எரிசக்தி அமைச்சகம்
இந்தியா - பூட்டான் இடையிலான மின்சக்தித் துறை ஒத்துழைப்பை வலுப்படுத்த இரு நாடுகளும் உறுதி
இடுகை இடப்பட்ட நாள்:
03 FEB 2026 2:56PM by PIB Chennai
மத்திய மின்சாரம், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் திரு. மனோகர் லால் மற்றும் மின்சாரம், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை இணை அமைச்சர் திரு. ஸ்ரீபாத் நாயக் ஆகியோரை பூட்டான் நாட்டின் எரிசக்தி மற்றும் இயற்கை வளங்கள் துறை அமைச்சர் திரு. லியோன்போ கெம் செரிங் இன்று புதுதில்லியில் சந்தித்துப் பேசினார். இரு நாடுகளுக்கும் இடையே மின்சக்தித் துறையில் நீண்டகாலமாக நிலவி வரும் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து இச்சந்திப்பில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
இந்தியா - பூட்டான் இடையேயான நீர்மின் ஒத்துழைப்பு 1961-ஆம் ஆண்டு தொடங்கி, 2006-ஆம் ஆண்டில் நீர்மின் சக்தி ஒத்துழைப்புக்கான ஒப்பந்தமாக முறைப்படுத்தப்பட்டது. இன்றைய ஆலோசனையின் போது, 1020 மெகாவாட் திறன் கொண்ட புனாட்சாங்சு-II (Punatsangchhu-II) நீர்மின் திட்டத்தின் வணிக ரீதியான மின் உற்பத்தியை மேம்படுத்துவது குறித்தும், 1200 மெகாவாட் திறன் கொண்ட புனாட்சாங்சு-I நீர்மின் திட்டத்தை விரைந்து செயல்பாட்டுக்குக் கொண்டு வருவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
மேலும், சங்கோஷ் (Sankosh) நீர்மின் திட்டத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மற்றும் 2040-ஆம் ஆண்டு வரையிலான மின்சாரக் கட்டமைப்புத் திட்டமிடல் குறித்து இருதரப்பு ஆலோசனை நடைபெற்றது. பூட்டானில் மின் உற்பத்தி குறைவாக இருக்கும் காலங்களில், மின் விநியோகத்திற்கான ஒப்புதல் நடைமுறைகளை எளிதாக்குவதன் அவசியம் குறித்தும் வலியுறுத்தப்பட்டது. இரு நாடுகளுக்கும் இடையிலான ஆழமான நட்புறவைப் பாராட்டிய அமைச்சர்கள், இருநாட்டு உறவை மேலும் புதிய உச்சங்களுக்குக் கொண்டு செல்ல விருப்பம் தெரிவித்தனர்.
****
TV/SE/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2222784)
வருகையாளர் எண்ணிக்கை : 10