பாதுகாப்பு அமைச்சகம்
நவீனகாலப் போர்களை எதிர்கொள்ள நவீன தொழில்நுட்பத்தில் நிபுணத்துவம் அவசியம் : பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங்
Posted On:
27 AUG 2025 1:45PM by PIB Chennai
நவீன காலப் போர்முறைகளை எதிர்கொள்ள நவீன தொழில்நுட்பங்களில் தேர்ச்சி அவசியம் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். மத்தியப் பிரதேச மாநிலம் டாக்டர் அம்பேத்கர் நகரில் உள்ள ராணுவப் போர்க் கல்லூரியில் நடைபெற்ற, போர்கள் குறித்த முப்படைகளின் முதல் கருத்தரங்கான ரான் சம்வாதில் இன்று (27.08.2025) அவர் உரை நிகழ்த்தினார்
புதிய கண்டுபிடிப்புகளுடன் எதிர்பாராத சவால்களுக்குத் தயாராக இருக்க வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். அதே நேரத்தில், தற்போதுள்ள தொழில்நுட்பங்களில் தேர்ச்சி பெற்று முன்னேற வேண்டும் என்றும் அவர் கூறினார். நவீன போர்கள் இனி நிலம், கடல், வான்பகுதியைத் தாண்டி விண்வெளி, இணைய தள அமைப்புகள் வரை விரிவடையும் என அவர் கூறினார். செயற்கைக்கோள் அமைப்புகள், செயற்கைக்கோள் எதிர்ப்பு ஆயுதங்கள், விண்வெளி கட்டளை மையங்கள் ஆகியவை புதிய கருவிகளாகும் என அவர் கூறினார். எதிர்காலப் போர்கள் வெறும் ஆயுதப் போர்களாக இருக்காது எனவும் அவை தொழில்நுட்பம், உளவுத்துறை, பொருளாதாரம் என அனைத்தும் ஒருங்கிணைந்ததாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இணையப் போர், செயற்கை நுண்ணறிவு, ஆளில்லா வான்வழி வாகனங்கள், செயற்கைக்கோள் அடிப்படையிலான கண்காணிப்பு ஆகியவை எதிர்காலப் போர்களில் முக்கிய அம்சங்களாக இருக்கும் என அவர் தெரிவித்தார். வீரர்களின் எண்ணிக்கையோ அல்லது ஆயுதக் குவியல்களின் அளவுமோ இனி போதாது என்று அவர் கூறினார். எந்தவொரு போரிலும் வெற்றி பெற நுண்ணறிவும், தரவு சார்ந்த தகவல்களும் முக்கியம் என்று அவர் தெரிவித்தார்.
உள்நாட்டு ஆயுத தயாரிப்புகளின் வெற்றிக்கு ஆபரேஷன் சிந்தூர் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்று அவர் கூறினார். பாதுகாப்பில் தற்சார்பை அடைவதற்கான பிரதமர் திரு நரேந்திர மோடி அரசின் உறுதிப்பாட்டை அவர் மீண்டும் எடுத்துரைத்தார். ஒரு காலத்தில் மிகப்பெரிய பாதுகாப்புத் தளவாட இறக்குமதியாளர்களில் ஒன்றாக இருந்த இந்தியா, இப்போது உலகின் நம்பகமான ஏற்றுமதியாளர் என்ற இடத்தைப் பிடித்து வருவதாக அவர் கூறினார். பிரதமர் திரு நரேந்திர மோடி அறிவித்த 'சுதர்சன் சக்ரா' திட்டம், அரசின் தற்காப்புக்கான உறுதிப்பாடு என்று திரு ராஜ்நாத் சிங் கூறினார்.
முப்படைகளின் தளபதி திரு அனில் சௌகான், கடற்படைத் தளபதி அட்மிரல் தினேஷ் கே திரிபாதி, விமானப் படைத் தளபதி ஏர் சீஃப் மார்ஷல் ஏபி சிங், ராணுவத் துணைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் புஷ்பேந்திர சிங், பாதுகாப்புத் துறை வல்லுநர்கள், அறிஞர்கள், சிந்தனையாளர்கள், கல்வியாளர்கள், தொழில்துறைத் தலைவர்கள், பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
***
(Release ID: 2161131)
AD/SMB/PLM/DL
(Release ID: 2161193)