குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

தமிழ் இலக்கியம் மற்றும் கலாச்சாரத்தில் சமண மதத்தின் வரலாற்று முக்கியத்துவம் சார்ந்த பங்களிப்பு உள்ளது - குடியரசு துணைத் தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன்

Posted On: 08 NOV 2025 2:04PM by PIB Chennai

புதுதில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் இன்று நடைபெற்ற சமண மத ஆச்சார்ய ஸ்ரீ ஹன்ஸ்ரத்னா சூரிஷ்வர்ஜி மகாராஜ் - ன் எட்டாவது 180 உபவாச பர்ண விழாவில் குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், திவ்யதபஸ்வி ஆச்சார்ய ஹன்ஸ்ரத்ன சூரிஷ்வர்ஜி மகாராஜி-ன் புனித மகாபர்ணத்தில் பங்கேற்பது மிகுந்த பாக்கியமாகக் கருதுவதாகத் தெரிவித்தார்.

உலகின் பழமையான மதங்களில் ஒன்றான சமண மதத்தின் ஆழமான பங்களிப்புகள் குறித்து எடுத்துரைத்த அவர், அதன் போதனைகளான அஹிம்சை (வன்முறையின்மை), சத்யா (உண்மை), அபரிகிரஹா (சொத்துரிமையின்மை) மற்றும் அனேகாந்தவாத (உண்மைக்கான பல்வேறு அணுகுமுறைகள்) ஆகியவை இந்தியாவிலும், உலகம் முழுவதிலும் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார். இந்தியாவின் சுதந்திரப் போராட்ட இயக்கத்தில், மகாத்மா காந்தி ஏற்றுக்கொண்ட அஹிம்சை, உலகளவில் அமைதி முறையிலான செயல்பாடுகளை தொடர்ந்து ஊக்குவித்து வருவதாக அவர் கூறினார். சைவ உணவு, விலங்குகள் மீதான இரக்க குணம், நீடித்த வாழ்வியல் முறை ஆகியவற்றில், சமண மதத்தின் நெறிமுறைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு ஒரு முன்மாதிரியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன என்பதை அவர் எடுத்துரைத்தார்.

தனிப்பட்ட முறையில் தாம் மேற்கொண்ட பயணத்தை நினைவு கூர்ந்த திரு ராதாகிருஷ்ணன், 25 ஆண்டுகளுக்கு முன்பு காசிக்குச் சென்ற பிறகு சைவ உணவை ஏற்றுக்கொண்டதாகவும், அது பணிவு, முதிர்ச்சி மற்றும் அனைத்து உயிரினங்கள் மீதும் அன்பை வளர்க்க உதவியதை உணர முடிந்ததந்தையும் அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, பிராகிருதத்திற்கு 'செம்மொழி' அந்தஸ்து வழங்கவும், சமண மதத்தின் கையெழுத்துப் பிரதிகளைப் பாதுகாக்க ஞான பாரதம் இயக்கம் மேற்கொண்ட முயற்சிகளுக்கும் அவர் பாராட்டுத் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் சமண மதம் பரவிய வரலாறு குறித்தும், தமிழ் கலாச்சாரத்தில் அதன் பரந்த செல்வாக்கு குறித்தும் குடியரசு துணைத் தலைவர் சுட்டிக் காட்டினார். சங்க காலத்திலும், அதற்குப் பிந்தைய காலத்திலும், தமிழ் இலக்கியத்திற்கு சமண மதம் ஆற்றிய  குறிப்பிடத்தக்க பங்களிப்புகள் குறித்து அவர் எடுத்துரைத்தார். இளங்கோவடிகளின் சிலப்பதிகாரம், கொங்கு வெளிரின் பெருங்கதை போன்ற பாரம்பரிய படைப்புகளை மேற்கோள் காட்டிய அவர், அவை அகிம்சை, வாய்மை மற்றும் துறவு ஆகியவற்றின் தத்துவ நெறிமுறைகளை பிரதிபலிப்பதாக உள்ளது என்று பெருமிதம் தெரிவித்தார். திருக்குறள், சங்க இலக்கியம் போன்ற நூல்கள் சமண மதத்தின் தாக்கங்களைக் கொண்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார். வரலாற்று ரீதியாக கற்றல் மையங்களாகச் செயல்பட்ட தமிழ்நாட்டில், பல சமண மடங்கள் இருப்பதை திரு ராதாகிருஷ்ணன் சுட்டிக்காட்டினார்.

உண்மையான வலிமை என்பது செல்வத்திலோ அல்லது பதவியிலோ அல்ல என்றும், மாறாக கட்டுப்பாடு, கருணை மற்றும் ஒழுக்கம் ஆகிய பண்புகளில் உள்ளது என்பதை நிரூபித்துள்ளதற்காக ஆச்சார்யா ஹன்ஸ்ரத்னா சூரிஷ்வர்ஜி மகாராஜ் - க்கு திரு ராதாகிருஷ்ணன் பாராட்ட்டுத் தெரிவித்தார். ஆச்சார்யா-ஜியின் "கலாச்சாரம் மற்றும்  குடும்பத்தை பாதுகாக்க வேண்டும், தேசத்தைக் கட்டமைக்க வேண்டும்" என்ற பிரச்சாரம் சமூக மாண்புகளை நிலைநிறுத்தவும், குடும்ப அமைப்புக்களை வலுப்படுத்தவும், நெகிழ்வுத்தன்மையுடன் கூடிய நாட்டைக் கட்டமைப்பதற்கு உத்வேகம் அளிப்பதாகவும் உள்ளது என்று திரு சி பி ராதாகிருஷ்ணன் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2187776

***

AD/SV/RJ


(Release ID: 2187804) Visitor Counter : 13