பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

"ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் வெற்றியில் தடையற்ற தளவாட மேலாண்மை ஒரு தீர்க்கமான காரணியாக இருந்தது: பாதுகாப்பு துறை அமைச்சர்

"போராக இருந்தாலும் சரி, பேரழிவாக இருந்தாலும் சரி, உலகளாவிய தொற்றுநோயாக இருந்தாலும் சரி, அதன் தளவாடத் திறனை வலுவாக வைத்திருக்கும் நாடு மிகவும் நிலையானது, பாதுகாப்பானது மற்றும் திறமையானது"

Posted On: 27 JUL 2025 2:32PM by PIB Chennai

"ஆயுதப் படைகளை அணிதிரட்டுவது முதல் சரியான நேரத்தில் மற்றும் பொருத்தமான இடத்தில் உபகரணங்களை வழங்குவது வரை எங்கள் படைகளின் தடையற்ற தளவாட மேலாண்மை - ஆபரேஷன் சிந்தூரின் வெற்றியில் ஒரு தீர்க்கமான காரணியாக இருந்தது," என்று பாதுகாப்பு துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் கூறினார். ஜூலை 27, 2025 அன்று வதோதராவைச் சேர்ந்த கதி சக்தி விஸ்வவித்யாலயா (ஜிஎஸ்வி) பட்டமளிப்பு விழாவில் மெய்நிகர் வாயிலாக கலந்து கொண்டு அவர் ஆற்றிய உரையில் இவ்வாறு கூறினார். இன்றைய சகாப்தத்தில், போர்கள் துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களால் மட்டுமல்ல, அவற்றின் பொருத்தமான தருண விநியோகத்தாலும் வெல்லப்படுகின்றன என்றும், ஆபரேஷன் சிந்தூர் சிறந்த தளவாட மேலாண்மைக்கு ஒரு சிறப்பான எடுத்துக்காட்டு என்றும் அவர் குறிப்பிட்டார்.

பொருட்களை வினியோகிப்பதற்கான ஒரு செயல்முறையாக மட்டுமல்லாமல், உத்திசார்  முக்கியத்துவம் வாய்ந்த கண்ணோட்டம் வாயிலாக தளவாட மேலாண்மையைப் பார்க்க வேண்டும் என்று பாதுகாப்பு துறை அமைச்சர் வலியுறுத்தினார். "எல்லையில் போராடும் வீரர்களாக இருந்தாலும் சரி, பேரிடர் மேலாண்மையில் ஈடுபட்டுள்ள பணியாளர்களாக இருந்தாலும் சரி, ஒருங்கிணைப்பு அல்லது வளங்களை முறையாக நிர்வகிக்காமல் இருந்தாலும் சரி, வலுவான நோக்கங்கள் கூட பலவீனமடைகின்றன. தளவாடங்கள் என்பது குழப்பத்தைக் கட்டுப்படுத்தும் வலு கொண்டவை. ஆயுதங்களால் மட்டுமல்ல, சரியான நேரத்தில் வழங்கப்படும் ஆதாரவள மேலாண்மையாலும் வலிமை அளவிடப்படுகிறது. போர், பேரிடர் அல்லது உலகளாவிய தொற்றுநோய் என எதுவாக இருந்தாலும், அதன் தளவாடத் திறனை வலுவாக வைத்திருக்கும் நாடு மிகவும் நிலையானது, பாதுகாப்பானது மற்றும் திறமையானது," என்று அவர் கூறினார், அதே நேரத்தில் 21 ஆம் நூற்றாண்டில் இந்தியாவின் விருப்பங்களுக்கு உத்வேகம் அளிப்பதில் ஜிஎஸ்வி போன்ற நிறுவனங்கள் வகிக்கும் முக்கிய பங்கை அடிக்கோடிட்டுக் காட்டினார்.

நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தில் தளவாடங்களின் முக்கியத்துவத்தை திரு ராஜ்நாத் சிங் எடுத்துரைத்தார். இது உற்பத்திக்கு முந்தைய நிலையிலிருந்து நுகர்வு வரை ஒவ்வொரு படியையும் இணைக்கும் முக்கிய தூண்களில் ஒன்று என அவர் குறிப்பிட்டார். இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தளவாடங்களின் பங்களிப்பு நேரடியாகவும் மறைமுகமாகவும் முக்கியமானது என்று அவர் கூறினார். கோவிட் காலத்தில் லட்சக்கணக்கான தடுப்பூசிகள், ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் மற்றும் மருத்துவக் குழுக்கள் தேவைப்படும் நேரத்தில் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குச் சென்றடைந்தபோது அது வகித்த முக்கிய பங்கையும் அடிக்கோடிட்டுக் காட்டினார்.

கடந்த 11 ஆண்டுகளில் இந்தியா முன்னெப்போதும் இல்லாத வகையில் உள்கட்டமைப்பு வளர்ச்சியைக் கண்டுள்ளதாகவும், முழுமையான மற்றும் ஒருங்கிணைந்த அணுகுமுறையுடன் மேற்கொள்ளப்படும் இந்த மாற்றத்திற்கான அடித்தளம் கொள்கை சீர்திருத்தங்கள் மற்றும் தொலைநோக்குத் திட்டங்கள் மூலம் அமைக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். இதன் தாக்கம் வெறுமனே கட்டமைப்பு இணைப்பிற்கு மட்டுமல்ல, பொருளாதார உற்பத்தித்திறனை அதிகரித்துள்ளது, தளவாடச் செலவைக் குறைத்துள்ளது மற்றும் சேவை வழங்கலை மேம்படுத்தியுள்ளது என்றும் அவர் மேலும் கூறினார்.

