பிரதமர் அலுவலகம்
பிரதமர் திரு நரேந்திர மோடியின் மலேசிய பயணத்தின்போது வெளியிடப்பட்ட இந்தியா - மலேசியா கூட்டு அறிக்கை
இடுகை இடப்பட்ட நாள்:
08 FEB 2026 11:00AM by PIB Chennai
மலேசியப் பிரதமர் டத்தோ திரு அன்வர் இப்ராஹிமின் அழைப்பின் பேரில், பிரதமர் திரு நரேந்திர மோடி, 2026 பிப்ரவரி 7 முதல் 8 வரை மலேசியாவிற்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டார். இந்தப் பயணம் இரு நாடுகளுக்கும் இடையிலான நாகரிக தொடர்புகளின் அடிப்படையில் ஆழமான வேரூன்றிய நட்பு, மக்களுக்கு இடையேயான நீடித்த உறவுகளைப் பிரதிபலித்தது. இந்தியா-மலேசியா விரிவான உத்திசார் ஒத்துழைப்பை மேலும் ஒருங்கிணைத்து விரிவுபடுத்துவதற்கான இரு தலைவர்களின் பகிரப்பட்ட உறுதிப்பாட்டை இது மீண்டும் உறுதிப்படுத்தியது.
1957-ல் தூதரக உறவுகள் நிறுவப்பட்டதிலிருந்து, மலேசியாவும் இந்தியாவும் பரஸ்பர மரியாதை, பகிரப்பட்ட மதிப்புகளின் ஒத்துழைப்பு கட்டமைப்பை உருவாக்கியுள்ளன. இது ஆகஸ்ட் 2024-ல் விரிவான புத்திசார் ஒத்துழைப்பாக ஆக உயர்த்தப்பட்டது.
இந்தப் பயணத்தின் போது, பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு புத்ராஜெயாவில் உள்ள பெர்டானா புத்ரா வளாகத்தில் மலேசிய அரசு சார்பில் அதிகாரப்பூர்வ வரவேற்பு விழா நடைபெற்றது. பின்னர் தலைவர்கள் 2026 பிப்ரவரி 8 இருதரப்புப் பேச்சு நடத்தினர். பாதுகாப்பு, கடல்சார் ஒத்துழைப்பு, வர்த்தகம், முதலீடு, டிஜிட்டல் பொருளாதாரம், அறிவியல், தொழில்நுட்பம், எரிசக்தி, விவசாயம், சுகாதாரம், கல்வி, கலாச்சாரம், சுற்றுலா, இளைஞர் பரிமாற்றங்கள், மக்களிடையேயான தொடர்புகள் உள்ளிட்டவற்றில் இருதரப்பு உறவுகள் குறித்து இரு பிரதமர்களும் விரிவான, பயனுள்ள விவாதங்களை நடத்தினர். பிரதமர் திரு நரேந்திர மோடியை கௌரவிக்கும் வகையில் மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் அரசு முறையில் மதிய விருந்தை வழங்கினார். ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட பல இருதரப்பு ஒப்பந்த ஆவணங்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.
இரு நாடுகளுக்கும் இடையிலான ஆழமான வரலாற்று தொடர்புகள், பழைய தொடர்புகள், பகிரப்பட்ட கலாச்சார பாரம்பரியம், ஜனநாயக மதிப்புகள், மலேசியாவில் உள்ள துடிப்பான இந்திய சமூகத்தினரின் துடிப்பான செயல்பாடுகள் ஆகியவை இருதரப்பு உறவுக்கு ஒரு தனித்துவமான, வலுவான அடித்தளத்தை உருவாக்கியுள்ளன என்பதை இரு தலைவர்களும் மீண்டும் குறிப்பிட்டனர்.
உயர் நிலை பயணங்கள் உட்பட வழக்கமான உரையாடல்கள், இருதரப்பு ஒத்துழைப்பின் பல்வேறு துறைகளில் பரஸ்பர புரிதலையும் ஒருங்கிணைப்பையும் வலுப்படுத்தியுள்ளன என்று தலைவர்கள் ஒப்புக்கொண்டனர்.
மேம்பட்ட நாடாளுமன்ற ஒத்துழைப்பையும் அவர்கள் வலியுறுத்தினர்.
வர்த்தக ஒத்துழைப்பை மேம்படுத்தவும், குறைக்கடத்திகள், டிஜிட்டல் பொருளாதாரம், தொழில்துறை ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கவும் இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.
