சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

புதுச்சேரியில் முக்கியத்துவம் வாய்ந்த தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களை மத்திய அமைச்சர் திரு நிதின் கட்கரி நாட்டுக்கு அர்ப்பணித்தார்

प्रविष्टि तिथि: 13 OCT 2025 7:26PM by PIB Chennai

 

உயிரி எரிபொருள் மற்றும் மாற்று எரிபொருள் உற்பத்தியில் இந்தியா உலகில் முன்னணி நாடாக உருவெடுத்து வருகிறது என்று மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் இன்று (13 அக்டோபர் 2025) அவர், 3 தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியதுடன், முடிவுற்ற திட்டங்களைத் தொடங்கி வைத்து பேசினார்.

கடந்த 2014-ம் ஆண்டில் 14 லட்சம் கோடி ரூபாயாக இருந்த வாகன உற்பத்தித் துறை தற்போது 22 லட்சம் கோடி ரூபாயாக வளர்ச்சிக் கண்டுள்ளதாகவும், இதன் மூலம் நாட்டில் 4.5 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், வாகன ஏற்றுமதி உத்வேகம் பெற்றுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

புதுச்சேரி – பூண்டியாங்குப்பம் இடையே தேசிய நெடுஞ்சாலை எண் 32-ல் 1,588 கோடி ரூபாய் செலவில்  38 கிமீ தொலைவிலான நான்கு வழிச்சாலையை அவர் இன்று நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார். இதே நெடுஞ்சாலையில் இந்திரா காந்தி சதுக்கம், ராஜீவ் காந்தி சதுக்கத்துக்கு இடையே 4 கிமீ தொலைவிற்கு 436 கோடி ரூபாய் செலவிலான விரிவாக்கப் பணிகளுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். கூடுதலாக கிழக்குக் கடற்கரைச் சாலையில் 25 கோடி ரூபாய் செலவில் 14 கிமீ தொலைவிலான சாலை மேம்பாட்டுப் பணிகளுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.

 

நகராட்சிகளால் சேகரிக்கப்படும் கழிவுகளைப் பயன்படுத்தி சாலைகள் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இதற்கென இதுவரை 18 லட்சம் டன் கழிவுகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். மாற்று எரிபொருள்களான எத்தனால், இயற்கை எரிவாயு மற்றும் மின்சாரத்தில் இயங்கக்கூடிய  எஞ்சின்களுடன்  டிராக்டர் உற்பத்தி செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்திய அவர், மின்சார டிராக்டர்களால் விவசாயிகள் ஆண்டுதோறும் 1.5 லட்சம் ரூபாய்  சேமிக்க முடியும் என்று அவர் கூறினார். இந்தியாவில் சரக்குப் போக்குவரத்துக்கான செலவுகள் 16 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாகக் குறைந்துள்ளது என்றும் மேம்படுத்தப்பட்ட சாலைக் கட்டமைப்பு வசதிகள் மற்றும் எரிபொருள் சேமிப்புத் திறன் ஆகியவை காரணமாக வரும் டிசம்பர் மாதத்திற்குள் இது 9 சதவீதமாகக் குறையும் என்று அமைச்சர் திரு நிதின் கட்கரி நம்பிக்கை தெரிவித்தார்.

 

***

AD/SS/SV/KPG/SH

 


(रिलीज़ आईडी: 2178624) आगंतुक पटल : 30
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English