சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
வணிக ரீதியான எல்பிஜி ஒதுக்கீடு உடனடியாக 70 சதவீதம் அதிகரிக்கப்படுகிறது என இந்திய எண்ணெய் கழகத் தலைவர் திரு ஏ எஸ் சஹானி தெரிவித்துள்ளார்
பதுக்கல், முறைகேடுகளை தடுக்க எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் மாநிலம் முழுவதும் 1,500 இடங்களில் திடீர் சோதனை மேற்கொண்டுள்ளன
இருப்பு, விநியோகம், அணுகல் ஆகியவற்றில் மத்திய அரசு தீவிர கவனம் செலுத்துகிறது
இடுகை இடப்பட்ட நாள்:
10 APR 2026 7:13PM by PIB Chennai

தமிழ்நாட்டில் வணிக ரீதியான சமையல் எரிவாயு ஒதுக்கீட்டை மூல நிலையிலிருந்து 70 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், இது உடனடியாக அமலுக்கு வரும் என்றும் இந்திய எண்ணெய் கழகத்தின் (ஐஓசிஎல்) தலைவர் திரு ஏ எஸ் சஹானி இன்று (10.04.2026) அறிவித்துள்ளார்.
மாநிலத்தின் எரிபொருள் நிலைமை குறித்து விரிவாக ஆய்வு செய்த பின், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பேசிய அவர், சுத்திகரிப்பு திறன்கள் ஏறத்தாழ முழு அளவில் இருப்பதால் பெட்ரோல், டீசல், விமானத்திற்கான எரிபொருள் உட்பட திரவ எரிபொருள் விநியோகத்தில் சிக்கல் இல்லை என்று பொதுமக்களுக்கு உறுதியளித்தார்.
நாள்தோறும் சுமார் 5 லட்சம் சிலிண்டர்கள் என்ற மாநிலத்தின் சமையல் எரிவாயு தேவையை 100 சதவீதம் பூர்த்தி செய்யும் நிலையில் எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் உள்ளன என்றும், வீட்டு உபயோக சமையல் எரிவாயுக்கு அதிகபட்ச முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். சில பகுதிகளில் 6 முதல் 8 நாட்கள் வரை காத்திருப்பு காலம் இருப்பதை குறைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் கூறினார். மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் போன்ற அத்தியாவசிய பகுதிகளுக்கு எந்தவிதமான கட்டுப்பாடும் இல்லாமல் 100 சதவீத தேவைப் பூர்த்தி செய்யப்படுவதாக அவர் தெரிவித்தார்.
சென்னை புறநகர் பகுதிகளில் 20 நாட்கள் வரை காலதாமதம் ஆவதாக செய்தியாளர்கள் தெரிவித்த போது, விரிவானப் பகுப்பாய்வு நடத்தப்பட்டுள்ளதாகவும் இன்று அல்லது நாளை மாலைக்குள் இத்தகைய பிரச்சனைகளுக்குத் தீர்வு காணப்படும் என்று திரு சஹானி தெரிவித்தார். பதுக்கல் மற்றும் முறைகேடுகளை தடுக்க மாநில அரசு 10,000-க்கும் அதிகமான திடீர் ஆய்வுகளை மேற்கொண்டதாகவும் எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் முன்கூட்டியே அறிவிக்காமல் 1,500-க்கும் அதிகமான திடீர் சோதனைகளை தமிழ்நாடு முழுவதும் மேற்கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

மக்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்ய போதிய கச்சா எண்ணெய் இருப்பில் உள்ளதால் எரிபொருட்கள் வாங்குவது தொடர்பாக மக்கள் பீதியடைய வேண்டாம் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
கையிருப்பு, விநியோகம், அணுகல் ஆகியவற்றில் அரசின் கவனத்தை வலியுறுத்திய திரு சஹானி, குழாய் மூலம் இயற்கை எரிவாயு என்பதற்கு மாற வேண்டும் என வாடிக்கையாளர்களை அவர் கேட்டுக்கொண்டார். பாரம்பரியமான சமையல் எரிவாயு சிலிண்டர் என்பதோடு ஒப்பிடுகையில், குழாய் மூலம் எரிவாயு இணைப்புக்கு மாறுவதால் தூய்மையான, மலிவான, அதிகமான எரிபொருள் அனைவருக்கும் கிடைக்கும் என்று அவர் கூறினார்.
***
VL/SS/SMB/RJ/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2250949)
வருகையாளர் எண்ணிக்கை : 72