மலேசியா-இந்தியா விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தம், ஆசியான்-இந்தியா வர்த்தக ஒப்பந்தம் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை தலைவர்கள் வலியுறுத்தினர். இருதரப்பு முதலீடுகளை இரு பிரதமர்களும் வரவேற்றனர். உள்கட்டமைப்பு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, குறைக்கடத்திகள், சுகாதாரம், டிஜிட்டல் பொருளாதாரம், நிதித் தொழில்நுட்பம், புத்தொழில் நிறுவனங்கள், செயற்கை நுண்ணறிவு, விருந்தோம்பல், பசுமை தொழில்நுட்பங்கள், பிற உயர் மதிப்புத் துறைகள் உள்ளிட்ட முன்னுரிமைத் துறைகளில் அதிக ஒத்துழைப்பையும் முதலீடுகளையும் ஊக்குவிக்க இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர். மலேசிய நிறுவனங்களுக்கு ஒரு முக்கிய முதலீட்டு இடமாக இந்தியாவின் பங்கை பிரதமர் திரு நரேந்திர மோடி எடுத்துரைத்தார். அதே நேரத்தில் மலேசியாவில் உயர் திறன் வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கு பங்களித்த இந்திய உற்பத்தி நிறுவனங்களின் குறிப்பிடத்தக்க பங்களிப்பை மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் பாராட்டினார்.
2026 பிப்ரவரி 7 அன்று கோலாலம்பூரில் நடைபெற்ற இந்தியா-மலேசியா தலைமைச் செயல் அதிகாரி மன்றத்தின் பத்தாவது கூட்டத்தை இரு பிரதமர்களும் வரவேற்றனர். இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக, முதலீட்டு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான முயற்சிகளை மன்றம் தொடர்ந்து பூர்த்தி செய்யும் என்று அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.
இருதரப்பு வர்த்தகம், முதலீடுகளில் உள்ளூர் பணப் பரிமாற்ற தீர்வு முறையை ஊக்குவிப்பதற்காக இந்திய ரிசர்வ் வங்கிக்கும் மலேசியாவின் நெகாரா வங்கிக்கும் இடையேயான தொடர்ச்சியான ஒத்துழைப்பை இரு பிரதமர்களும் பாராட்டினர்.
மேம்பட்ட பொருளாதார ஒத்துழைப்புக்கு போக்குவரத்து இணைப்பு ஒரு முக்கிய காரணி என்பதை தலைவர்கள் ஒப்புக்கொண்டனர். உணவுப் பாதுகாப்பு, ஊட்டச்சத்து துறையில், குறிப்பாக முக்கியப் பொருட்களின் வர்த்தகத்தில் ஒத்துழைப்பை வலுப்படுத்த இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர். தங்கள் மக்களின் உணவுப் பாதுகாப்பு, ஊட்டச்சத்து தேவைகளைப் பாதுகாக்க நிலையான விநியோகச் சங்கிலிகளை உறுதி செய்வதன் முக்கியத்துவத்தை அவர்கள் வலியுறுத்தினர்.
பாமாயில் எண்ணெயின் நம்பகமான விநியோக நாடாக மலேசியா தொடர்ந்து இருப்பதற்கான உறுதிப்பாட்டை மலேசிய பிரதமர் அன்வார் இப்ராஹிம் மீண்டும் உறுதிப்படுத்தினார். இது சம்பந்தமாக, எண்ணெய் பனை சாகுபடியில் ஆழமான ஒத்துழைப்புக்கு தலைவர்கள் ஒப்புக் கொண்டனர்.
மலேசியா-இந்தியா டிஜிட்டல் கவுன்சிலின் முறைப்படுத்தலை தலைவர்கள் பாராட்டினர். டிஜிட்டல் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும், புதுமைகளை வளர்ப்பதற்கும், நிதித் தொழில்நுட்பம், மின்-ஆளுகை, இணையதளப் பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு தொழில்நுட்பங்கள் போன்ற துறைகளில் கூட்டுத் திட்டங்களை செயல்படுத்த முக்கிய தளமாக அதன் திறனை அங்கீகரித்தனர்.
இருதரப்பு பணப்பரிவர்த்தனக ஒத்துழைப்பு தொடர்பான, இந்தியாவின் என்பிசிஐ - மலேசியாவின் பேநெட் இடையேயான ஒத்துழைப்பை தலைவர்கள் வரவேற்றனர். இந்த ஒருங்கிணைப்பு வணிகம் செய்வதை எளிதாக்குவதை கணிசமாக மேம்படுத்தும் என்று அவர்கள் குறிப்பிட்டனர்.
எரிசக்தித் துறையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை தலைவர்கள் குறிப்பிட்டனர். பெரிய அளவிலான சூரிய சக்தி முயற்சிகளில் மேலும் ஒத்துழைப்புக்கான பரந்த வாய்ப்புகளை இரு தலைவர்களும் எடுத்துரைத்தனர்.
