அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் புதுமைத் திட்டம்
Posted On:
30 JUL 2025 3:36PM by PIB Chennai
மத்திய அமைச்சரவை ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் புதுமை திட்டத்திற்கு 2025 ஜூலை 1 அன்று ஒப்புதல் அளித்தது.
இந்தத் திட்டத்திற்கு 6 ஆண்டுகளில் மொத்தம் ரூ.1 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, 2025–26 நிதியாண்டில் ரூ.20,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் புதுமை திட்டத்தின் கீழ் உத்திசார் முக்கியத்துவம் வாய்ந்த தொழில்நுட்பத் துறைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவற்றில் எரிசக்தி பாதுகாப்பு, காலநிலை நடவடிக்கை மற்றும் குவாண்டம் கம்ப்யூட்டிங், செயற்கை நுண்ணறிவு, உயிரி தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம் போன்ற முக்கியமான தொழில்நுட்பங்கள் அடங்கும். இந்தத் திட்டம் அதிகாரமளிக்கப்பட்ட செயலாளர்கள் குழுவின் ஒப்புதலின் அடிப்படையில் கூடுதல் துறைகளைச் சேர்க்கத் தேவையான நெகிழ்வுத்தன்மையுடன், உத்திசார் மற்றும் பொருளாதார பாதுகாப்பிற்கு முக்கியமான துறைகளை உள்ளடக்கியது. இந்தத் திட்டத்தின் கீழ் நிதியுதவியின் தன்மையில் நீண்ட கால கடன்கள் (குறைந்த அல்லது வட்டி இல்லாதது), பங்கு நிதியுதவி மற்றும் விரிவான தொழில்நுட்ப நிதிக்கான பங்களிப்புகள் ஆகியவை அடங்கும். மானிய நிதியுதவி மற்றும் குறுகிய கால கடன்கள் திட்டத்தின் கீழ் கருதப்படவில்லை.
அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளையின் கீழ் உள்ள சிறப்பு நோக்க நிதி முதல் நிலையில் நிதி பாதுகாவலராக செயல்படும். நிதி மேலாளர்கள், மாற்று முதலீட்டு நிதிகள், மேம்பாட்டு நிதி நிறுவனங்கள், வங்கிசாரா நிதி நிறுவனங்கள் மற்றும் ஐஐடி ஆராய்ச்சி பூங்காக்கள் போன்ற கவனம் செலுத்தப்பட்ட ஆராய்ச்சி நிறுவனங்கள் உள்ளிட்டவற்றால் இரண்டாம் நிலை செயல்படுத்துதல் மேற்கொள்ளப்படும். இவை அதிகாரமளிக்கப்பட்ட செயலாளர்கள் குழுவின் ஒப்புதலுடன் செயல்படும்.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இந்தத் திட்டத்தை செயல்படுத்தும் அமைப்பாக செயல்படும். அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளையின் நிர்வாகக் குழு மேற்பார்வை மற்றும் நிர்வாகத்தை மேற்கொள்ளும். அதே நேரத்தில் அதிகாரமளிக்கப்பட்ட செயலாளர்கள் குழு, நிர்வாகக் குழு மற்றும் முதலீட்டுக் குழுக்கள் துறை ஒப்புதல்கள், நிதி மேலாளர் தேர்வு, திட்ட மதிப்பீடு மற்றும் ஒட்டுமொத்த செயல்திறன் மதிப்பாய்வுக்கு பொறுப்பேற்கும்.
இந்தத் தகவலை அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், புவி அறிவியல், பிரதமர் அலுவலகம், அணுசக்தித் துறை மற்றும் விண்வெளித் துறைக்கான மத்திய இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு) டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.
----
(Release ID: 2150133)
AD/SM/KR
(Release ID: 2150581)