வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
அரியவகைக் கனிமங்கள், தூய்மையான எரிசக்தி மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் கனடா நாட்டுடன் இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர்
प्रविष्टि तिथि:
24 NOV 2025 12:40PM by PIB Chennai
அரியவகைக் கனிமங்கள், கனிம வளங்களைப் பதப்படுத்தும் தொழில்நுட்பங்கள், தூய்மையான எரிசக்தி, அணுசக்தி மற்றும் பன்முகத்தன்மை கொண்ட விநியோகச் சங்கிலி அமைப்பு போன்ற துறைகளில், கனடா நாட்டுடன் இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்புகள் கணிசமான அளவில் உள்ளது என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் தெரிவித்தார்.
புதுதில்லியில் உள்ள இந்திய - கனடா நாடுகளின் வர்த்தக சபையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம், குவாண்டம் கம்ப்யூட்டிங், இயந்திர கற்றல், அடுத்த தலைமுறைக்கான தரவு மையங்கள் போன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் இந்தியா வலுவான நன்மைகளை வழங்குகிறது என்றும், இவை உலகின் மிகப்பெரிய வருடாந்திர ஸ்டெம் (அறிவி\யல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம்) பட்டதாரிகளின் குழுவால் முழுமையாக ஆதரிக்கப்படுகிறது என்று கூறினார். கனடாவும், இந்தியாவும் இயற்கையான நட்பு நாடுகள் என்றும், பரஸ்பரம் இரு நாடுகளிலும் உள்ள வர்த்தகம் மற்றும் முதலீட்டாளர்களுக்கு குறிப்பிடத்தக்க வாய்ப்புகளை உருவாக்குகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்தியா-கனடா கூட்டு நடவடிக்கைகள், பரஸ்பர நம்பிக்கை, ஜனநாயக மாண்புகள் மற்றும் வளர்ச்சி ஆகியவற்றின் அடித்தளமாக உள்ளது என்றும் அவர் மேலும் கூறினார். வர்த்தகம், முதலீடு மற்றும் வளர்ந்து வரும் துறைகளில், சீரான முன்னேற்றத்திற்கான ஈடுபாட்டுடன், இருதரப்பு உறவுகள் வலுவாகவும், நிலையானதாகவும் உள்ளது என்று அவர் தெரிவித்தார்.
ஜி-20 உச்சிமாநாட்டின் போது பிரதமர் திரு நரேந்திர மோடி, கனடா பிரதமர் திரு மார்க் கார்னி இடையே அண்மையில் நடந்த சந்திப்பைச் சுட்டிக்காட்டிய அவர், 2030-ம் ஆண்டிற்குள் உயர் அளவிலான லட்சிய இலக்குடன் விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தம் மற்றும் வர்த்தகத்தை இரு மடங்காக அதிகரிப்பது குறித்த இருதரப்பு பேச்சுவார்த்தைகளைத் தொடங்க இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டுள்ளதாக அமைச்சர் திரு கோயல் எடுத்துரைத்தார். இந்த விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தம், இரு நாடுகளுக்கும் இடையேயான பரஸ்பரம் நம்பிக்கையை பிரதிபலிப்பதாக உள்ளது என்றும், முதலீட்டாளர்களின் நம்பிக்கையை வலுவடையச் செய்கிறது என்றும், பரஸ்பர மரியாதை அடிப்படையில், பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான வலுவான கட்டமைப்பை வழங்குகிறது என்றும் திரு பியூஷ் கோயல் கூறினார்.
250 கிகாவாட் தூய்மை எரிசக்தி உற்பத்தித் திறன் உட்பட, 500 கிகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட இந்தியாவின் தேசிய மின் வழித்தடம், செயற்கைத் தொழில்நுட்பத்தின் உந்து சக்தி, உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கத் தேவையான நெகிழ்வுத்தன்மையை வழங்குகிறது என்பதை திரு கோயல் சுட்டிக் காட்டினார். 2030-ம் ஆண்டிற்குள் தூமை எரிசக்திக்கான உற்பத்தித் திறனை 500 கிகாவாட் என இரட்டிப்பாக்க வேண்டும் என்ற இந்தியாவின் லட்சியம், நம்பகமான மற்றும் நிலையான நட்பு நாடாக இந்தியாவை நிலைநிறுத்துகிறது என்றும், உலகளவில் போட்டிதன்மை விகிதங்களில் 24 மணிநேரமும் தூய்மையான எரிசக்தியை வழங்கக்கூடிய ஒரு சில ஜனநாயக நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்றும் அவர் குறிப்பிட்டார்.
***
(Release ID: 2193444)
SS/SV/SH
(रिलीज़ आईडी: 2193736)
आगंतुक पटल : 4