உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்
புதுதில்லியில் உள்ள உடான் மாளிகையில், குழந்தைகள் காப்பகத்தை மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு ராம்மோகன் நாயுடு திறந்து வைத்தார்
இடுகை இடப்பட்ட நாள்:
01 NOV 2025 9:40AM by PIB Chennai
மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு ராம்மோகன் நாயுடு, புதுதில்லியில் உள்ள உடான் மாளிகையில், புதிதாக அமைக்கப்பட்டுள்ள குழந்தைகள் காப்பக கட்டிடத்தைத் திறந்து வைத்தார்.
இது அமைச்சகத்தின் பணியாளர்கள் அனைவரையும் உள்ளடக்கிய, ஆதரவான, நற்புணர்வுடன் கூடிய பணியிடச் சூழலை மேம்படுத்துவதற்கான முன்முயற்சியின் குறிப்பிடத்தக்க நடவடிக்கையாகும்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட குழந்தைகள், மத்திய அமைச்சருக்கு மலர்களால் வரவேற்பு அளித்தனர். இதனையடுத்து மத்திய அமைச்சர் திரு ராம்மோகன் நாயுடு, குழந்தைகள் காப்பகப் பகுதி, அதற்கான உபகரணங்கள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களைப் பார்வையிட்டார். மேலும் பெற்றோர்கள் மற்றும் குழந்தைகளுடன் அமைச்சர் கலந்துரையாடினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர், குழந்தைகளுக்கு பொம்மைகள் மற்றும் இனிப்புகளை வழங்கினார்.
ஆறு மாதங்கள் முதல் ஆறு வயது வரையிலான குழந்தைகளின் வளர்ச்சி குறித்த கண்காணிப்பு, ஊட்டச்சத்து, விளையாட்டு, மழலையர் பள்ளியில் கற்றல் மற்றும் மருத்துவ பராமரிப்பு உள்ளிட்ட வழக்கமான பராமரிப்புக்காக, இந்த குழந்தைகள் காப்பகம் அமைக்கப்பட்டுள்ளது. மழலையர் பள்ளிக் குழந்தைகளுக்கு கற்றல் மீதான ஆர்வம் மற்றும் உத்வேகம் அளிக்கும் வகையில், இந்த காப்பகத்தின் சூழல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காப்பகத்தின் தரை தளத்தில், சிசிடிவி கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட்டுள்ளதுடன், தேவையான இதர பாதுகாப்பு அம்சங்களுடன் நன்கு பாதுகாக்கப்பட்ட பகுதியில் இந்த காப்பகம் அமைக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற வசதிகள், சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம், இந்திய விமான நிலைய ஆணையரகம், சிவில் விமானப் போக்குவரத்துத் தலைமை இயக்குனரகம், சிவில் விமானப் போக்குவரத்து பாதுகாப்பு வாரியம், விமான விபத்து குறித்த புலனாய்வு அமைப்பு, மற்றும் இந்திய விமான நிலைய பொருளாதார ஆணையம் உள்ளிட்ட அமைப்புகளுடன் இணைக்கப்பட்ட மற்றும் துணை அலுவலகங்களின் பணியாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவிடும். இதனால் ஊழியர்களின் பணி மற்றும் குழந்தை பராமரிப்பு போன்ற பொறுப்புகளை மிகவும் எளிதாக சமநிலைப்படுத்த முடியும்.
அரசு அலுவலகங்களின் வளாகங்களுக்குள் பயன்படுத்தப்படாத பகுதிகளை உற்பத்தி ரீதியாகப் பயன்படுத்துதல், பணியாளர் நலன் மற்றும் பணியிடச் சூழலின் செயல்திறனை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும் சிறப்பு பிரச்சாரம் 5.0 - ன் கீழ், சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சக முயற்சிகளின் ஒரு பகுதியாக குழந்தைகள் காப்பகத்தை அமைக்கும் பணி செயல்படுத்தப்பட்டுள்ளது.
***
(Release ID: 2185019)
AD/SV/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2185212)
வருகையாளர் எண்ணிக்கை : 32