பாதுகாப்பு அமைச்சகம்
ஆபரேஷன் சிந்தூர், நமது ஆயுதப்படைகளின் வீரத்தின் கதை மட்டுமல்ல, தற்சார்பு இந்தியா மற்றும் இளைஞர்களின் கண்டுபிடிப்புகளின் கதையும் கூட: பாதுகாப்பு அமைச்சர்
Posted On:
30 AUG 2025 9:34PM by PIB Chennai
ஐடெக்ஸ் வெற்றியாளரான ராஃபே எம்ஃபிரின் புத்தொழில் நிறுவனத்தின் அதிநவீன சோதனை ஆலையை, ஆகஸ்ட் 30, 2025 அன்று உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில், பாதுகாப்பு அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் திறந்து வைத்தார். கூட்டத்தில் உரையாற்றிய அவர், ஆபரேஷன் சிந்தூர் என்பது இந்திய ஆயுதப் படைகளின் வீரம் மட்டுமல்ல, தற்சார்பு இந்தியா மற்றும் நாட்டின் விஞ்ஞானிகள் மற்றும் இளைஞர்களின் புதுமையின் கதையும் கூட என்று கூறினார். இளம் கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் இந்தியத் தொழில்களால் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட உபகரணங்களை ஆயுதப் படைகள் விரைவாக ஏற்றுக்கொண்டதில் அவர் பெருமை தெரிவித்தார்.
ராஃபே எம்ஃபிர் மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ) இணைந்து வெறும் 14 மாதங்களுக்குள் உருவாக்கிய மூன்று தயாரிப்புகள் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது வெற்றிகரமாக பயன்படுத்தப்பட்டதில் பாதுகாப்பு அமைச்சர் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். தொழில்நுட்ப திறனில் இந்தியா இனி எந்த நாட்டையும் விட பின்தங்கவில்லை என்பதற்கு இது தெளிவான சான்றாகும் என்று அவர் கூறினார்.
ஆபரேஷன் சிந்தூர் பற்றி குறிப்பிடுகையில், ஆயுதப்படைகள் வெறும் 22 நிமிடங்களுக்குள் பயங்கரவாதிகளுக்கும் அவர்களைக் கையாளுபவர்களுக்கும் அவர்கள் நினைத்துப் பார்க்க முடியாத வகையில் தகுந்த பதிலடி கொடுத்ததாக அமைச்சர் கூறினார். உறுதிப்பாடு, தைரியம் மற்றும் அறிவியல் ஒன்றிணைந்தால், சாத்தியமற்றதைக் கூட சாத்தியமாக்க முடியும் என்ற உண்மையை இந்த நடவடிக்கை மீண்டும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என்று அவர் மேலும் கூறினார்.
இன்று இந்தியா உள்நாட்டிலேயே ட்ரோன்களை வடிவமைத்து, உருவாக்கி, உற்பத்தி செய்து வருவதாக திரு. ராஜ்நாத் சிங் கூறினார். "இன்றைய நவீன பாதுகாப்பின் யதார்த்தம் விமான தொழில்நுட்பம் மற்றும் ட்ரோன்களை அடிப்படையாகக் கொண்டது," என்று அவர் கூறினார். அதே நேரத்தில் இந்தியாவும் இந்த திசையில் வேகமாக முன்னேறி வருவதாகக் கூறினார். ட்ரோன்களின் வளர்ந்து வரும் பங்கை எடுத்துரைத்த அமைச்சர், பெரிய உபகரணங்கள் அடைய முடியாத பகுதிகளில் அவை இப்போது பயன்படுத்தப்படுகின்றன என்று கூறினார்.
நடந்து வரும் ரஷ்யா - உக்ரைன் மோதலை மேற்கோள் காட்டி, நவீன போரில் ட்ரோன்கள் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன என்றார். "இன்றைய சகாப்தத்தில், ட்ரோன்களின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்வதும், அவற்றை போர் தந்திரங்களில் திறம்பட இணைப்பதும் அவசியம்" என்று அவர் மேலும் கூறினார்.
இந்த நிகழ்வில் உத்தரப்பிரதேச முதலமைச்சர் திரு. யோகி ஆதித்யநாத், முப்படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் அனில் சவுகான், பாதுகாப்புச் செயலாளர் திரு. ராஜேஷ் குமார் சிங் மற்றும் செயலாளர் (பாதுகாப்பு உற்பத்தி) திரு. சஞ்சீவ் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleseDetailm.aspx?PRID=2162373
*****
(Release ID: 2162373)
AD/BR/SG
(Release ID: 2162419)
Visitor Counter : 2