உலகளாவிய தொழில்நுட்பச் சூழலில் செமி கண்டக்டர் துறையின் முக்கியத்துவத்தை தலைவர்கள் குறிப்பிட்டனர். செமி கண்டக்டர் மதிப்புச் சங்கிலியை வலுப்படுத்த ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதன் முக்கியத்துவத்தை அவர்கள் வலியுறுத்தினர். இதில் இருதரப்புக்கும் இடையே நடைபெற்று வரும் ஒத்துழைப்பு முயற்சிகளை இரு பிரதமர்களும் பாராட்டினர்.
மலேசியாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான வலுவான பாதுகாப்பு உறவில் தலைவர்கள் திருப்தி தெரிவித்தனர். ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டமைப்பில் இந்தியாவின் உறுதியான ஈடுபாட்டை இரு தலைவர்களும் பாராட்டினர். 2024-2027 காலத்திற்கான பயங்கரவாத எதிர்ப்பு பணிக்குழுவின் மலேசியாவுடனான கூட்டுத் தலைமையை வரவேற்றனர். இந்தியா - மலேசியா இணைந்து நடத்தி, 2026-ம் ஆண்டு மலேசியாவால் நடத்த திட்டமிடப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்பு பயிற்சிக்கான நிபுணர் பணிக்குழுவில் பங்கேற்க அனைத்து உறுப்பினர்களுக்கும் அவர்கள் அழைப்பு விடுத்தனர்.
இந்தியாவிற்கும் மலேசியாவிற்கும் இடையே வழக்கமான நல்லெண்ணப் பணிகள் மூலம் கடல்சார் ஒத்துழைப்பு வளர்ந்து வருவதை இரு பிரதமர்களும் பாராட்டினர். பாதுகாப்பு விஷயங்களில் ஒத்துழைப்பு, பரஸ்பர உதவியைப் பற்றி விவாதிக்கும் தளமான மலேசியா-இந்தியா பாதுகாப்பு உரையாடலின் கீழ் மலேசிய அரசுக்கும் இந்திய அரசுக்கும் இடையே ஒத்துழைப்பை நிறுவியதில் தலைவர்கள் திருப்தி தெரிவித்தனர்.
எல்லை தாண்டிய பயங்கரவாதம் உட்பட அனைத்து வடிவங்களிலும் பயங்கரவாதத்தை இரு பிரதமர்களும் கடுமையாகக் கண்டித்தனர். பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் இருதரப்பு, பலதரப்பு ஒத்துழைப்புகளை வலுப்படுத்துவதற்கான உறுதிப்பாட்டை இரு தலைவர்களும் மீண்டும் உறுதிப்படுத்தினர்.
இரு தரப்பினரும் அதிக மாணவர், ஆசிரியர் பரிமாற்றங்கள், கல்வி நிறுவனங்களுக்கு இடையே ஒத்துழைப்பு ஆகியவற்றை எளிதாக்க ஒப்புக் கொண்டனர். இரு நாடுகளின் வளர்ந்து வரும் தேவைகளுக்கு ஏற்ப திறமையான பணியாளர்களை உருவாக்க, தொழில் கல்வி, பயிற்சி ஆகியவற்றில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் தலைவர்கள் எடுத்துரைத்தனர்.
இரு நாடுகளுக்கும் இடையேயான வலுவான மக்கள் தொடர்பைக் கருத்தில் கொண்டு, இரு நாடுகளுக்கும் இடையே தொழிலாளர்கள், தொழில் வல்லுநர்களின் போக்குவரத்தை மேலும் வலுப்படுத்த இரு பிரதமர்களும் ஒப்புக்கொண்டனர்.
இருதரப்பு ஒத்துழைப்பின் முக்கிய தூணாகவும், மலேசியாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான மக்களிடையேயான உறவுகளின் முக்கிய உந்துசக்தியாகவும் சுற்றுலாவை தலைவர்கள் மீண்டும் உறுதிப்படுத்தினர். உள்ளடக்கிய சுற்றுலாவின் முக்கியத்துவத்தை இரு தரப்பினரும் சுட்டிக் காட்டினர். இரு நாடுகளுக்கும் இடையில் சுற்றுலா ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கு இரு தலைவர்களும் தங்கள் பகிரப்பட்ட உறுதிப்பாட்டை வெளிப்படுத்தினர்.
பரஸ்பர ஒத்துழைப்பு உணர்வில் மலேசியாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான விமான இணைப்பை வலுப்படுத்துவதற்கான தங்கள் உறுதிப்பாட்டை இரு தலைவர்களும் மீண்டும் உறுதிப்படுத்தினர்.
