தேசிய மனித உரிமைகள் ஆணையம்
புதுதில்லியில் டிசம்பர் 10-ம் தேதி நடைபெறவுள்ள மனித உரிமைகள் தின விழாவில் குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு பங்கேற்கிறார்
प्रविष्टि तिथि:
07 DEC 2025 3:53PM by PIB Chennai
1950-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் டிசம்பர் 10-ம் தேதி மனித உரிமைகள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இது 1948-ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை, மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனத்தை ஏற்றுக்கொண்டதை நினைவுகூரும் வகையில் இந்த தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. கண்ணியம், சமத்துவம், சுதந்திரம் ஆகியவற்றுக்கான உலகளாவிய சாசனமாக அந்த பிரகடனம் மனித உரிமைகள் தொடர்பான உலகளாவிய முயற்சிகளை தொடர்ந்து வழிநடத்துகிறது.
உலகளாவிய கொள்கைகளை எதிரொலிக்கும் வகையில், இந்திய அரசியலமைப்பு, மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் - 1993 ஆகியவற்றின் அடிப்படையில் 1993 அக்டோபர் 12 அன்று இந்தியாவில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் நிறுவப்பட்டது. மனித உரிமைகள் தினம் என்பது அனைத்து தரப்பினரும் ஒவ்வொரு தனிநபரின் மனித உரிமைகளையும் மதிக்க, ஊக்குவிக்க, பாதுகாக்க உறுதியேற்கும் நாளாகும்.
2025 டிசம்பர் 10 அன்று புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த ஆண்டு மனித உரிமைகள் தின விழாவில், அரசு, சிவில் சமூகம், கல்வியாளர்கள், மனித உரிமை பாதுகாவலர்கள், ஐநா அதிகாரிகள், கள வல்லுநர்கள் என பல்வேறு தரப்பினர் கலந்து கொள்வார்கள். தேசிய மனித உரிமைகள் ஆணையத் தலைவர் நீதிபதி திரு வி ராமசுப்பிரமணியன், ஆணைய உறுப்பினர்கள், பிற பிரமுகர்கள் ஆகியோர் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சியில் குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு தலைமை விருந்தினராகக் கலந்து கொள்வார்.
இந்த நாளைக் குறிக்கும் வகையில், இந்த ஆண்டு மனித உரிமைகள் தினத்திற்காக ஐநா, 'தினசரி அத்தியாவசிய தேவைகள்' என்ற கருப்பொருளை தேர்வு செய்துள்ளது. இந்தியாவில் தேசிய மனித உரிமைகள் ஆணையம், 'தினசரி அத்தியாவசிய தேவைகளை உறுதி செய்தல்: அனைவருக்கும் பொது சேவைகளும் கண்ணியமும்' என்ற தலைப்பில் ஒரு தேசிய மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளது. இந்த மாநாட்டில் பிரதமரின் முதன்மை செயலாளர் டாக்டர் பி கே மிஸ்ரா முக்கிய உரை நிகழ்த்துகிறார்.
சுகாதாரம், கல்வி, வீட்டுவசதி, நீதி, நிதி உள்ளடக்கம், சமூகப் பாதுகாப்பு போன்ற அத்தியாவசிய தேவைகளும், சேவைகளும் வாழ்க்கைத் தரத்தை நிர்ணயிக்கும் அன்றாட அத்தியாவசியங்கள் ஆகும்.
அடிப்படை வசதிகளுக்கான சீரான அணுகலை உறுதி செய்வதற்கு பொறுப்பான நிர்வாகமும் திறமையான பொது சேவைகளும் அவசியமாகும் என்ற அடிப்படையில் இந்த கருப்பொருளில் விவாதங்கள் நடைபெறும்.
இந்த நிகழ்வுகள் https://webcast.gov.in/nhrc என்ற இணையதள முகவரியிலும், யூடியூபில் https://www.youtube.com/watch?v=zpEIhaD5mmM என்ற இணைப்பிலும் டிசம்பர் 10-ம் தேதி காலை 10.00 மணி முதல் நேரடியாக ஒளிபரப்பப்படும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2200014®=3&lang=1
***
SS/PLM/RJ
(रिलीज़ आईडी: 2200127)
आगंतुक पटल : 48