குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
சுற்றுலா மற்றும் கலாச்சார அமைச்சகத்தின் முக்கிய முன்முயற்சிகள் குறித்து குடியரசுத் துணைத்தலைவர் கேட்டறிந்தார்
Posted On:
17 OCT 2025 6:11PM by PIB Chennai
மத்திய கலாச்சார மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத், இணையமைச்சர்கள் திரு ராவ் இந்தர்ஜித் சிங், திரு சுரேஷ் கோபி ஆகியோர் குடியரசுத் துணைத்தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணனை நாடாளுமன்றத்தில் இன்று சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது அமைச்சகத்தின் செயல்பாடுகள், சாதனைகள், முக்கிய முன்முயற்சிகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் பற்றி குடியரசுத் துணைத்தலைவரிடம் அமைச்சர்கள் விளக்கினார்கள்.
சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறைகளை ஊக்குவிப்பதற்கு அரசு தீவிரம் காட்டி வரும் முயற்சிகள் பற்றி அவருக்கு எடுத்துரைக்கப்பட்டது. அமைச்சகத்தின் பல்வேறு முயற்சிகளைப் பாராட்டிய திரு ராதாகிருஷ்ணன், இந்தியாவின் சாத்தியமான சுற்றுலாவை மேலும் வலுப்படுத்துவதற்கு, எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளைப் பரிந்துரைத்தார். மருத்துவம், ஆன்மீக சுற்றுலாவில் கவனம் செலுத்தி, குறிப்பிட்ட தலங்களின் சுற்றுலாவை மேம்படுத்த அவர் யோசனை அளித்தார். சர்வதேச சுற்றுலா ஏற்பாட்டாளர்களுடன் ஒருங்கிணைந்து, கலாச்சார, பண்டிகை மற்றும் பகுதி வாரியான சுற்றுலா திட்டங்களை உருவாக்குவது, உலகத்தரம் வாய்ந்த சுற்றுலா அனுபவத்தை வழங்குவதற்காக பங்குதாரர்கள் அனைவருடனும் இணைந்து பணியாற்றுவது ஆகியவற்றின் முக்கியத்துவத்தை அவர் அடிக்கோடிட்டு காட்டினார்.
இந்திய கலாச்சார பாரம்பரியத்தின் பாதுகாப்பு மற்றும் மேம்பாடு உள்ளிட்ட கலாச்சார அமைச்சகத்தின் பணிகள் குறித்தும் குடியரசுத் துணைத் தலைவருக்கு விளக்கப்பட்டது.
இந்தியாவின் வளமான கலாச்சார பாரம்பரியத்தை எதிர்கால சந்ததியினருக்காகப் பாதுகாப்பதில் நிலையான கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை குடியரசுத் துணைத் தலைவர் வலியுறுத்தினார். அருங்காட்சியக நிர்வாகத்தில் உலகளாவிய சிறந்த நடைமுறைகளை ஏற்றுக்கொள்வதன் முக்கியத்துவத்தை அவர் எடுத்துரைத்தார். இந்தியாவின் தொடர்ச்சியான பொருளாதார வளர்ச்சி, கலாச்சார பாதுகாப்பு மற்றும் ஊக்குவிப்பு முயற்சிகளை மேலும் வலுப்படுத்தும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2180462
(Release ID: 2180462)
AD/BR/SH
(Release ID: 2180603)
Visitor Counter : 8