கோலாலம்பூரில் உள்ள புகழ்பெற்ற மலாயா பல்கலைக்கழகத்தில் திருவள்ளுவர் ஆய்வுகள் துறை செயல்படுவதை இரு தலைவர்களும் பாராட்டினர். மேலும் மலாயாவில் திருவள்ளுவர் மையம் நிறுவப்பட்டதையும் வரவேற்றனர். மலேசிய நாட்டினருக்கான திருவள்ளுவர் உதவித்தொகை அறிவிப்பை மலேசிய பிரதமர் அன்வர் வரவேற்றார்.
இரு தலைவர்களும் சுகாதாரம், பாரம்பரிய மருத்துவத்தில் ஒத்துழைப்பை மீண்டும் உறுதிப்படுத்தினர். இந்திய தொழில்நுட்ப - பொருளாதார ஒத்துழைப்பு திட்டத்தின் கீழ் மலேசியாவிற்கு பாரம்பரிய இந்திய மருத்துவம் நிபுணர்களை எதிர்காலத்தில் அனுப்புவதற்குத் தேவையான ஏற்பாடுகளை செய்வதில் மலேசியா உறுதியாக உள்ளது.
மருத்துவத் துறையில் இருதரப்பு ஒத்துழைப்பை தலைவர்கள் குறிப்பிட்டனர். மேலும் மருந்து ஒழுங்குமுறை நடைமுறைகள், செவிலியர் சேவைகளை அங்கீகரித்தல் ஆகியவற்றில் ஒத்துழைப்பு குறித்து இரு தரப்பினருக்கும் இடையிலான விவாதங்களை தலைவர்கள் வரவேற்றனர்.
ஹோமியோபதியில் ஆராய்ச்சி ஒத்துழைப்பு, பயிற்சி, கல்விப் பரிமாற்றங்களை ஊக்குவிக்கும் வகையில், இந்தியாவின் மத்திய ஹோமியோபதி ஆராய்ச்சி கவுன்சிலும் மலேசியாவின் சைபர்ஜெயா பல்கலைக்கழகமும் 2025 அக்டோபரில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதை இரு தலைவர்களும் வரவேற்றனர்.
சர்வதேச புலிகள் கூட்டணியின் நிறுவன உறுப்பினராக மலேசியாவின் பங்கை எடுத்துரைத்து, பல்லுயிர் பாதுகாப்புக்கான தங்கள் பகிரப்பட்ட அர்ப்பணிப்பை தலைவர்கள் சுட்டிக் காட்டினர். பேரிடர்களை எதிர்கொள்வதில் ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை அவர்கள் வலியுறுத்தினர். இதில் நிபுணத்துவத்தைப் பகிர்ந்து கொள்வது, பேரிடர் மேலாண்மை, மீட்பு ஆகியவற்றில் பணியாளர்களுக்கு பயிற்சி அளித்தல், கூட்டுப் பயிற்சிகளை நடத்துதல் ஆகியவை அடங்கும்.
பிராந்திய, உலகளாவிய பிரச்சினைகள் குறித்தும் இரு தலைவர்களும் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர். பேச்சுவார்த்தை மூலம் மோதல்களை அமைதியான முறையில் தீர்ப்பதற்கான அவசியத்தை அவர்கள் வலியுறுத்தினர்.
ஐக்கிய நாடுகள் சபை உட்பட பலதரப்பு மன்றங்களில் ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், சர்வதேச நிறுவனங்களின் சீர்திருத்தங்களை ஆதரிக்கவும் இரு பிரதமர்களும் ஒப்புக்கொண்டனர்.
ஊழலை எதிர்த்துப் போராடுவதிலும் தடுப்பதிலும் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU), பேரிடர் மேலாண்மை குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம்; மலேசியாவில் இந்திய மக்களுக்கான சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை மேம்படுத்துவதில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், ஒலி-ஒளி கூட்டு தயாரிப்பு குறித்த ஒப்பந்தம் ஆகியவை கையெழுத்திடப்பட்டதை இரு தலைவர்களும் வரவேற்றனர்.
மலேசிய பிரதமர் திரு அன்வர் இப்ராஹிமுக்கும் மலேசிய மக்களுக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி தமது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். மலேசியப் பிரதமர் திரு அன்வார் இப்ராஹிமை விரைவில் இந்தியாவுக்கு வருமாறு பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு அன்பான அழைப்பை விடுத்தார்.
***
(Release ID: 2225059)
TV/PLM/RK
(வெளியீட்டு அடையாள எண்: 2225187)
வருகையாளர் எண்ணிக்கை : 15