சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேசிய மனநலத் திட்டத்தின் மாவட்ட மனநலத் திட்டக் கூறு 767 மாவட்டங்களில் செயல்படுத்த அனுமதி

Posted On: 01 AUG 2025 2:27PM by PIB Chennai

தேசிய மனநலத் திட்டத்தை அரசு நாட்டில் செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் மாவட்ட மனநலத் திட்டம் 767 மாவட்டங்களில் செயல்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. இதற்காக தேசிய சுகாதார மிஷன் மூலம் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு ஆதரவு வழங்கப்படுகிறது. சமூக சுகாதார மையம் மற்றும் ஆரம்ப சுகாதார மைய அளவிலான மட்டங்களில் மாவட்ட மனநலத் திட்டத்தின் கீழ் கிடைக்கும் வசதிகளில், வெளிநோயாளிகள் சேவைகள், மதிப்பீடு, ஆலோசனை/உளவியல்-சமூக தலையீடுகள், கடுமையான மனநல கோளாறுகள் உள்ளவர்களுக்கு தொடர்ச்சியான பராமரிப்பு மற்றும் ஆதரவு, மருந்துகள், வெளிநோயாளிகள் சேவைகள், ஆம்புலன்ஸ் சேவைகள் போன்றவை அடங்கும். மேற்கண்ட சேவைகளுக்கு கூடுதலாக மாவட்ட அளவில் 10 படுக்கைகள் கொண்ட உள்நோயாளிகள் வசதியும் உள்ளது.

தேசிய மனநலத் திட்டத்தின் மூன்றாம் நிலை பராமரிப்பு கூறுகளின் கீழ், மனநல சிறப்புகளில் முதுகலை துறைகளில் மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்கவும், மூன்றாம் நிலை சிகிச்சை வசதிகளை வழங்கவும் 25 சிறப்பு மையங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. மேலும், மனநல சிறப்பு படிப்புகளில் 47 முதுகலை துறைகளை வலுப்படுத்த 19 அரசு மருத்துவக் கல்லூரிகள் / நிறுவனங்களுக்கும் அரசாங்கம் ஆதரவளித்துள்ளது.

இந்திய மறுவாழ்வு கவுன்சிலிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின்படி, தற்போது, 69 நிறுவனங்கள் / பல்கலைக்கழகங்கள் எம்.பில்., சிறப்பு டிப்ளமா , சைக்காலஜி டாக்டரேட் போன்ற மருத்துவ உளவியலில் படிப்புகளை நடத்த அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளன. மற்றும் 9 நிறுவனங்கள்/பல்கலைக்கழகங்கள், எம்.பில். (மருத்துவ உளவியல்) போன்ற மறுவாழ்வு உளவியலில் படிப்புகளை நடத்துவதற்கு இந்திய மறுவாழ்வு கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. கவுன்சில் 2024-25 கல்வி அமர்விலிருந்து மருத்துவ உளவியலில் பி.எஸ்சி. (மருத்துவ உளவியல்) மற்றும் எம்.ஏ. (மருத்துவ உளவியல்) உள்ளிட்ட இரண்டு பாடத்திட்டங்களைத் தொடங்கியுள்ளது.

டிஜிட்டல் அகாடமிகள் மூலம் பல்வேறு வகை பொது சுகாதார மருத்துவ மற்றும் துணை மருத்துவ நிபுணர்களுக்கு ஆன்லைன் பயிற்சி படிப்புகளை வழங்குவதன் மூலம், நாட்டின் பின்தங்கிய பகுதிகளில் மனநல சேவைகளை வழங்குவதற்கான மனிதவளத்தை அரசு அதிகரித்து வருகிறது.

பள்ளிகள், பணியிடங்கள் போன்ற இடங்களில் மனநோய் பற்றிய தகவல், சமூக ஈடுபாட்டுடன் கூடிய விழிப்புணர்வு ஆகியவற்றை உருவாக்கும் நடவடிக்கைகள், ஆகியவற்றையும் தேசிய மனநலத் திட்டம் ஒருங்கிணைத்து செயல்படுத்துகிறது.

மாவட்ட மனநலத் திட்டம், தேசிய மனநலத் திட்டத்தின் கீழ், நாட்டின் 767 மாவட்டங்களில் செயல்படுத்தப்படுகிறது. பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் ஆலோசனை, பணியிட மன அழுத்த மேலாண்மை, வாழ்க்கைத் திறன் பயிற்சி, தற்கொலை தடுப்பு சேவைகள் மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் ஆகியவற்றின் முக்கிய கூறுகளைப் பயன்படுத்தி மனநோயைக் கண்டறிந்து, நிர்வகித்து, சிகிச்சை அளிக்கப்படுகிறது.

மேற்கூறியவற்றைத் தவிர, நாட்டில் தரமான மனநல ஆலோசனை மற்றும் பராமரிப்பு சேவைகளுக்கான அணுகலை மேலும் மேம்படுத்துவதற்காக, அக்டோபர் 10, 2022 அன்று அரசாங்கம் "தேசிய தொலைதூர மனநலத் திட்டத்தை" அறிமுகப்படுத்தியுள்ளது. 17.07.2025 நிலவரப்படி, 36 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் 53 தொலைதூர மனநலப் பிரிவுகளை அமைத்து, தொலைதூர மனநலச் சேவைகளைத் தொடங்கியுள்ளன. ஹெல்ப்லைன் எண்ணில் 23,82,000க்கும் மேற்பட்ட அழைப்புகள் கையாளப்பட்டுள்ளன.

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திரு பிரதாப்ராவ் ஜாதவ் இன்று மக்களவையில் எழுத்துப்பூர்வ பதிலில் இதனைத் தெரிவித்தார்.

---- 

(Release ID: 2151235)

AD/SM/KR


(Release ID: 2151381)
Read this release in: English , Urdu , Hindi , Bengali