பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
நாடு தழுவிய டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் முகாம் சென்னை தாம்பரம் விமானப்படை வளாகத்தில் நாளை (11.11.2025) நடைபெறுகிறது
Posted On:
10 NOV 2025 1:50PM by PIB Chennai
மத்திய பணியாளர், பொது குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதிய அமைச்சகத்தின் கீழ் இயங்கிவரும் ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறை சார்பில் நாடு தழுவிய டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிப்பதற்கான முகாம், நவம்பர் 1-ம் தேதி தொடங்கி 30-ம் தேதி வரை நடைபெறுகிறது. ஓய்வூதியதாரர்களின் வாழ்க்கையை எளிதாக்குவதற்கும், டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் ஓய்வூதியதாரர்களுக்கு டிஜிட்டல் அதிகாரம் வழங்குவதையும் நோக்கமாக கொண்டு மத்திய அரசு இத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
இந்த பிரச்சார இயக்கத்தின் ஒரு பகுதியாக சென்னை தாம்பரத்தில் உள்ள விமானப்படை வளாகத்தில் உள்ள நிகழ்ச்சி அரங்கில், டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிப்பதற்கான முகாம் நாளை (11 நவம்பர் 2025) பாதுகாப்பு தலைமை கணக்கு கட்டுப்பாட்டு அலுவலகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
டிஜிட்டல் முறையில் ஓய்வூதியதாரர்கள் தங்களது ஆயுள் சான்றிதழ்களை சமர்ப்பிப்பதற்கு தேவையான உதவிகளை அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் செய்வர். இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் ஆதார் தொடர்பான ஆவணங்களை புதுப்பிப்பது மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்பது உட்பட பல்வேறு அம்சங்கள் இந்த முகாமில் மேற்கொள்ளப்பட உள்ளது.
2024-ம் ஆண்டு அரசியல் சாசன தினத்தையொட்டி, அன்றைய தினத்தில் வானொலியில் ஒலிபரப்பான மனதின் குரல் நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு மோடி, டிஜிட்டல் இந்தியா திட்டம், ஓய்வூதிய நடைமுறைகளை எளிதாக்கியுள்ளதாக குறிப்பிட்டார்.
80 வயதிற்கும் மேற்பட்ட மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளி ஓய்வூதியதாரர்களுக்கு சிறப்பு கவனம் செலுத்துவதன் மூலம் அவர்களது வீடுகளுக்கே சென்று டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் தொடர்பான சேவைகளை இந்திய அஞ்சலக பேமெண்ட் வங்கி மேற்கொண்டு வருகிறது.
இதன்மூலம் 78.26 லட்சம் டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றில் 46.36 லட்சம் முக அங்கீகார நடவடிக்கை வாயிலாக உருவாக்கப்பட்டுள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2188290
***
SS/SV/LDN/SH
(Release ID: 2188461)
Visitor Counter : 11