொள்ளப்பட்டது.

***

TV/RK


(வெளியீட்டு அடையாள எண்: 2253509) வருகையாளர் எண்ணிக்கை : 22
இந்த வெளியீட்டை படிக்க: English