சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
எரிசக்தி மற்றும் வளங்கள் நிறுவனத்தின் உலக நிலைத்தன்மை மேம்பாட்டு உச்சிமாநாடு 2026 மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் புதிய தளத்தை அமைச்சர் திரு பூபேந்திர யாதவ் தொடங்கி வைத்தார்
இடுகை இடப்பட்ட நாள்:
25 FEB 2026 8:02PM by PIB Chennai
எரிசக்தி மற்றும் வளங்கள் நிறுவனத்தின் உலக நிலைத்தன்மை மேம்பாட்டு உச்சிமாநாட்டின் வெள்ளி விழா பதிப்பை மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு பூபேந்திர யாதவ் இன்று தொடங்கி வைத்தார். இந்த விழாவில் அமைச்சகத்தின் முன்முயற்சியான ஹிம்-கனெக்ட் என்ற பிரத்யேக தளத்தையும் அமைச்சர் அறிமுகப்படுத்தினார். இமாலய பிரதேசங்களில் பணியாற்றும் ஆராய்ச்சியாளர்களை புத்தொழில் நிறுவனங்கள், தொழில்துறை தலைவர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் கொள்கை வடிவமைப்பாளர்களுடன் இணைக்கும் நோக்கத்துடன் இந்தத் தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், உலகளாவிய காலநிலை சவாலை சுட்டிக்காட்டி, பாரிஸ் ஒப்பந்தத்தின் கீழ் நடைபெற்ற முதல் உலகளாவிய கண்காணிப்பு மதிப்பாய்வில், உலகளவில், புவி வெப்பமடைதலை 1.5 டிகிரி செல்சியஸாகக் கட்டுப்படுத்தத் தேவையான பாதையில் நாம் பயணிக்க வில்லை என்பதை தெளிவுபடுத்தியுள்ளது என்று கூறினார். உமிழ்வு குறைப்பு, தகவமைப்பு நிதி முதலியவை போதுமானதாக இல்லை என்றும், நிலையான வளர்ச்சி இலக்கு செயல்படுத்தல் சீரற்றதாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
மாற்றம் என்பது சிறிய கொள்கை மாற்றங்களைக் கடந்து எரிசக்தி அமைப்புமுறைகள், பொருளாதார மாதிரிகள், நுகர்வு முறைகள் மற்றும் உலகளாவிய நிர்வாக கட்டமைப்புகளில் கட்டமைப்பு மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும் என்று அமைச்சர் வலியுறுத்தினார். உச்சிமாநாட்டின் கருப்பொருளான “மாற்றங்கள்: தொலைநோக்குப் பார்வை , குரல்கள் மற்றும் நிலையான வளர்ச்சிக்கான மதிப்புகள்” பற்றிக் குறிப்பிட்ட அவர், இது, மனிதகுலத்திற்கும் பூமிக்கும் இந்த வரையறுக்கப்பட்ட தருணத்தில் ஒரு உத்திசார் தேவையைப் பிரதிபலிக்கிறது என்றார்.
'வளர்ச்சியடைந்த பாரதத்தை' உருவாக்க உறுதிபூண்டுள்ள இந்தியா, எரிசக்தி மாற்றம், சுழற்சிப் பொருளாதார மாற்றம், இயற்கை சார்ந்த தீர்வுகள் மற்றும் டிஜிட்டல் சுற்றுச்சூழல் நிர்வாகம் ஆகிய நான்கு தூண்களில் சீர்திருத்தங்களை முன்னெடுத்து வருகிறது என்று அமைச்சர் தெரிவித்தார். அடுத்த 25 ஆண்டுகளில் உறுதிமொழிகளிலிருந்து செயல்திறனுக்கும், இலக்குகளிலிருந்து சரியான பாதைகளிலும், லட்சியத்திலிருந்து பொறுப்புக்கூறலுக்கும் முன்னேற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2232832®=3&lang=1
(Release ID: 2232832)
****
TV/BR/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2232886)
வருகையாளர் எண்ணிக்கை : 9