சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
இந்திய தகவல் பணி பயிற்சி அலுவலர்கள் அதிகாரத்துவ மனநிலையைக் கைவிட வேண்டும் என்று தமிழ்நாடு ஆளுநர் திரு ஆர். என். ரவி வலியுறுத்தியுள்ளார் போலிச் செய்திகளை திறன்பட எதிர்த்துப் போராடுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்
Posted On:
18 SEP 2025 7:30PM by PIB Chennai
தமிழ்நாடு ஆளுநர் திரு ஆர்.என். ரவி, 2025 செப்டம்பர் 18 அன்று சென்னையில் 2009, 2023, 2024 ஆம் ஆண்டு தொகுதிகளின் இந்திய தகவல் பணி (IIS) பயிற்சி அலுவலர்களிடையே உரையாற்றினார். போலிச் செய்திகள் பரவலாக நிலவும் இந்தக் காலகட்டத்தில், அவர்களை துடிப்பான, புதுமையான தகவல் தொடர்பு திறன் கொண்டவர்களாக செயல்படுமாறு அவர் வலியுறுத்தினார். அரசு குறித்த பொதுமக்களின் கருத்தை வடிவமைப்பதில் அவர்களின் பங்கு மிக முக்கியமானது என்றும், அது பெரும்பாலும் குறைத்து மதிப்பிடப்படுகிறது என்றும் ஆளுநர் குறிப்பிட்டார்.
தவறான செய்திகளை அளிப்பதால் ஏற்படும் ஆபத்துகளை எடுத்துரைத்த ஆளுநர், இதுபோன்ற தகவல்கள் பொதுமக்களின் நம்பிக்கையைக் குறைப்பதுடன், அதிருப்தியைத் தூண்டுகின்றன, இறுதியில் அராஜகத்திற்கு வழிவகுக்கும் என்றும் எச்சரித்தார். உண்மையைத் திறம்பட பரப்புவதே ஐஐஎஸ்-ன் முக்கிய சவால் என்றும் அவர் குறிப்பிட்டார். "தவறான செய்திகளை எதிர்த்துப் போராடுவது சவாலானதாக இருக்கும், மேலும் இதில் இந்திய தகவல் பணி முக்கிய பங்கு வகிக்கிறது" என்று அவர் கூறினார்.

பயிற்சி பெறுபவர்கள், வழக்கமான அதிகாரத்துவ அணுகுமுறைக்கு பதிலாக தொழில்முனைவு உணர்வை ஏற்றுக்கொள்ளுமாறு ஆளுநர் அறிவுறுத்தினார். அரசு "ஒரே குரலில்" பேசுவதை உறுதிசெய்யும் வகையில் முக்கிய உள்ளடக்கத்தை மையப்படுத்தும் ஒரு உத்தியை அவர் ஆதரித்தார். அதே நேரத்தில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளூர் சூழலின் அடிப்படையில் செய்திகளை மாற்றியமைக்க கள அலுவலர்களை கேட்டுக்கொண்டார்.
அதிகாரத்துவம் அரசிற்கு அர்ப்பணிப்புடன் சேவை செய்ய வேண்டும், அலட்சியத்துடன் அல்ல, என்பதை அவர் அலுவலர்களுக்கு நினைவூட்டினார். தனிப்பட்ட முறையில், பணிவின் முக்கியத்துவத்தைப் பற்றி பேசிய அவர், பொதுமக்களையும் அவர்களுக்குக் கீழ் பணிபுரிபவர்களையும் மரியாதையுடனும் பச்சாதாபத்துடனும் நடத்துமாறு அலுவலர்களை கேட்டுக் கொண்டார்.
பயிற்சி பெறுபவர்கள் உடல் ரீதியாகவும், அறிவு ரீதியாகவும், உணர்வுப் பூர்வமாகவும் முழுமையான தனிப்பட்ட வளர்ச்சியைத் தொடரவும், தங்கள் சேவைக் காலம் முழுவதும் ஆர்வத்துடன் இருக்கவும் ஆளுநர் ஊக்குவித்தார். தேசத்திற்கு சேவை செய்வதற்காக அர்ப்பணிக்கப்பட்ட வெற்றிகரமான மற்றும் தாக்கத்தை ஏற்படுத்தும் வாழ்க்கைக்காக பயிற்சி அலுவலர்களுக்கு வாழ்த்துளைத் தெரிவித்து ஆளுநர் தமது உரையை நிறைவு செய்தார்.

AD/BR/SH
(Release ID: 2168307)