சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
தமிழ்நாட்டில் விரைவு சிறப்பு நீதிமன்றங்களுக்கு ரூ.7 கோடி நிதி விடுக்கப்பட்டுள்ளது
இடுகை இடப்பட்ட நாள்:
11 DEC 2025 1:31PM by PIB Chennai
குற்றவியல் (திருத்த) சட்டம், 2018-ல் இயற்றப்பட்டதைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தின் [தாமாக முன்வந்து தாக்கல் செய்யப்பட ரிட் மனு (குற்றவியல்) எண். 1/2019] உத்தரவைத் தொடர்ந்து, பிரத்யேக போக்ஸோ (இ போக்ஸோ) நீதிமன்றங்கள் உட்பட விரைவு சிறப்பு நீதிமன்றங்களை நிறுவுவதற்கான மத்திய அரசின் நிதியுதவித் திட்டம் 2019 அக்டோபரில் தொடங்கப்பட்டது. பாலியல் வன்கொடுமை மற்றும் குற்றங்கள் தொடர்பான நிலுவையில் உள்ள வழக்குகளை பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் (போக்ஸோ) சட்டம், 2012-ன் கீழ் காலக்கெடுவிற்குள் விசாரித்து தீர்ப்பளிப்பதற்கு இந்த நீதிமன்றங்கள் அர்ப்பணிக்கப்பட்டுள்ளன.
இந்தத் திட்டம் இரண்டு முறை நீடிக்கப்பட்டுள்ளது, கடைசியாக 2026, மார்ச் 31 வரை நீடிக்கப்பட்டது. இதன் மூலம் 790 நீதிமன்றங்களை நிறுவ முடியும். இந்தத் திட்டத்தின் கீழ் நிதிச் செலவு ரூ.1952.23 கோடியாகும், இதில் ரூ.1207.24 கோடி மத்திய பங்காக நிர்பயா நிதியிலிருந்து செலவிடப்படும்.
இந்தத் திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து, மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு இந்தத் துறை ரூ.1108.97 கோடியை விடுவித்துள்ளது. மத்திய நிதியுதவி திட்டத்தின் (மத்திய பங்கு: மாநில பங்கு: 60:40, 90:10) விகிதத்தில் இந்த நிதி விடுவிக்கப்படுகிறது. ஒரு நீதித்துறை அதிகாரியின் ஊதியம் மற்றும் 7 துணைப் பணியாளர்கள் மற்றும் அன்றாட செலவுகளைச் சந்திப்பதற்கான நெகிழ்வு மானியம் ஆகியவற்றை ஈடுகட்ட இந்த நிதி விடுவிக்கப்படுகிறது. சம்பந்தப்பட்ட மாநிலம்/யூனியன் பிரதேசத்தில் செயல்படும் விரைவு சிறப்பு நீதிமன்றங்கள் /இ போக்ஸோ நீதிமன்றங்களின் எண்ணிக்கையால் தீர்மானிக்கப்படும் இந்த நிதி, மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு திருப்பிச் செலுத்தும் அடிப்படையில் விடுவிக்கப்படுகிறது. இதன்படி சென்ற நிதியாண்டில் தமிழ்நாட்டிற்கு ரூ.6.91 கோடியும் இந்த நிதியாண்டில் 8.12.2026 நிலவரப்படி ரூ.1.63 கோடியும் விடுவிக்கப்பட்டுள்ளது.
29 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் 30.09.2025 நிலவரப்படி 400 போக்ஸோ (இ போக்ஸோ) நீதிமன்றங்கள் உட்பட 773 விரைவு சிறப்பு நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 20 நீதிமன்றங்கள் தமிழ்நாட்டில் செயல்படுகின்றன.
இந்தத் தகவலை சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை இணையமைச்சர் திரு அர்ஜுன் ராம் மெக்வால் இன்று மாநிலங்களவையில் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2202164®=3&lang=1
***
AD/SMB/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2202532)
வருகையாளர் எண்ணிக்கை : 61