பாதுகாப்பு அமைச்சகம்
5-வது 'வீரக் கதை' போட்டி நிகழ்வின் வெற்றியாளர்களுக்கு மத்திய இணையமைச்சர்கள் திரு ஜெயந்த் சௌத்ரி, திரு சஞ்சய் சேத் பாராட்டு
प्रविष्टि तिथि:
24 JAN 2026 5:55PM by PIB Chennai
வீரக் கதை போட்டி நிகழ்வின் 5-வது பதிப்பில் வெற்றி பெற்ற 100 பேரை புது தில்லியில் இன்று (ஜனவரி 24, 2026) நடைபெற்ற நிகழ்ச்சியில் பாதுகாப்புத்துறை இணையமைச்சர் திரு சஞ்சய் சேத், கல்வித் துறை இணையமைச்சர் திரு ஜெயந்த் சௌத்ரி ஆகியோர் பாராட்டினர். முதல் முறையாக, வெளிநாடுகளில் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகளில் படிக்கும் 28,005 சர்வதேச மாணவர்களும் இப்போட்டிகளில் பங்கேற்றனர். 100 வெற்றியாளர்களில், 64 பேர் நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மாணவிகள் ஆவர். ஒவ்வொரு வெற்றியாளருக்கும் ₹10,000 ரொக்கப் பரிசு, ஒரு பதக்கம், சான்றிதழ் வழங்கப்பட்டது. ஜனவரி 26, 2026 அன்று கடமைப் பாதையில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பைக் காணும் சிறப்பு விருந்தினர்களில் இந்த 100 பேரும் அடங்குவர்.
விருது பெற்றவர்களிடையே உரையாற்றிய பாதுகாப்புத் துறை இணையமைச்சர் திரு சஞ்சய் சேத், வீர் கதா (வீரக் கதை) போன்ற முயற்சிகள் எதிர்கால சந்ததியினர் இந்தியாவின் சிறந்த சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகங்களை நினைவில் கொள்வதையும், அவர்களை கௌரவிப்பதையும் உறுதி செய்யும் என்று கூறினார்.
நிகழ்ச்சியில் பேசிய கல்வித்துறை இணையமைச்சர் திரு ஜெயந்த் சௌத்ரி, சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகங்களைப் பற்றி பள்ளி மாணவர்களுக்குக் கற்பிப்பதிலும், படைப்பாற்றலை வளர்ப்பதிலும் வீரக் கதை போன்ற முயற்சிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன என்றார்.
முப்படைகளின் தளபதி ஜெனரல் அனில் சௌகான், கடற்படைத் தலைமைத் தளபதி அட்மிரல் தினேஷ் கே திரிபாதி, விமானப் படைத் தளபதி ஏர் சீஃப் மார்ஷல் ஏ.பி. சிங், பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் திரு. சஞ்சய் குமார், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையான டிஆர்டிஓ தலைவர் டாக்டர் சமீர் வி காமத் மற்றும் பிற மூத்த அதிகாரிகள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இந்த ஆண்டு இப்போட்டியில் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த 1.92 கோடி மாணவர்கள் சாதனை அளவில் பங்கேற்றனர். இந்த மாணவர்கள் விடுதலைப் போராட்ட வீரர்கள் தொடர்பாக ஓவியம் வரைதல், கட்டுரை எழுதுதல், குறுகிய வீடியோ உருவாக்கம் போன்ற செயல்பாடுகளில் பங்கேற்றனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2218212®=3&lang=1
***
TV/PLM/RJ
(रिलीज़ आईडी: 2218274)
आगंतुक पटल : 6