சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
ஆரோக்கியமான பெண் வலிமையான குடும்பம் : ஜிப்மரில் வில்லுப்பாட்டு, நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள்
Posted On:
30 SEP 2025 4:56PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடியால் தொடங்கிவைக்கப்பட்ட 'ஆரோக்கியமான பெண் வலிமையான குடும்பம்' திட்டத்தின் ஒரு பகுதியாக மகளிரின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையிலும் அவர்களது குடும்ப ஆரோக்கியத்தை வலுப்படுத்தும் வகையிலும் ஜிப்மர் மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு வில்லுப்பாட்டு, நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டன.

வில்லுப்பாட்டு நிகழ்ச்சியை ஜிப்மர் செவிலியர் துறையைச் சேர்ந்த செவிலியர்கள் வழங்கினர். பாரம்பரிய கலை வடிவத்தைப் பயன்படுத்தி முக்கியமான சுகாதார செய்திகளை மக்கள் எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் வில்லுப்பாட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவத் துறையைச் சேர்ந்த மருத்துவ நிபுணர்கள் பெண்கள் ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினர்.
மார்பக மற்றும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் பரிசோதனை, பேப் ஸ்மியர் சோதனை. ஹெச்பிவி தடுப்பூசி. மாதவிடாய் சுகாதாரம், பிரசவத்திற்கு முந்தைய பராமரிப்பு, சுகாதாரம் அகியவற்றில் கவனம் செலுத்துவதன் மூலம் வழக்கமான மகளிர் மருத்துவ ஆலோசனைகளின் படி உரிய சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட வேண்டியதன் அவசியத்தை மருத்துவர்கள் எடுத்துரைத்தனர். இது போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுடன் தொடக்க கால நோய் கண்டறிதல், உரிய நேரத்தில் சிகிச்சை அளித்தல், குறிப்பிட்ட கால இடைவெளியில் உடல் பரிசோதனை செய்து கொள்ளுதல், நோய் தடுப்பு முறைகளை முறையாக பின்பற்றுதல் ஆகியவை மகளிரின் ஆரோக்கியத்தைப் பேண உதவிடும்.
செவிலியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களின் ஒருங்கிணைந்த முயற்சிகள் வலுவான சமூக கட்டமைப்பு மற்றும் வலிமையான குடும்பத்திற்கு மகளிரின் ஆரோக்கியம் மிக முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை வலியுறுத்தும் வகையில் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் அமைந்திருந்தன.
***
SS/SV/RJ
(Release ID: 2173231)
Visitor Counter : 20