குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு குடியரசு துணைத்தலைவர் மரியாதை செலுத்தி, சிறந்த போராளி, துணிச்சலான தேசபக்தர் மற்றும் ஆன்மீகப் பேரறிஞர் என்று புகழாரம் சூட்டினார்
Posted On:
30 OCT 2025 7:51PM by PIB Chennai
குடியரசு துணைத்தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன், கோயம்புத்தூர், திருப்பூர், மதுரை மற்றும் ராமநாதபுரம் ஆகிய இடங்களில் நடைபெற்ற தொடர்ச்சியான நிகழ்வுகளில் கலந்து கொண்ட பிறகு, இன்று தனது தமிழகப் பயணத்தை நிறைவு செய்தார். அக்டோபர் 28 முதல் 30 வரை இந்தப் பயணம் அமைந்திருந்தது.
தனது பயணத்தின் இறுதி நாளான இன்று, குடியரசு துணைத்தலைவர், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பசும்பொன்னுக்கு சென்று, மதிப்பிற்குரிய தலைவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி மற்றும் குரு பூஜையின் புனித நிகழ்வில் பங்கேற்று அவருக்கு மரியாதை செலுத்தினார்.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், ஒரு சிறந்த மாவீரர், துணிச்சலான போராளி, மரியாதைக்குரிய துறவி மற்றும் உண்மையான தேசபக்தர் என்றும், அவர் தனது வாழ்க்கையை நாட்டிற்கும், மக்களுக்கும் அர்ப்பணித்தார் என்றும் குடியரசு துணைத்தலைவர் கூறினார். முத்துராமலிங்கத் தேவர், நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் அர்ப்பணிப்புள்ள சீடர் என்றும், அவர் சிந்தனையிலும் செயலிலும் தைரியம், தியாகம் மற்றும் தேசபக்தியை வெளிப்படுத்தியவர் என்றும் திரு ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டார். முத்துராமலிங்கத் தேவர் அனைத்து சமூகங்கள் மற்றும் நம்பிக்கைகளுக்கும் ஒரு தலைசிறந்த தலைவராக இருந்தார் என்று குடியரசு துணைத்தலைவர் தெரிவித்தார்.
கடந்த 25 ஆண்டுகளாக பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி மற்றும் குரு பூஜையில் பங்கேற்றதை பாக்கியமாகக் கருதுவதாகக் கூறிய திரு சி. பி. ராதாகிருஷ்ணன், பதவியேற்ற பிறகு தனது முதல் தமிழகப் பயணத்தின் போது இந்த ஆண்டு கொண்டாட்டங்களில் மீண்டும் கலந்து கொள்வது, மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவித்தார். முத்துராமலிங்கத் தேவரின் புகழ், மக்களின் இதயங்களில் என்றென்றும் நிலைத்திருக்கும் என்றும் அவர் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2184341
(Release ID: 2184341)
***
AD/BR/SH
(Release ID: 2184412)
Visitor Counter : 11