மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
மேற்கு வங்கத்தில் மத்திய மீன்வள அமைச்சக திட்டங்களை விரைவாக செயல்படுத்த வேண்டும் - மத்திய மீன்வளத்துறை அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங்
Posted On:
02 AUG 2025 4:27PM by PIB Chennai
மீன்பிடித் திட்டங்களை செயல்படுத்துவதில் மேற்கு வங்கத்தின் இடைவெளிகளைக் குறைப்பதற்கான அவசியத்தை, குறிப்பாக தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியத்தில் மீன் விவசாயிகளின் பதிவு குறைவாக இருப்பதை, மத்திய மீன்வளத் துறை அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் என்கிற லாலன் சிங் எடுத்துரைத்துள்ளார்.
கொல்கத்தாவில் நடைபெற்ற மீன்வளத் துறையின் பிராந்திய ஆய்வுக் கூட்டத்தில், மத்திய அமைச்சர் பங்கேற்றார். மாநிலத்தின் 32 லட்சம் மீன் விவசாயிகளில் ஒரு பகுதியினர் மட்டுமே தற்போது பதிவு செய்யப்பட்டுள்ளனர் என்றும், இது பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத் திட்டம் போன்ற திட்டங்களின் கீழ் மத்திய அரசின் சலுகைகளைப் பெறுவதில் தடை ஏற்படுத்துகிறது என்றும் சுட்டிக்காட்டினார்.
மாநிலத்தில் உள்நாட்டு மீன்வளத்தின் பயன்படுத்தப்படாத திறனை அமைச்சர் குறிப்பிட்டதோடு, பாரம்பரிய நீர்நிலைகளை சிறப்பாகப் பயன்படுத்துதல், மீனவர்களுக்கான கூட்டுறவு கட்டமைப்புகளை உருவாக்குதல் வலுவான செயலாக்க சூழல் அமைப்பை உருவாக்குதல் ஆகியவற்றுக்கு அழைப்பு விடுத்தார். உள்ளூர் வேலைவாய்ப்பையும் மீன் ஏற்றுமதியை அதிகரிக்க மேற்கு வங்கத்தில் ஒரு மேம்பட்ட உலர் மீன் அமைப்பை நிறுவுவதற்கான திட்டத்தையும் அவர் எடுத்துரைத்தார். புதிய தொழில்நுட்பங்களை பின்பற்ற வலியுறுத்திய அவர், சிறந்த பயிற்சி முறைகளை உருவாக்குதல் நிலையான வளர்ச்சிக்கு அவசியம் என்றார். மீன் உற்பத்தியில் 104% வளர்ச்சியைக் கண்டுள்ள இந்தியா தற்போது உலகின் இரண்டாவது பெரிய மீன் உற்பத்தியாளராக இருப்பதாக அவர் கூறினார். கடந்த பத்து ஆண்டுகளில் உள்நாட்டு மீன் உற்பத்தி 142% அதிகரித்துள்ளதாகவும், மீன் ஏற்றுமதியில் இந்த துறையின் பங்கை மேலும் மேம்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் திரு ஜார்ஜ் குரியன், மத்திய மீன்வளத் துறை செயலாளர் டாக்டர் அபிலக்ஷ் லிக்கி ஆகியோரும் கூட்டத்தில் கலந்து கொண்டனர். மீன்வளம் தொடர்பான திட்டங்களுக்கு நிறுவன ஆதரவு, மத்திய-மாநில ஒருங்கிணைப்பு, திறமையான விநியோக வழிமுறைகளின் முக்கியத்துவத்தை இருவரும் வலியுறுத்தினர்.
மேற்கு வங்கம், பீகார், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் ஆகிய நான்கு கிழக்கு மாநிலங்களில் முதன்மை மீன்வளத் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து பிராந்திய ஆய்வுக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. மத்திய அரசின் மீன்வளத் துறை அதிகாரிகள், பங்கேற்கும் மாநில அரசுகளின் மூத்த அதிகாரிகள் விளக்கங்களை வழங்கினர்.
பிரதமரின் மீன் வள மேம்பாட்டுத் திட்டம், மீன்வளம் மற்றும் மீன்வளர்ப்பு உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியம், கிசான் கடன் அட்டை உள்ளிட்ட திட்ட செயல்பாடுகளை மதிப்பிடுவதும், பிராந்தியத்தில் மேம்பட்ட விளைவுகளுக்கான திட்டத்தை வகுப்பதும் இக்கூட்டத்தின் நோக்கம் ஆகும்.
***
(Release ID: 2151767)
AD/PLM/RJ
(Release ID: 2151839)