சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
இந்திய தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளுடன் ஆப்பிரிக்க நாட்டின் தொழில்முனைவோரையும் ஒருங்கிணைக்கும் சன்சிபார் புத்தாக்க தினம்: சென்னை ஐஐடி ஏற்பாடு
இடுகை இடப்பட்ட நாள்:
16 OCT 2025 3:38PM by PIB Chennai

இந்தியாவில் வளர்ந்து வரும் தொழில்நுட்ப சக்தி மற்றும் சிறந்த ஆராய்ச்சி பணிகளுடன் ஆப்பிரிக்காவின் தொழில்முனைவோரை ஒருங்கிணைக்கும் வகையில் சன்சிபார் புதுமை கண்டுபிடிப்புகள் தினம் என்ற நிகழ்ச்சியை சென்னை ஐஐடி ஏற்பாடு செய்துள்ளது.
மண்டல மற்றும் சர்வதேச அளவிலான சவால்களுக்கு நீடித்த தீர்வு காணும் வகையிலும், புத்தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையிலும், புதுமை கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் வகையிலும், இந்தியா- ஆப்பிரிக்கா இடையே ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையிலும் இம்மாதம் 4-ம் தேதி அன்று சன்சிபார் நகரில் உள்ள ஐஐடி வளாகத்தில் இதற்கான நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் டான்சானியாவில் உள்ள இளைஞர்களால் நடத்தப்பட்டு வரும் புத்தொழில் நிறுவனங்கள் காணொலி வாயிலாக கலந்துகொண்டன. சன்சிபார் நகரில் உள்ள ஐஐடி வளாகத்தில் செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி ஆய்வகம் மற்றும் செயற்கை கோள் வடிவமைப்பு நிறுவனத்தை உருவாக்குவதற்காக அடுத்த ஐந்து ஆண்டுகள் ஒரு லட்சம் அமெரிக்க டாலர் அளவில் முதலீடு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்பிரிக்காவில் விரைவாக வளர்ந்து வரும் சந்தை வாய்ப்புகளுடன் சென்னை ஐஐடி கல்வி நிறுவனத்தின் புதுமை கண்டுபிடிப்புகளுக்கான சூழல் அமைப்பையும் ஒருங்கிணைத்து சன்சிபார் நகரில் வலுவான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளுக்கான அமைப்பு உருவாக்கப்படவுள்ளது. தூய்மை எரிசக்தி, டிஜிட்டல் மாற்றம், தொழில்நுட்பத்தை உள்ளடக்கிய பல்வேறு முன் முயற்சிகளை இருநாடுகளும் இணைந்து மேற்கொள்ளும்.
நீடித்த புதுமை கண்டுபிடிப்புகள் மற்றும் கண்டங்கள் கடந்த ஒத்துழைப்பு ஆகியவற்றை நோக்கமாக கொண்டு இந்தியா- ஆப்பிரிக்கா இடையே 11 புத்தொழில் நிறுவனங்களின் முன் முயற்சிகள் குறித்து முதல்முறையாக இந்த நிகழ்ச்சி காட்சிப்படுத்தியது.
***
SS/SV/AG/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2179865)
வருகையாளர் எண்ணிக்கை : 18