திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்
பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணைய வழிக் கருத்தரங்கில் "பராமரிப்பில் திறன் மேம்பாடு" தொடர்பான அமர்வை திறன் மேம்பாட்டு அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது
இடுகை இடப்பட்ட நாள்:
08 MAR 2026 10:02AM by PIB Chennai
2026–27-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டைத் தொடர்ந்து நிதி அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்படும் முக்கிய கருப்பொருள்கள் குறித்த பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணையக் கருத்தரங்கின் ஒரு பகுதியாக, 'அனைவரும் இணைவோம் அனைவரும் உயர்வோம் - மக்களின் விருப்பங்களை நிறைவேற்றுதல்' என்ற கருப்பொருளில், நாளை (மார்ச் 9, 2026) இணைய வழிக் கருத்தரங்கம் நடைபெறவுள்ளது. இதில் பிரதமர் திரு நரேந்திர மோடி, உரையாற்றுகிறார்.
இந்த கருத்தரங்கின் ஒரு பகுதியாக 'இந்தியாவின் பராமரிப்பு சூழலை வலுப்படுத்துதல்: 1.5 லட்சம் பன்முகத் திறன் கொண்ட பராமரிப்பாளர்களுக்குத் திறன் அளித்தல்' என்ற தலைப்பில் ஒரு பிரத்யேக இணைய வழி விவாத அமர்வை திறன் மேம்பாடு - தொழில்முனைவோர் அமைச்சகம் நடத்துகிறது.
2026-27 பட்ஜெட் உரையின் பத்தி-54-ல் கூறப்பட்டுள்ள செயல்படுத்தல் உத்திகள் குறித்து அனைத்து தரப்பினருடனும் ஆலோசிக்க ஒரு கூட்டு தளமாக இந்த இணையக் கருத்தரங்கு செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதியோர் தொடர்புடைய பராமரிப்பு சேவைகளை உள்ளடக்கிய ஒரு வலுவான பராமரிப்பு சூழல் அமைப்பு குறித்து இதில் விவாதிக்கப்படும். நல்வாழ்வு, யோகா, மருத்துவ உதவி சாதனங்களின் செயல்பாடு போன்ற முக்கிய திறன்களை இணைத்து பன்முகத் திறன் கொண்ட பராமரிப்பாளர்களுக்கு பயிற்சி அளிக்கும் திட்டங்கள் உருவாக்கப்படுவது குறித்து இதில் ஆலோசிக்கப்படும். வரும் ஆண்டில், 1.5 லட்சம் பராமரிப்பாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.
இந்த அமர்வின் போது நடைபெறும் விவாதங்கள், இந்தியாவின் அதிகரித்து வரும் உள்நாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் திறன் கொண்ட வலுவான பராமரிப்புப் பணியாளர்களை உருவாக்குவது குறித்தும், பராமரிப்புப் பொருளாதாரத்தில் வளர்ந்து வரும் உலகளாவிய வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வது குறித்தும் அமைந்திருக்கும்.
இந்த சிறப்பு அமர்வு, இந்தியாவின் பராமரிப்பு பணியாளர்களை வலுப்படுத்துவதற்கான முக்கிய முன்னுரிமைகள் குறித்து விவாதிக்க சுகாதார நிறுவனங்கள், மாநில அரசுகள், சர்வதேச நிறுவனங்கள், கல்வித்துறை நிபுணர்களை ஒன்றிணைக்கும். பராமரிப்பாளர் தகுதிகளை தரப்படுத்துதல், பயிற்சி உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், பராமரிப்புத் துறையில் பயிற்சி வாய்ப்புகளை விரிவுபடுத்துதல் ஆகியவற்றில் இந்த விவாதங்கள் கவனம் செலுத்தும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2236531®=3&lang=1
***
(Release ID: 2236531)
TV/PLM/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2236556)
வருகையாளர் எண்ணிக்கை : 17