“பிரதமர் விரைவுசக்தி தேசிய சிறப்புத் திட்டத்தின் கீழ், ரயில்வே, சாலைகள், துறைமுகங்கள், நீர்வழிகள், விமான நிலையங்கள், பொது போக்குவரத்து மற்றும் தளவாட உள்கட்டமைப்பு போன்ற ஏழு சக்திவாய்ந்த தூண்கள் இந்தியாவின் பொருளாதாரத்திற்கு வலுவான அடித்தளத்தை அமைத்து வருகின்றன. பிரதமர் விரைவுசக்தி என்பது வெறும் திட்டம் மட்டுமல்ல, அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் தரவு அடிப்படையிலான திட்டமிடல் மூலம் உள்கட்டமைப்பை எதிர்காலத்திற்கு ஏற்றதாக மாற்றும் ஒரு தொலைநோக்குப் பார்வையாகும்,” என்று திரு ராஜ்நாத் சிங் கூறினார்.

தேசிய தளவாடக் கொள்கை குறித்து அமைச்சர் கூறுகையில், இந்த முயற்சி தளவாடச் செலவைக் குறைப்பது மட்டுமல்லாமல் தரவு சார்ந்து முடிவெடுப்பதை ஊக்குவிக்கும் ஒருங்கிணைந்த, திறமையான மற்றும் செலவு குறைந்த தளவாட வலையமைப்பை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றார். "தற்போதைய 13-14% தளவாடச் செலவை வளர்ந்த நாடுகளின் நிலைக்குக் குறைப்பதே இந்தக் கொள்கையின் நோக்கமாகும். இது உள்நாட்டு மற்றும் உலகளாவிய சந்தைகளில் இந்தியப் பொருட்களின் போட்டித்தன்மையை அதிகரிக்கும். தளவாடச் செலவைக் குறைப்பது அனைத்துத் துறைகளிலும் செயல்திறனை அதிகரிக்கும் மற்றும் மதிப்பு கூட்டல் மற்றும் நிறுவன வளர்ச்சியை அதிகரிக்கும்," என்று அவர் மேலும் கூறினார்.

ஜிஎஸ்வி ஆற்றும் முக்கிய பங்கு குறித்து பேசிய அமைச்சர், இளைஞர்கள் நாட்டிற்கு 'சக்தி' வழங்கும் 'வேகம்' பாராட்டத்தக்கது என்று கூறினார். "தளவாடங்களைப் பொறுத்தவரை நாட்டின் மிகவும் மதிப்புமிக்க ஆய்வு மையங்களில் ஒன்றான ஜிஎஸ்வி, ஒரு கல்வி நிறுவனம் மட்டுமல்ல, அது ஒரு சிந்தனை, ஒரு நோக்கம் என்றார் அவர். இந்தியாவை வேகமாகவும், ஒழுங்கமைக்கப்பட்டதாகவும், ஒருங்கிணைந்ததாகவும் முன்னோக்கி எடுத்துச் செல்லும் தேசிய விருப்பத்திற்கு இது உறுதியான வடிவத்தை அளிக்கிறது," என்று அவர் கூறினார்.

மாணவர்கள் பிரச்சனைகளைத் தீர்ப்பவர்களாக மாற வேண்டும் என்றும், வேலை தேடுவதில் மட்டும் தங்கள் அறிவை மட்டுப்படுத்திக்கொள்ளக்கூடாது என்றும் திரு ராஜ்நாத் சிங் அறிவுறுத்தினார். “2047 ஆம் ஆண்டுக்குள் இந்தியா வளர்ச்சியடைந்த பாரதமாக மாற, நமக்குத் தேவையான விஷயங்களில் ஒன்று அதி சிறந்த தளவாட அமைப்புகள் என்றும் பொருட்கள், சேவைகள் மற்றும் பொதுமக்கள் நாட்டில் வேகமாகவும் எளிதாகவும் நகரும் வரை எந்த நாடும் வளர்ச்சியடைய முடியாது,” என்று அவர் கூறினார்.

ரயில்வே அமைச்சகத்தின் கீழ் மத்திய பல்கலைக்கழகமாக 2022 இல் நிறுவப்பட்ட ஜிஎஸ்வி, தளவாட மற்றும் போக்குவரத்துத் துறைகளில் உலகத்தரம் வாய்ந்த திறமைகளை உருவாக்குவதற்கு அர்ப்பணிப்புடன் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ரயில்வே, தகவல் மற்றும் ஒலிபரப்பு மற்றும் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளுக்கான மத்திய அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் அதன் முதல் வேந்தராக உள்ளார். வதோதரா நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஹேமங் ஜோஷி மற்றும் துணைவேந்தர் பேராசிரியர் (டாக்டர்) மனோஜ் சவுத்ரி ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

***

(Release ID: 2149047)

AD/SM/RJ

 


(Release ID: 2149123)
Read this release in: English , Urdu , Hindi , Marathi