சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
பாரம்பரிய மருத்துவம் குறித்த 2-வது உலகளாவிய உச்சிமாநாடு பற்றிய செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது
இடுகை இடப்பட்ட நாள்:
11 DEC 2025 9:01PM by PIB Chennai
பாரம்பரிய மருத்துவம் குறித்த உலக சுகாதார அமைப்பின் 2-வது உலகளாவிய உச்சிமாநாடு 17.12.2025 முதல் 19.12.2025 வரை புதுதில்லியில் நடைபெறவுள்ளது.
இந்திய அரசின் ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழுமத்தின் சார்பில் மாநாடு குறித்த செய்தியாளர் சந்திப்பு, இன்று சென்னையில் நடைபெற்றது. அப்போது பேசிய மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழுமத்தின் தலைமை இயக்குநர், பேராசிரியர், மருத்துவர் நா.ஜெ.முத்துக்குமார், இந்த மாநாடு ஆயுஷ் மருத்துவ முறைகளிலுள்ள வலிமையை உலகளவில் பறைசாற்றிடக் கூடிய களமாக அமையும் என்று கூறினார். மேலும், இந்த உச்சிமாநாட்டின் செயல்திட்டம், ஆதாரங்களின் அடிப்படையிலான ஆராய்ச்சி, பாரம்பரிய ஞானத்தின் பாதுகாப்பு, புதுமை, தர உறுதி மற்றும் டிஜிட்டல் மாற்றம் ஆகியவற்றில் இந்தியாவின் முன்னேற்றங்களுடன் வலுவாக ஒத்துப்போகிறது என்பதை அவர் வலியுறுத்தினார்.
"சமநிலையை மீட்டமைத்தல்: சுகாதாரம் மற்றும் நல்வாழ்வின் அறிவியல் மற்றும் நடைமுறை" என்ற அமர்வுடன் உச்சிமாநாடு தொடங்கும் என்று கூறிய டாக்டர் முத்துக்குமார், அதைத் தொடர்ந்து பாரம்பரிய மருத்துவ அறிவு முறைகள், சமமான அணுகல், பூமியின் ஆரோக்கியம் மற்றும் நிர்வாகம் பற்றிய விரிவான விவாதங்கள் நடைபெறும் என்று தெரிவித்தார். ‘பாரம்பரிய மருத்துவத்தை உலகமயமாக்குவதற்கான செயல்திட்டங்கள், ஆய்வு முறையியல்கள் மற்றும் அதன் பயன்பாடுகள், நலவாழ்விற்கு அறிவியல், பாரம்பரிய மருத்துவத்தின் புதிய கண்டுபிடிப்புகளைச் சந்தைக்குக் கொண்டு வருதல், அதை வளர்க்க முதலீடுகளை ஈட்டுதல்’ போன்ற தலைப்புகளில் இம்மாநாட்டின் அமர்வுகள் நடைபெறும் என்று அவர் எடுத்துரைத்தார்.
பாரம்பரியம் சார்ந்த மருத்துவ ஆய்வுகள், மருந்துச் செய்முறைப் பணிகள் (pharmacopeia), ஒழுங்குமுறை கட்டமைப்புகள், மருத்துவர்களின் திறன் மேம்பாடு, ஒருங்கிணைந்த சுகாதார முன்மாதிரிகள், பாரம்பரிய மருத்துவ ஆற்றல்களைக் கண்டறிதல் போன்றவற்றில் உச்சிமாநாட்டின் வாயிலாக இந்தியா உலகிற்கு முன்னோடியாக விளங்கித் தலைமை வகிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
****
AD/BR/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2202679)
வருகையாளர் எண்ணிக்கை : 71